#கதை: மூக்கின் மீதே ஒரு கண்!

மூக்கின் மீதே ஒரு கண்!
(கதை by காம்கேர் கே. புவனேஸ்வரி)

இன்றுடனாவது பிரச்சனை முடிந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என நினைத்துக் கொண்டார் சதாசிவம். மனைவி கோமதிக்கும் இதே சிந்தனைதான். டிவியில் ஏதோ ஒரு டாக் ஷோ ஓடிக்கொண்டிருக்க கவனம் முழுவதும் திறந்திருந்த வாசல் கதவின் மீதே.

உட்கார்ந்திருக்கும் ஹாலின் மூலையில் ஒரு சிறு மெழுகுவர்த்தி நின்று நிதானமாக எரிந்து கொண்டிருக்க, சமையல் அறையில் இருந்து ஊதுவத்தியும், சுவாமி ஷெல்பில் நல்லெண்ணெய் விளக்கும்.

சாதாரண நாட்களில் அம்மு சொல்லிக்கொண்டே இருப்பாள், ‘அப்பா சுவாமிக்கு ஊதுவத்தி காண்பித்த பிறகு அணைத்துவிடு. எல்லா கதவையும் மூடி வைத்துக்கொண்டு புகையை சுவாசித்துக்கொண்டே இருந்தால் நுரையீரல் போய்விடும்…’

ஆனால் அவளே ஊதுவத்தியை அணைச்சுடாதே. தானாகவே அணையும்வரை இருக்கட்டும் என சொல்லிவிட்டுச் சென்றாள்.அத்தனை பாடாய் படுத்துகிறது பிரச்சனை.

நரேன் கூட போன் செய்து ’இப்போ எப்படி இருக்கு?’ என்று இரண்டு மணிக்கொருதரம் கேட்டபடி இருக்கிறான்.

என்ன பிரச்சனை என தெரிந்தால்தானே? யார் யாருக்கோ என்னென்னவோ பிரச்சனை எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை என நினைத்தபடி வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிந்துகொண்டு அமர்ந்திருதனர்.

அம்முவும், நரேனும் அப்படி ஒன்றும் கொடுமைக்கார குழந்தைகள் இல்லை. அப்பா அம்மாவிடம் பாசமாக இருப்பவர்கள்தான். ‘ஹாய் அம்மா’, ‘ஹலோ அப்பா’ என ஓடி வந்து கட்டிக்கொண்டு பாசத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடிப்படையில் பாசமானவர்கள். அவர்களின் துணையும் குடும்பமும்கூட அவர்களிடம் மரியாதையாகவே இருப்பார்கள்.

‘ஏன் தனியாக இருக்கீங்க… பசங்க கூட இருக்கலாம் தானே’ என்று வாய்விட்டே பலமுறை கேட்டிருக்கிறார் சாம்பசிவம், பெண் வீட்டு சம்மந்தி. அவர் அவருடைய பிள்ளைகள் வீட்டில் மாறி மாறி தங்கிக்கொள்வார்.

தங்கள் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோதே பிள்ளைகள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்ன தெரியுமா? கைகால் முடிந்த வரை தனியாக அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கிக்கொள்ளச் சொல்வது. நாள் கிழமை பண்டிகை என்றால் அவர்களை வரச் செய்தோ அல்லது தாங்கள் சென்றோ பார்ப்பது என தீர்மானம் செய்திருந்தார்கள்.

அதற்குக் காரணம் அவர்களுக்கு பென்ஷன் வருகிறது, யாரையும் நம்பியும் அவர்கள் இல்லை என்ற விட்டேத்தியான மனோபாவம் கிடையாது. தாங்கள் சுதந்திரமாக தனிக்குடித்தனம் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கும் கிடையாது. அதற்கு வேறொரு நல்ல காரணம் இருந்தது.

எப்படி இருந்தாலும் பிள்ளைகளுடன் இருந்தால் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டும். கட்டாயமில்லைதான். ஆனாலும் அனைவரும் வேலைக்கும் பள்ளிக்கும் சென்ற பிறகு எத்தனை மணி நேரம் வீட்டில் கிடக்கும் வேலைகளை அப்படியே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு, இரவு உணவுக்கும் தயார் செய்து என காலத்துக்கும் செய்துவந்த வேலைகளையே செய்துகொண்டிருக்க வேண்டும். தங்களுக்குப் பிடித்தபடி தூங்கவும், டிவி பார்க்கவும், பேசவும் கூட நேரம் இல்லாமல் போகும். ஆரம்பத்தில் பிள்ளைகளுக்காகவும் மருமகன், மருமகளுக்காகவும், பேரன் பேத்திகளுக்காகவும் என ஆரம்பித்து பின்னர் அதுவே கட்டாயச் சுமையாகிவிடும். ஒரு நாள் செய்யவில்லை என்றாலும் கோபம் வரும். ‘நீ செய்வேன்னு நினைச்சு இன்னிக்கு அந்த நேரத்துக்கு வேறொரு ப்ளான் இருந்தது’ என சொல்ல வேண்டிவந்தால் அந்த வார்த்தையை கேட்டுக்கொண்டு மனம் புழுங்கி வாழ வேண்டி இருக்கும்.

இதுபோன்ற காரணங்களினால் புத்திசாலிகளாக வளர்த்த அவர்களின் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து வீட்டுக்கு அருகிலேயே சகல வசதிகளுடன் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தங்கள் அப்பா அம்மாவை குடி வைத்தார்கள்.

அவர்கள் குடும்ப டாக்டர் கூட பெருமையாக, ‘பெரியவர்கள் இதுபோல தங்களால் முடிந்தவரை தங்கள் பணிகளை தாங்களே பார்த்துக்கொண்டு நடமாடிக்கொண்டு வேலைகளை செய்துவந்தால் அவர்களுக்கு வரும் நோய்கள் கூட ஓரடி தள்ளி நிற்கும். நீங்களே கவனித்துப் பாருங்கள் வேலையே செய்யாமல் உட்கார்ந்துகொண்டு இருப்பவர்களைவிட ஓடியாடி வேலைசெய்துகொண்டிருக்கும் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்…’ என சொன்னபோது பிள்ளைகள் இருவருக்கும் பரம சந்தோஷம். கோமதிக்கும் சதாசிவத்துக்கும்தான். இருக்காதா பின்னே?

இதோ இரண்டு நாட்களாய் அந்தப் பிரச்சனை பாடாய் படுத்துகிறது. ஆம். ஆரம்பத்தில் லேசாக வந்த அந்த நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக குமட்டும் அளவுக்கு பெருகிப் பரவியது.

அதுகூட ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏன் இப்போதுகூட அவர்களால் அதை உணர முடியவில்லை.

அம்மு அன்று மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்குச் செல்லும்போது வந்திருந்தாள். ‘என்னப்பா இது ஒரே ஸ்மெல்?’ என கேட்டபடி சமையல் அறைக்குச் சென்றவள் நாற்றம் தாங்க முடியாமல் கர்சீஃப்பால் மூக்கைக் கட்டிக்கொண்டு நோட்டம் விட்டாள்.

சமையல் அறையில் இருந்து எலியோ பல்லியோ இறந்து கிடந்தால் ஒரு நாற்றம் வருமே அதுபோன்றதொரு நாற்றம்.

சமையல் அறையையே புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றாள். நாற்றம் போவதற்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு, பெரிய வெங்காயத்தை நறுக்கி ஆங்காங்கே வைத்துவிட்டுச் சென்றாள்.

இரவு நரேனும் வந்திருந்தான். அவனும் மூக்கை மூடிக்கொண்டு எல்லா இடத்தையும் அலசினான். அவனுக்கும் எதுவுமே தெரியவில்லை.

சிறிது நேரத்தில் பேரன் பேத்திகளும் வந்தார்கள். ‘என்ன தாத்தா பாட்டி உங்களுக்கு நாற்றமே தெரியலையா?’ என்று கேட்டபடி அவர்கள் பங்கிற்கு அவர்களும் சமையல் அறை தவிர்த்து மற்ற இடங்களை கிளறிப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

வரும்போதே  ‘இரவு டிபன் செய்ய வேண்டாம். இதை சாப்பிட்டுக்கச் சொல்லி அம்மா சொன்னாள்’  என இரண்டு பாக்கெட்டுகளை கொண்டுவந்திருந்தார்கள். இருவரும் மொட்டைமாடிக்கு மெதுவாக நடந்து சென்று சாப்பிட்டார்கள்.கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்கச் சென்றார்கள்.

காலையில் எழுந்ததும் வீடே களேபரமாக இருந்ததைப் பார்த்த கோமதிக்கு அயர்ச்சியாக இருந்தது. ‘என்ன நாற்றம் நாற்றம்னு சொல்லி வீட்டையே இப்படி கலைச்சுப் போட்டா யார் சரி பண்றது..’ என புலம்பியபடி அடுக்கி வைத்தாள்.

இதற்குள் அம்மு வந்தாள். வாயில் மாஸ்க். அதற்குமேல் ஒரு கர்சீஃப் கட்டிக்கோண்டு முகமூடி திருடனைப் போல இருந்தாள்.  கூடவே அவள் வீட்டில் வளர்க்கும் நாயையும் கூட்டி வந்திருந்தாள். கோமதிக்கும், சதாசிவத்துக்கும் நாயைக் கண்டாலே அலர்ஜி.

அம்மு போலீஸ் மோப்ப நாயை வைத்திருப்பதைப் போன்ற பாவனையுடன் அதை வைத்துக்கொண்டு சமையல் அறையில் மோப்பம் பிடிக்கச் செய்தாள். அது என்ன புஸு புஸூவென புது டிரஸ் போண்ட்டுக் கொண்ட குட்டிக் குழந்தைப் போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் கேஸ் சிலிண்டர் சரி பார்க்கும் சர்வீஸ் மேனை வரச் செய்து கேஸ் லீக் ஆகிறதா என பார்த்தாள். ம்ஹும். அதுவும் பிரச்சனை இல்லை.

வீட்டை திரும்பவும் புரட்டிப் போட்டு ஊதுவத்தி, சாம்பிராணி எல்லாம் ஏற்றினாள். டெட்டால் போட்டு துடைத்தாள்.

இத்தனை அமர்க்களத்திலும் கோமதிக்கும், சதாசிவத்துக்கும் துளி நாற்றம் தெரியவில்லை.

அம்மா இன்னிக்கு இங்கே இருக்க வேண்டாம். வீட்டை ஒட்டடை அடித்து மூளை முடுக்கெல்லாம் சுத்தம் செய்து திரும்பவும் சரிசெய்து அதனதன் இடத்தில் வைத்துக்கொடுக்கும் சர்வீஸ் செய்பவர்களை வரச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் இருவரும் எங்க வீட்டில் இருங்கள் என சொல்லி அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் அம்மு.

சதாசிவத்துக்கு தன் மூக்கின் மீதே கோபம் கோபமாய் வந்தது. கோமதிக்கும்தான். எப்படி ஒரு துளி நாற்றமும் நமக்குத் தெரியவில்லை? என புலம்பிக்கொண்டே பெண்ணுடைய வீட்டுக்குச் சென்றார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாய் இருவருக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அதாவது எந்த வாசனையும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஒருநாள் வீட்டுக்கு நரேன் வந்திருந்தபோது ‘என்னப்ப சமையல் அறையில் இருந்து தீயற வாசனை வருது. உங்களுக்குத் தெரியலையா?’ என கேட்டுக்கோண்டே சமையல்; அறை செல்ல அங்கு அடுப்பில் ரவா உப்புமா காந்திக்கொண்டிருந்தது.

அன்றுதான் கண்டுபிடித்தார்கள் அவர்கள் இருவருக்குமே வாசனையை உணரும் சக்தி இல்லாமல் இருந்ததை. சளி, இருமல் கூட இல்லை. ஆனாலும் வாசனை தெரியவில்லை. உடனே கோமதி சுவையாவது தெரிகிறதா என பார்க்க வித விதமான சுவையுள்ள பொடிகளை சாப்பிட்டுப் பார்த்து கணவனுக்கும் கொடுத்து சாப்பிட்டு சுவை பார்க்கச் சொன்னாள்.

ஒரு நிம்மதி இருவருக்கும். சுவை தெரிகிறது. ஆவி பிடித்து மூக்கை சரி செய்வதாய் நினைத்துக் கொண்டார்கள். ஆனாலும் வாசனை மட்டும் தெரிவதில்லை.

பிள்ளைகள் இருவரும் கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் கொண்டு காண்பித்தார்கள். வயதானவர்களில் ஒருசிலருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதுண்டு என சொல்லி மூக்கில் விடுவதற்கு ஒரு டிராப்ஸ் கொடுத்து அனுப்பினார்கள். தொண்டை மற்றும் கண் பரிசோதனையும் செய்யச் சொன்னார்கள். எல்லாம் செய்தாயிற்று. ஆனாலும் வாசனை தெரிவதில்லை.

அன்றில் இருந்து இருவருக்கும் மூக்கின் மேலேயே எப்போதும் ஒரு கண்.

வீட்டை ஒட்டடை அடித்து இண்டு இடுக்கெல்லாம்கூட விடாமல் தேடிப் பார்த்து பெயிண்ட் அடிக்காத குறைதான். மற்றபடி வீடு பாலிஷ் போட்டுவிட்டதைப் போல் மின்னியது.

ஆனாலும் அந்த துர்நாற்றம் மட்டும் போகவே இல்லை. வந்திருந்தவர்களில் ஓர் இளைஞன் மட்டும் ஃப்ரிட்ஜூக்கு அருகில் சென்று அதன் பின்னால் முகர்ந்து பார்த்துவிட்டு ‘சார், இதை பாருங்கள்’ என கத்தினான்.

அனைவரும் ஃப்ரிஜ்ஜை நகர்த்தினார்கள். பின்னால் ஃப்ரீசரில் இருந்து ஐஸ் கட்டி உருகி கொட்டிய டப்பா போன்ற பகுதி பூஞ்சை காளான் பிடித்த தண்ணீரால் நிரம்பி இருந்தது. அதுதான் ஊரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கான நாற்றம்.

வாரா வாரம் டி-ப்ரீஸ் போட்டு விட்டு பின்னால் தண்ணீர் உருகிக் கொட்டி டப்பா நிரம்பி இருந்தால் எப்படி சுத்தம் செய்வது எனவும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போதைய நாற்றத்துக்குக் காரணமான  தண்ணீர் நிரம்பிய டப்பாவை எடுத்து  சுத்தம் செய்துவிட்டு மாட்டினார்கள்.

வாசனை திரவியம் விட்டு வீட்டை மணக்கச் செய்து கட்டணம் வாங்கிக்கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

இதற்குள் கோமதியும் சதாசிவமும் வீட்டுக்கு வந்து சேர அவர்கள் முகத்தில் இன்னமும் வீடு வீடாகவில்லையே  என்ற சலிப்பு தீரவில்லை. ஆனால் அம்முவுக்கோ முகத்தில் நிம்மதி.

‘எல்லா பிரச்சனையும் சரியா போச்சு. வீட்டை சுத்தம் செய்தாற்போலவும் ஆயிற்று. நாற்றமும் இல்லை…’ என சொல்லிக்கொண்டே கலைந்திருந்த சோபாக்களையும் நாற்காலிகளையும் சரி செய்து போட்டுக் கொண்டிருந்தாள்.

‘மணக்கிறது பாரும்மா… அப்பா வீடே கம கமன்னு இருக்கு இல்லப்பா?’ என எதேச்சையாக சொல்லியபடி அவர்கள் முகத்தைப் பார்க்க அவர்கள் முகம் வாடி இருந்தது.

அப்பா அம்மாவுக்கு வாசனை தெரியாது என்பதே அவளுக்கு அப்போதுதான் உரைத்தது.

‘ஸ்….’ என தலையில் அடித்தபடி ‘சாரிம்மா… சாரிப்பா…’ என்று சொல்லிக்கொண்டே ‘ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். வாசனை தெரியாததெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல… எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கார்…’ என சொல்லிக்கொண்டே அவள் கிளம்பத் தயாரானாள்.

கோமதிக்கும் சதாசிவத்துக்கும் அவள் சொன்னது எதுவும் மனதில் ஏறவில்லை. அவரவர்களுக்கு என்னென்னவோ பிரச்சனைகள். ஆனால் தங்களுக்கு மட்டும் இப்படி ஒரு பிரச்சனை என நினைத்தபடி சோபாவில் அமர்ந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் இப்போது தங்கள் கண்கள் என்னவோ மூக்கையே பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 4, 2022 | வெள்ளிக் கிழமை

(Visited 735 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon