‘You have all the rights to skip my posts’
நீண்ட நாட்களாக நட்பு அழைப்பு விடுத்து பொறுமையாகக் காத்திருந்து என் பதிவுகளுக்கு நித்தம் லைக் செய்து (நட்பு அழைப்பில் இல்லாதவர்கள் லைக் மட்டுமே போட முடியும், கமெண்ட் செய்ய முடியாதபடி செட்டிங் செய்து வைத்துள்ளதால்) தங்கள் அன்பை (!) காட்டி வரும் ஒரு சிலரது புரொஃபைல் விவரங்களை படித்துப் பார்த்து நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்டேன் சென்ற வாரத்தில் ஓர் நாள்.
அது நாள் வரை அமைதியாக நல்ல பிள்ளைகளாக என் பதிவுகளில் லைக் மட்டும் செய்தவர்களின் முகங்கள் திடீரென வேறு மாதிரி ஆனதை அவர்கள் பின்னூட்டங்களில் இருந்து அறிந்துகொண்டேன்.
என்னவோ நான் தொலைக்காட்சி விவாதக் களம் அமைத்து வைத்துக்கொண்டு அவரவர்கள் கருத்துக்களை எண்ணங்களை எல்லாம் சொல்லுங்கள் என கேட்டதைப் போல எதிர்வினை புரிய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கே தெரியாது அவர்கள் என்ன எழுதுகிறார்கள் எந்தக் கோணத்தில் பேசுகிறார்கள் என நான் நினைக்கிறேன். அத்தனை அபத்தங்கள்.
நான் எழுதுவதோ மனித நேயம் குறித்த வெகு சாதாரண பதிவுகள். சென்சிட்டிவ் பதிவுகள் எதுவுமே இருக்காது. அப்படி இருந்தும் நம்மைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் போல பொங்கி எழுந்து கருத்திட ஆரம்பித்தபோது நான் விழித்துக்கொண்டேன்.
அவர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிக்கொண்டேன். ‘என் கருத்துக்களை பதிவிட ஒரு களமாக சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறேனே தவிர விவாதக்களம் அமைக்கவில்லை. விவாதக்களம் அமைத்து வாங்க விவாதம் செய்யலாம் என்று சொன்னால் மட்டுமே நீங்கள் உங்கள் எதிர்வினைகளை பதிவிடலாம். அப்படி இல்லை எனில் என் பதிவுகளை படிக்காமல் கடக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. You have all the rights to skip my posts!’ என சாத்வீகமாக (?) சொன்னாலும் விடாமல் விவாதம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் ஓரிருவரை ப்ளாக் செய்தேன். வேறு வழியில்லை. சொல்லிப் பார்க்கலாம். கேட்கவில்லை எனில் நாம் ஒதுங்குவதுதானே ஒரே வழி.
புதிதாக நட்பு அழைப்புகளை ஏற்பதில் இதுதான் சிக்கல். முதலில் இருந்து எல்லாவற்றையும் புரிய வைக்க வேண்டும்… அப்படியே புரிய வைத்தாலும் நான் ஏதோ அவர்களைக் காயப்படுத்திவிட்டதாக நினைத்து என் நட்பில் இருப்பவர்களுடன் அவர்களை மெசஞ்சர் மூலம் தொடர்புகொண்டு தவறான கருத்துக்களை பரப்ப ஆரம்பிப்பவர்களுக்கெல்லாம் வீட்டில் வேறு வேலையே இருக்காதோ என நினைத்துக்கொள்வேன்.
இளைஞர்களாக இருந்தால் வேலைக்குக் கிளம்ப வேண்டாமா, திருமணம் ஆனவர்களாக இருந்தால் வீட்டு வேலை செய்து குழந்தைகளை பள்ளிக்கு கிளப்ப வேண்டாமா, வயதில் பெரியோர்களாக இருந்தால் வீட்டில் உள்ள இளைய தலைமுறையினருக்கு காலை நேரத்தில் உதவ வேண்டாமா? இப்படி எதுவுமே செய்யாமல் என் பதிவுகளுக்கு வந்து காலங்கார்த்தாலேயே எதிர்வினைகள் புரியும் அளவுக்கு என்ன வன்மம் அவர்கள் மனதுக்குள்? வீட்டில் அப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள் தங்கள் குடும்பத்தினருடன் என்றெல்லாம் நான் யோசிப்பேன்.
கொஞ்ச நாட்களாக இந்த பிரச்சனை இல்லாமல் இருந்தது. மீண்டும் இப்போது புது நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டதில் இருந்து இந்தப் பிரச்சனை மெல்ல தலைக் காட்ட ஆரம்பித்துள்ளது.
களை எடுப்பது சுலபம் தான். செய்ய வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதிக்காக எழுத வந்ததன் நோக்கமே திசை திரும்பி விடும்.
என் எழுத்துக்களை வருடக் கணக்கில் வாசித்து லைக் செய்து வாழ்த்திப் பின்னூட்டமிட்டு பகிர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல்நட்புகளுக்கும் என் அன்பு நன்றிகள்.
அனைவருக்கும் இந்த நாள் சூப்பரான நாளாகட்டும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 20, 2022 | ஞாயிற்றுக்கிழமை