சிலமணி நேர ஈர்ப்புகள்!
சென்ற வாரம் மருத்துவமனையில் இரண்டு மணி நேர காத்திருப்பு. ‘அடடா என்ன உடம்புக்கு?’ என பதற வேண்டாம். பெற்றோரின் வழக்கமான உடல்நலப் பரிசோதனைதான். எத்தனை நேரம்தான் கையையும் காலையும் கட்டிக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. எவ்வளவு நேரம்தான் சுற்றி அமர்ந்திருப்பவர்களை, வருவோர் போவோரை, நர்ஸுகளை கவனித்துக்கொண்டிருப்பது?
பையில் சமர்த்தாக அமர்ந்திருந்த செல்போனை எடுத்தேன்.
கிண்டிலில் இருந்த சில புத்தகங்களில் சில பகுதிகளை மேலோட்டமாக படித்தேன். அடுத்து ஃபேஸ்புக் பார்க்கலாம் என நினைத்தேன். பொதுவாக மொபைலில் ஃபேஸ்புக் பார்ப்பதில்லை என்பதால் அதை அன் – இன்ஸ்டால் செய்து வைத்திருந்தேன். அதை இன்ஸ்டால் செய்துகொண்டேன். நமக்கு நாமே சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான் போலிருக்கிறது.
தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் பிறந்த நாள், இறந்த நாள், குழாயடி சண்டைக் கணக்காய் ஜாதி மத சண்டைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி கத்தல்கள் அப்படி இப்படி என மேம்போக்காய் ஒரு சுற்று வருவதற்குள் ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.
நர்ஸ் எங்கள் பெயரை அழைக்கும்போதுதான் நிமிர்ந்தேன். என்னவென்றே தெரியவில்லை மனம் வெறுமையாக இருந்தது.
டாக்டர் பரிசோதனை ரிப்போர்ட்டை பார்த்து எல்லாமே நல்லபடியாக உள்ளது. உணவு மற்றும் மருந்துகளை இப்படியே தொடருங்கள் என சிரித்த முகத்துடன் வழி அனுப்பியபோதும் மனதில் உற்சாகமே இல்லை.
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றாலும் எதிலும் ஈடுபட முடியாமல் ஒரு வெறுமை ஆட்கொண்டிருந்தது.
வழக்கத்துக்கு மாறாய் ஃபேஸ்புக்கிலேயே நீண்ட நேரம் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி என புரிந்தது.
பொதுவாக என்ன கவலை பிரச்சனை இருந்தாலும் காம்கேருக்கு வந்து பணியில் ஈடுபட ஆரம்பித்தால் கொதிக்கும் உடல்நிலையில் ஜூரம், குழப்பமான நிலையில் மனம் இருந்தாலும் ‘போயே போச்சு’ என சரியாகிவிடும் பக்குவம் என் மனதுக்கும், உடலுக்கும்.
ஆனால் அன்று வெறுமை, விரக்தி, சோம்பல்.
மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தபோது என் பெற்றோர் மொபைலில் மனதுக்கு நெருக்கமான உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தனர். அந்த உரையாடலில் நானும் கலந்துகொண்டு சில நிமிடங்கள் வேறு டாப்பிக் பேசியவுடன்தான் மனநிலை ஒரு நிலைக்கு வந்தது.
ஒரு நாள். ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் அமர்ந்திருந்ததற்கே மனமும், உடலும் இத்தனை சோர்வாகி விடுகிறதென்றால் கண்ட கண்ட ஆப்களையும் இன்ஸ்டால் செய்துகொண்டு அதிலேயே வீழ்ந்திருப்பவர்களுக்கு மனம் எப்படி இருக்கும்? அந்த உணர்வை ‘மனச்சோர்வு’ என்பதை அவர்கள் உணர்வதற்கான சிறு இடைவெளியில் அந்த உணர்வு அவர்களுக்குள் ஆளுமை செலுத்த ஆரம்பித்து அவர்களை ஆட்டிப்படைக்கும் மனோபாவத்துக்குக் கொண்டு செல்லும். ஆங்கிலத்தில் உரைக்கும்படி சொல்ல வேண்டுமானால் Addicted Mentality.
குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், கல்லூரி இளைஞர்கள், ஹவுஸ் மேக்கர்ஸ், பணிக்குச் செல்வோர், பயணம் செய்வோர் என ஆங்கிங்கெனாதபடி யாரையுமே இது விடுவதில்லை. கிடைப்பவர்களை தூக்கி தன்னுள் போட்டுக்கொண்டு ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடும்.
இதற்குத்தான் நான் சில விஷயங்களை கடைபிடிக்கிறேன்.
1. மொபைலில் வாட்ஸ் அப் பார்த்தாலும் அதற்கான பதிலை லேப்டாப் வாட்ஸ் அப் வெர்ஷன் மூலம் மட்டுமே சொல்கிறேன்.
2. இமெயிலுக்கான பதிலையும் லேப்டாப்பில் மட்டுமே கொடுக்கிறேன்.
3. மொபைலில் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த ஆப்பையும் வைத்துக்கொள்வதில்லை. தேவை என்றால் லேப்டாப் வெர்ஷனில் மட்டுமே பயன்படுத்துகிறேன்.
4. அலுவலக நேரம் தாண்டி மற்ற நேரங்களில் செல்போனில் அழைப்பு வந்தால் உடனடியாக எடுத்துப் பேசுவதில்லை. அவசியமான அழைப்பு என்றால் அவர்களே வாட்ஸ் அப்பில் தகவல் கொடுப்பார்கள் அல்லவா? அதற்கேற்ப அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
ஆப்களை லேப்டாபில் பயன்படுத்துவதில் இரண்டு வசதிகள் உள்ளன.
ஒன்று…பொதுவாக மொபைல் போனில் ஆப்களை பயன்படுத்தும்போது அது பொழுதுபோக்கு உணர்வை கொடுக்கிறது. லேப்டாப்பில் பயன்படுத்தும்போது அது அலுவலக ரீதியான (Official) மனநிலையை உருவாக்குகிறது.
இரண்டாவது, நேர்வினையோ, எதிர்வினையோ உடனுக்குடன் ரியாக்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. லேப்டாப் முன் அமர சிறிது நேரம் எடுப்பதால் அப்போது ரியாக்ட் செய்துகொண்டால் போதும். இந்த இடைவெளியில் நம் கொந்தளிக்கும் மனோபாவம்கூட அடங்கிப் போய் அமைதியாகும் சூழல் உருவாகிறது. கையில் மொபைல் போனை வைத்துக்கொண்டே அலைவதைப்போல் லேப்டாப்பை வைத்துக்கொண்டு யாரும் அலைவதில்லையே.
மொத்தத்தில் செல்போனை அதன் அடிப்படை வசதியான பேசுவதற்கு பயன்படுத்துவதற்கு அடுத்து நான் பயன்படுத்துவது போட்டோ, வீடியோ எடுப்பதற்காக மட்டுமே.
போட்டோ வீடியோ எடுப்பது என்பது நான் ரசிப்பதை நானே விரும்பி எடுப்பது. ஆனால் மொபைலில் உள்ள ஆப்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதுதான் நம்மை ரசிக்கிறது, நம்மை ஈர்க்கிறது, அதுவே நம்மை இயக்குகிறது என்ற பேருண்மையை நாம் உணர்ந்துகொண்டால் அதில் அடிமையாகும் மனோபாவத்தில் இருந்து மீண்டுவிடலாம்.
இது குறித்து இன்னும் விரிவாக பேசுவோம். இன்று இதுமட்டும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 6, 2022 | ஞாயிறு