Dress Code!
அடாது பெய்யும் மாமழையிலும் அந்த காய்கறி அங்காடியில் அந்தப் பெண் நின்றிருந்தாள். மழையில் நனைந்துகொண்டு, ஒப்புக்கு பிளாஸ்டிக் பை ஒன்றை தலைக்கு மறைத்துக்கொண்டு. கார் அந்தப் பெண்ணைத் தாண்டிச் செல்லும்போது வழக்கம் போல் தலையை சாய்த்து சிரித்தாள். அவள் உடையை அப்போதுதான் கவனித்தேன். வழக்கமான மேலாடை கிழிந்த சுடிதார்.
அந்த அங்காடி முன்பு மக்கள் கூட்டம் இருக்கும்போது அவளை காணலாம். கோணலாக காலை மடக்கிக் கொண்டு வருவோர் போவோரிடம் கையேந்தி நிற்பாள்.
வழக்கமாக அவள் மீது வரும் கரிசனம் இன்றில்லை. மாறாக கோபம் கோபமாய் வந்தது. காரணம் இல்லாமல் இல்லை.
எனக்கு ஒரு வழக்கம். புதிதாய் ஒரு டிரெஸ் எடுத்தால் என்னிடம் இருக்கும் ஒரு செட் டிரெஸ்ஸை யாருக்கேனும் கொடுப்பது. அதன்படி இந்த தீபாவளிக்கு ஒன்றுக்கு இரண்டாய் என்னிடம் இருக்கும் சுடிதார்களில் நல்லதாய் இரண்டு செட்டை எடுத்து வந்து, இனிப்பு காரத்துடன் அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன்.
ஆனாலும் அவள் நல்ல சுடிதார் அணிந்து வராமல் அதே கிழிந்த உடையை அணிந்துகொண்டு நின்றிருப்பதைக் கண்டால் எனக்குக் கோபம் வராதா?
காரை நிறுத்துவிட்டு பழங்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது வழக்கம்போல் என்னிடமும் கையேந்தினாள்.
‘ஏன் திரும்பவும் கிழிந்த டிரஸ்?’ என்றேன்.
’நல்லதாய் டிரெஸ் போட்டு வந்தால் எப்படி காசு போடுவார்கள். அதையெல்லாம் எப்பவாவது பிச்சை எடுக்க வராதபோது போடுவோம்…’
அவள் சொல்லிக்கொண்டே இருக்க நான் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.
‘அக்கா, இதுதான் எங்கள் டிரெஸ் கோடுக்கா… தப்பா எடுத்துக்காதீங்க!’ என்று வேகமாக கத்தினாள்.
‘டிரஸ் கோட்’ என்ற வார்த்தையில் வறுமையின் அவலம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 2, 2022 | புதன் கிழமை