பாராட்டில் பங்கீடா? வேண்டாமே!
யாரேனும் தங்கள் குழந்தைகள் பற்றி பெருமையாக சொல்லும்போது ‘இந்தக் கால குழந்தைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு, நம் காலத்துல அதெல்லாம் எங்கே…’ என பெருமூச்சு விட்டபடி கேட்க வேண்டாமே?
காரணம் வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் அதைப் பற்றிக்கொள்பவர்கள் ஒருசிலர் தானே. அவர்களுக்குத்தானே பெருமைகளும் வந்து சேர்கின்றன.
போலவே, எவரேனும் தங்கள் வீட்டுப் பெரியவர்களைப் பற்றி பெருமையாகச் சொல்லும் போது ‘அந்தக் காலத்து பெரியவங்களுக்கு எல்லாம் தெரியும்… இந்த காலத்து இளைஞர்களுக்கு என்ன தெரிகிறது?’ என்று ஒருவரை ஏற்றிப் புகழ மற்றொருவரை இறக்க வேண்டாமே.
காரணம், அந்தக் காலத்து பெரியவர்கள் அனைவருக்குமா எல்லாமும் தெரிந்துவிடுகிறது? ஒரு செடியின் இலையைக் காண்பித்து ‘என்ன இலை?’ என்றால் மிகச் சரியாக சொல்லிவிடுபவர்களையும் பார்க்கலாம், துளசி இலையை காண்பித்தால்கூட ‘என்னது இது துளசி இலையா, புதினா இலையா?’ என வித்யாசம் தெரியாமல் கேட்கும் பெரியவர்களும் இருக்கிறார்கள்.
அதனால்தான் சொல்கிறேன், யாராவது எதைப் பற்றியாவது பெருமையாக சொன்னால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு முழுமையாக பாராட்டுங்கள். அந்தப் பெருமை தன்னைப் பற்றியும் இருக்கலாம் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் பற்றியும் இருக்கலாம்.
புகழ்ச்சியோ, பாராட்டோ அது யாருக்காக சொல்லப்படுகிறதோ அவருக்கு மட்டும் அதனை முழுமையாக்குங்கள். உங்கள் மகிழ்ச்சியையும் அவருக்கான பாராட்டையும் யாருடனும் ஒப்பிட்டு பங்கீடு செய்ய வேண்டாம். அதுதான் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பெருமை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 7, 2022 | திங்கள்