அழ. வள்ளியப்பா  படைப்புகளுக்கு  டிஜிட்டல் பிள்ளையார் சுழி! – குழந்தைக் கவிஞர் நூற்றாண்டு நிறைவு விழா (November 7, 2022)

முதன் முதலில் (2004)
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
அவர்களின் 
பாடல்கள்
டிஜிட்டல் வடிவில் அனிமேஷனாக
உருவெடுக்க
பிள்ளையார் சுழியாக அமைந்த
 எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம்
மூலம் வடிவெடுத்த

படைப்பிற்கான லிங்க்:
https://CompcareTV/Animation

பிள்ளையார் சுழிக்கு பதில் பிள்ளையார் சுழி!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கோ அல்லது நம் திறமைக்குக் கொடுத்த ஊக்கத்துக்கோ இயற்கை தானாகவே பிரதிஉபகாரம் செய்ய வைக்கும் சூழலை உருவாக்குவதுடன் அதை திறம்பட அரங்கேற்றுவது நம் வாழ்க்கையில் இயற்கையாகவே அமைந்து விடுவதுதான் நமக்கு எத்தனை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது?

அப்படிப்பட்ட ஒரு தெய்வீகமான நிகழ்வு என் வாழ்க்கையிலும்.

10 வயது. அப்போது என் வயது பத்தே பத்துதான். கோகுலம் இதழுக்கு ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தலைப்பில் கதை எழுதி அனுப்பினேன். தலைப்பைக் கூட மாற்றாமல் அது வெளியாகி இருந்தது. அந்தக் கதைதான் என் எழுத்துக்கான பிள்ளையார் சுழி. எழுத்துக்கு மட்டும் அல்ல என் ஒட்டுமொத்த திறமைகளுக்குமான பிள்ளையார் சுழி. இந்த ‘பிள்ளையார் சுழி’ என்பதை மனதுக்குள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

2004. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்களை அவரது மகன் அழகப்பன் அவர்களிடம் முறையாக சட்ட ரீதியாக உரிமை பெற்று அனிமேஷன் படைப்பாக வெளியிட்டோம். அதற்கடுத்த வருடமே அவரது படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டன என்பது வேறு விஷயம்.

குழந்தைக் கவிஞரின் பாடல்கள் அச்சில் இருந்து அனிமேஷனாவது அதுவே முதன்முறை என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. ஆம். குழந்தைக் கவிஞரின் பாடல்கள் எழுத்தில் இருந்து டிஜிட்டலுக்குள் முதன் முறையாக நுழைந்தது எங்கள் காம்கேரின் அனிமேஷன் படைப்பின் மூலம்தான் என்பதும் அப்போது எங்களுக்குத் தெரியவே தெரியாது.

அந்த அனிமேஷன் படைப்பிற்கு நாங்கள் சூட்டிய பெயர் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’. (https://CompcareTV/Animation) குழந்தைகள் மத்தியில் மட்டும் இல்லாமல் பெற்றோர் மனதிலும், பள்ளி சிறுவர் சிறுமியருக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்ததே அதன் சிறப்பு.

சரி… சரி, இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு? சீக்கிரம் சொல்லுங்கள்.

சொல்லி விடுகிறேன். நேற்று மாலை (நவம்பர் 7, 2022) 5 மணிக்கு சென்னை அண்ணாசாலை ராணி சீதை ஹாலில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா.

அதுக்கென்ன இப்போ?

காரணம் இல்லாமலா இத்தனை பீடிகைப் போடுகிறேன். சொல்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் என்னை(யும்) பாராட்டுவதாக சொல்லி அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்கள். சரி ஒரு சால்வையும், புத்தகமும் நிச்சயம் உண்டு என்று மகிழ்ச்சியோடு சென்றிருந்தேன்.

நிகழ்ச்சி குழந்தைகளின் ஆடல் பாடலுடன் தொடங்கி, சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் நகர்ந்து, பாராட்டு நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. பிரமாதப்படுத்தி இருந்தார்கள் குழந்தைக் கவிஞரின் குடும்பத்தினர்.

அந்த நிகழ்ச்சியில் மேடைக்கு என்னை அழைத்தார்கள். பொன்னாடை போர்த்தினார்கள். புத்தகங்கள் கொடுத்தார்கள். பின்னணியில் அவர்கள் எனைப் பற்றி அறிவித்த செய்திதான் ஹைலைட்.

‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்கள் டிஜிட்டல் வடிவிற்கு செல்ல பிள்ளையார் சுழி போட்டவர் காம்கேர் புவனேஸ்வரியும், அவரது காம்கேர் நிறுவனமும்….’ இதற்கு மேல் என்னால் முழுமையாக என் காதுகளில் விழவில்லை. மேடையை விட்டிறங்கி அப்பாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.

காரணம் முதலில் இனிப்பாக ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு காபி சாப்பிடுங்கள். காபியில் உள்ள சர்க்கரையின் சுவை தெரியாது. அதுபோல் தான் இனிக்க இனிக்க ஒரு எங்கள் பணிக்கான வாழ்த்துரையை, கெளரவத்தை, பாராட்டை காதுகளால் கேட்ட பிறகு அதற்கடுத்து சொல்லும் விஷயங்களும் இனிப்பாகவே இருந்தாலும் அவை நம் காதுகளில் விழாது. சரிதானே? அப்படித்தான் இருந்தது எனக்கும்.

பிள்ளையார் சுழி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னேன் அல்லவா?

1992-ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை, மீடியாக்களில் நான் கொடுக்கும் நேர்காணல்களில் எல்லாம் என் பத்து வயதில் கோகுலத்தில் வெளியான ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதைதான் என் ஒட்டுமொத்த திறமைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லாமல் விட்டதில்லை. ஏனெனில் அதுதான் உண்மை.

பிள்ளையார் சுழி தானாகவே போடுமா? அதைப் போடுவதற்கும் ஒரு மாமனிதர் இருந்திருப்பார் அல்லவா? அவர்தான் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா. அந்த கதை வெளியான போது அவர்தான் கோகுலம் இதழின் ஆசிரியர், எடிட்டர், எல்லாமே. ஆனால் நான் அவரை நேரில் பார்த்ததில்லை. போனில் பேசியதில்லை.

யார் என் திறமைக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டதாக சொல்லி வந்தேனோ, அந்த பிள்ளையார் சுழி போட்டவருக்கே இறை அருளால் என் மூலம் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டது. ஆம். குழந்தைக் கவிஞரின் பாடல்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு என் முன்னெடுப்பும், எங்கள் காம்கேரின் உழைப்புமே பிள்ளையார் சுழியாகியது. இதையும் நானாகச் சொல்லவில்லை. கவிஞரின் குடும்பத்தினரே ஊர் கூடிய சபையில் அறிவித்து பெருமைப்படுத்தி விட்டார்கள். அதுவும் குழந்தைக் கவிஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில்

இப்போது சொல்லுங்கள். ஒருவர் நமக்கு செய்த உதவிக்கோ அல்லது நம் திறமைக்குக் கொடுத்த ஊக்கத்துக்கோ இயற்கை தானாகவே பிரதிஉபகாரம் செய்ய வைக்கும் சூழல் அமைவது எத்தனை பேருக்கு அமையும்?

எனக்கு அது அமைந்திருக்கிறது. அதுவும் 2004-லேயே. அதற்கான அங்கீகராமும் பாராட்டும் நேற்று கிடைத்தது. இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்கி மகிழ்கிறேன்.

‘பிள்ளையார் சுழி’ இதுதான் எத்தனை நினைவலைகளைக் கிளறி புத்துணர்வாக்கி விட்டது நேற்றைய மாலைப் பொழுதை.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது மாமழை. எனக்கான ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு மழை நிற்பதற்காகக் காத்திருந்தேன். இனிய நினைவுகளுடன் காத்திருப்பது சுகம் தானே?

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற என் கதை மூலம் குழந்தைக் கவிஞர் என் திறமைக்கு பிள்ளையார் சுழி போட்டார், ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ மூலம் அவர் பாடல்கள் டிஜிட்டலாவதற்கு நாங்கள் பிள்ளையார் சுழி போட்டோம்.

இந்தப் பதிவிற்கு நான் கொடுத்துள்ள ‘பிள்ளையார் சுழிக்கு பதில் பிள்ளையார் சுழி’ தலைப்பு சரிதானே!!!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 8, 2022 | செவ்வாய்

புகைப்படத் தொகுப்பு!

(Visited 548 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon