அன்பெனும் மாமழையில்!
சென்ற வாரம் ஒரு திருமண நிகழ்வு. வழக்கம்போல் பெற்றோருடன் சென்றிருந்தேன். வாசலில் நுழையும்போது மணமகனும் மணமகளும் கலந்துகொள்ளும் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழையும்போது யாரும் எங்களை கவனிக்கவில்லை. எல்லோரும் பாலும்பழமும் கொடுத்தல் பச்சப்பிடி சுற்றுதல் என பிசியாக இருந்தார்கள்.
கடைசியில் அமைதியாக நின்று கொண்டு நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கும்போது ‘என்ன இங்கே…’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். நான் அடக்கமாக தலை குனிந்திருந்தேன் என நினைக்க வேண்டாம். அப்படி நிமிர்ந்து பார்த்தால்தான் பார்க்க முடியும் எனும் அளவுக்கு உயரமான ஒருவர் என்னை நலம் விசாரிக்க ஒரு நிமிடம் என்ன ஏது என்று புரியவில்லை.
காரணம் காலச்சக்கரம் 30 வருடங்களுக்கு பின்னால் தாறுமாறாய் ஓடியது. ஐந்தாம் கியரில் சென்று கொண்டிருக்கும் கார் திடீரென எதிர்பாராத விதமாய் முதல் கியருக்குச் சென்றால் தடுமாற்றம் இருக்காதா என்ன?
ஏவிசி கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது உடன் படித்த நண்பர் அவர். நான் உட்பட 5 மாணவிகள், 15 மாணவர்கள் என மொத்தம் 20 பேர்தான் எங்கள் வகுப்பில், காலைக் கல்லூரியில். கல்லூரி நேரம் காலை 7 மணி முதல் மதியம் 2 வரை.
திருமண நிகழ்வில் என்னை நலன் விசாரித்தவர் மாலைக் கல்லூரியில் நாங்கள் படித்த அதே எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்.
காலைக்கல்லூரி, மாலைக்கல்லூரி என்ற பாகுபாடின்றி முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த நாங்கள் அனைவருமே நண்பர்கள்தான்.
அப்போதுதான் என் பெற்றோருக்கு பணிநிமித்தமாக சென்னை மாற்றல் ஆகி இருந்தது. என் சகோதரிக்கு சென்னையில் படிப்பு மற்றும் பணி. எனக்கும் என் தம்பிக்கும் மயிலாடுதுறையில் வீடெடுத்து கொடுத்திருந்தார்கள் என் பெற்றோர். நான் முதுகலை. தம்பி இளம்கலை. இரண்டு வருடம் தம்பியுடன் தனிக்குடித்தனம். ஒவ்வொரு சனி, ஞாயிறும் சென்னையில் நாங்கள் அல்லது மயிலாடுதுறையில் என் பெற்றோர். தனியாக இருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் வளர்த்தார்கள். தன்னம்பிக்கையுடன் வளர்ந்தோம்.
உடன் படித்த மற்ற மாணவர்கள் கல்லூரி பஸ்ஸில் செல்ல, நான் மட்டும் தினமும் கல்லூரிக்கு சைக்கிளில்தான் செல்வேன். மழை, வெயில், புயல் என எல்லா நாட்களும். பயமறியா காலங்கள். கல்லூரிக்குச் செல்லவும் திரும்பி வரவும் மொத்தம் பத்து கிலோமீட்டர். உடலும் மனமும் வலுபெற்ற காலகட்டம்.
படித்து முடித்து ஒவ்வொருவரும் ஒரு பாதையில் செல்ல, நான் சென்னையில் தனி நிறுவனம் தொடங்கினேன்.
சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் என்றிருந்தாலும் ஓரிருவரைத் தவிர யாருமே நட்பு வட்டத்தில் இல்லை. அந்த ஓரிருவரும் ஓர் எல்லைக்கு அப்பால்தான். அதற்கு என் அமைதியான குணமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஃபேஸ்புக்கில் என் பதிவுகளுக்கு லைக் செய்துவிட்டு அமைதியாக பாராட்டிச் செல்வார்கள்.
அதன் பிறகு இப்போதுதான் என்னுடன் படித்தவர்களில் ஒருவரை இந்த குடும்ப நிகழ்ச்சியில்தான் நேரில் சந்திக்கிறேன்.
பெண் வீட்டு உறவா, பிள்ளை வீட்டு உறவா என்பது போன்ற பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு திருமண நிகழ்ச்சியில் ஐக்கியமானோம்.
அவரது மனைவி, தோளுக்கு மேல் வளர்ந்த மகள் என குடும்பமாக சந்திக்கும் வாய்ப்பு. கல்லூரி நட்பு என்பதைத் தாண்டி உறவினர் அந்தஸ்த்தைப் பெற்றவருடன் என் பெற்றோர் சகிதம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
ஒரே கல்லூரி. ஒரே வகுப்பில் படித்தாலும் கல்லூரி நாட்களில் சக மாணவர்கள் அடங்கிய ஒரு புகைப்படம் கூட குழுவாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
பள்ளிகளில் கட்டாயமாக் குரூப் போட்டோ எடுப்பார்கள் என்பதால் எல்லா வருடப் புகைப்படங்களும் இருக்கின்றன. ஆனால் கல்லூரி நாட்களில் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது.
அவர் எங்கள் கல்லூரி வாட்ஸ் அப் குழுவில் என்னை இணைக்க, அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஹாய் சொல்லச் சொல்ல காலச்சக்கரம் 30 வருடங்களுக்குப் பின்னேயே நின்று கொண்டிருந்தது.
ஒவ்வொருவரும் அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா என வெவ்வேறு நாடுகளில்.
அந்தக் குழுவில் ஒருவர் ‘So much of talent talks now. But you are a silent student at college days’ என்று சொல்ல எனக்கு ஒன்றும் அவரது கருத்து ஆச்சர்யத்தை தரவில்லை. காரணம் அன்றல்ல, இன்றல்ல எப்போதுமே நான் குடத்துக்குள் விளக்குதான்.
’Not only in college Days, Now also I am Calm and Silent…’ என்று பதில் கொடுத்தேன்.
அவர் அப்படிக் கேட்டதில் ஆச்சர்யமில்லை. காரணம் ஒரு பெண்ணால் அத்தனை அமைதியாக இருக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு அமைதியோ அமைதி. பேராசிரியர்கள் தூரத்தில் வந்தாலே கையைக் கட்டிக்கொண்டு வணக்கம் சொல்லும் அளவுக்கு மரியாதை. பயம். பேராசிரியர்களும் இளம் வயதினர் என்பதால் அவர்கள் தலையை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டார்கள். பதில் வணக்கமாக தலையை மட்டும் ஆட்டி சிரித்தபடி செல்வார்கள்.
அப்போது ‘பீகாக்’ என்ற எங்கள் கல்லூரி பத்திரிகையில் ‘பெண் குழந்தைகள் ஆண்டு’ என்ற தலைப்பில் பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து ஐந்து பக்கங்கள் கட்டுரை எழுத அப்போதுதான் ‘இத்தனை அமைதியான பெண் எப்படி இவ்வளவு வீராவேசமான கருத்துக்களை எழுத முடிந்தது’ என சக மாணவ மாணவிகள் உட்பட பேராசிரியர்களும் வியந்தார்கள்.
அமைதியாக இருந்தால் திறமைசாலியாக இருக்க முடியாதா? திறமைசாலிகளாக இருப்பவர்கள் அனைவரும் ஆரவாரத்துடன்தான் இருப்பார்களா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.
என்னதான் நான் ஐடி நிறுவனம் நடத்தினாலும், உலகம் முழுவதும் சுற்றி இருந்தாலும், செல்லும் இடங்களில் எல்லாம் என் திறமையின்பால் எனக்கு மரியாதை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும் அடிப்படையில் வீடு எனும் கூட்டில் அன்புக்கும் பாசத்துக்கும் அடங்கிய வீடடங்கிய அமைதியான ஒரு ஜீவன்.
எனக்குள் ஒரே ஒரு குழப்பம் மட்டும். உடன் படித்தவராக இருந்தாலும் ‘நீ என அழைப்பதா? நீங்கள் என சொல்வதா?’
‘நீங்கள்’ என்பது செயற்கையாக இருந்ததால் ‘நீ’ என்பதே பொருத்தமாக உணர்ந்தேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 1, 2022 | செவ்வாய்