‘என் அம்மா இப்படி… உங்கள் அம்மா எப்படி?’
நேற்று, ‘என் அம்மா நல்ல அரசியல் விமர்சகர்… உங்கள் அம்மா எப்படி?’ என ஒரு சிறு கேள்வியை எழுப்பி இருந்தேன். அதற்கு பலரும் பலவிதமாக பதில் கொடுத்திருந்தார்கள். என் வார்த்தைக்கு மதிப்பளித்து பதிலளித்த அனைவரும் என் அன்பு நன்றிகள்.
அம்மாவின் நகைச்சுவை உணர்வு,
90 வயது அம்மாவின் ஊக்கமும் உழைப்பும்,
அம்மாவின் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திறன்,
அம்மாவின் கோபப்படாதன்மை,
அம்மாவின் சங்கீதமும் சமஸ்க்ருத ஞானமும்,
அம்மாவின் தன்னம்பிக்கை,
அம்மாவின் கடவுள் பக்தி,
அம்மாவி உதவி செய்யும் குணம்,
கோவில் மாமி என புகழப்படும் அம்மா,
யதார்த்தவாதி அம்மா,
ஓவியம் வரையும் அம்மா
என அம்மாவைப் பற்றி எழுதித்தள்ளிவிட்டார்கள். சங்கீத ஞானம் குறைவான எனக்கே ‘அம்மான்னா சும்மாவா?’ என பாடத்தோன்றியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கடைசியில் அனைவரும் ஒட்டு மொத்தமாக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். ஏன் தெரியுமா? தங்கள் அம்மாவைப் பற்றி நினைவு கூற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு.
ஆமாம். பல நேரங்களில் வாழ்க்கைப் பாதையில் நாம் ஓடுகின்ற ஓட்டத்தில் நாம் நினைவு கூற நினைக்கும் பல விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படக் கூட நேரம் கிடைக்காமல் ஏதேதோ வேலைகள். அது சார்ந்த ஓட்டங்கள்.
யாரேனும் இறந்துவிட்டால் நம் சமூக வலைதளங்களில் அவர்களின் பெருமைகளைப் பேசுவதைப் பார்த்திருப்போம். அவர்களுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்கள் செய்த நல்லவை, அவர்களின் நற்குணங்கள் அப்படி இப்படி என புகழாரம் சூட்டுவதைக் காண்கிறோம்.
ஒருவர் நல்லவர், வல்லவர் என பட்டங்கள் பெற அவர் இறக்க வேண்டும்போல என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
இதை பார்க்கும்போது சாஸ்திர சம்பிரதாயமாக இறந்தவர்களுக்கு செய்யும் சங்கில் பத்தாவது நாளன்று கருடபுராணம் வாசிப்பார்கள். அதில் இறந்தவரைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.
இருக்கும்போது சொல்லாத பாராட்டும், புகழாத வார்த்தைகளும் இறந்த பிறகு எதற்கு? அம்மா அப்பா என்றால் சமைப்பது, வீட்டு வேலை, படிக்க வைப்பது இப்படி எல்லாமே அவர்கள் வேலை. அதற்கெதற்குப் பாராட்டு என கேட்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. அலுவலகத்தில் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்கள். பிறகெதற்கு பாராட்டும், விருதும், ஊக்கத் தொகைகளும்? வேண்டாம் என ஒதுக்குவதுதானே? மனம் இல்லை தானே அதற்கு?
அதுபோல்தான் பெற்றவர்களுக்கு இருக்கும்போதே அவர்கள் மனம் இனிக்கும்படி வாழ்ந்து காட்டுவதும், அவர்களை பெருமையாக உணரச் செய்வதும் நம் அனைவரின் கடமை.
என் படைப்புகள் (புத்தகங்கள் மட்டுமல்ல, அனிமேஷன் படைப்புகள், ஆவணப்படங்கள் இப்படி எல்லாவற்றிலும்) அனைத்திலும் அந்தப் படைப்பை என் பெற்றோருக்கு சமர்ப்பித்திருப்பேன். அதில் என் அப்பா பெயரை போட்டு அருகில் அவர் செய்த பணியையும், அம்மா பெயரைப் போட்டு அருகில் அவர் செய்த பணியையும் குறிப்பிட்டிருப்பேன்.
சமர்ப்பணம்: அப்பா வி.கிருஷ்ணமூர்த்தி, SDE, Retd., BSNL, அம்மா கே. பத்மாவதி, Senior Telephone Supervisor, Department of Telecommunication
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பதிப்பகத்தில், ‘அம்மா என்றாலே அம்மாதான், அப்பா என்றாலே அப்பாதான். அதற்கு எதற்கு அவர்கள் பணி செய்த விவரங்களை போடுகிறீர்கள்? ‘இந்தப் படைப்பு அன்புள்ள அப்பா அம்மாவுக்கு சமர்ப்பணம்’ என்று மட்டும் போட்டால் போதாதா?’ என கேட்டார்கள்.
அதற்கு நான் சொன்ன பதில் இன்னமும் நினைவிருக்கிறது. ‘அம்மா என்றால் அன்பாக இருப்பது, நன்றாக சமைப்பது, நன்றாக வீட்டை அழகுணர்ச்சியுடன் பராமரிப்பது, அப்பா என்றால் தேவையானதை எல்லாம் வாங்கித் தருவது, பேரன்புடன் இருப்பது, செல்லமாக இருப்பது’ என பொதுவாக குறிப்பிடுவதை விட என் அம்மா இந்தத் துறையில் இன்ன பதவியில் பணி செய்துள்ளார் என்று சொல்லும்போது அது கூடுதல் கவனத்தைப் பெறும்.
என்னுடைய படைப்பு வெளியான வருடம் ஒரு பெண்மணி ஒரு துறையில் பணி புரிந்துள்ள விவரத்தை படிக்கும் எதிர்கால சந்ததியினருக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் அல்லவா?
அதுபோல என் அப்பா சமைப்பது, இனிப்புகள் செய்வது என வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களைப் பகிர்வதிலும், எங்கள் குடும்பங்களில் ஆண்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வதை பெருமையுடன் பகிர்வதிலும் இதே உளவியல்தான்.
ஆண்கள் என்றால் வீட்டு வேலை செய்வதை என்னவோ உலக அதிசயங்களில் ஒன்றாக கருதும் இந்த சமூகத்துக்கு (இன்று மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி) இன்றல்ல நேற்றல்ல தலைமுறை தலைமுறையாக வீட்டு வேலைகளை பெண்களுடன் சேர்ந்தே பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் படிக்கும் எதிர்கால சந்ததியினருக்கு அது ஒரு நற்பாடமாக அமையும் தானே?
ஆகவே தான் நான் எழுதும்போதும் சரி, பேசும்போதும் சரி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஆண் என்றால் வெளி வேலை, பெண் என்றால் உள் வேலை என்ற மனப்பாங்கை கட்டுடைத்துக்கொண்டே வருவேன். இன்றும் தொடர்கிறேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 5, 2022 | சனிக் கிழமை