காபி சூடா வேணுமா? சுத்தமான வேணுமா?

சூடான காபி வேணுமா? சுத்தமான காபி வேணுமா?

பொதுவாகவே குரலை உயர்த்தி நியாயம் கேட்டால் நாம் சண்டைப் போடுவதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். குரலை உயர்த்தாமல் அமைதியாகக் கேட்டால் அவர்கள் சண்டைப் போடுவதைப் போன்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அமைதியான முறையில் நியாயம் பேசவே முடியாது, எனவே வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயமே நியாயத்தை கேட்பதுதான் என்று ஒரு டாப்பிக்கில் நேற்று என் நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் குறித்த மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தேன்.

அதற்கு உதாரணமாக நாம் அமர்ந்து பயணம் செய்யும் வாகனத்தில், வாகன டிரைவர்களிம் ஏதேனும் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தால் அவர்கள் கவனம் சிதறும். விபத்து ஏற்படலாம். வாக்குவாதம் கூட வேண்டாம், பொதுவான அரசியல் பேசினால்கூட கவனம் சிதறும் என்றேன்.

அதுவரை அமைதியாக இருந்தவர்கள் அதன் பிறகு நான் சொன்ன ஒரு உதாரணத்தில் கொஞ்சம் அதிர்ச்சியானார்கள்.

ஓட்டலுக்குச் செல்கிறோம். காபி சூடாக இல்லை. சர்வரை ஓட்டலில் உள்ள அனைவருக்கும் காதில் விழுவதைப்போல் சப்தமாக அழைத்து ‘என்ன இது சூடாவே இல்லை, மனுஷன் சாப்பிடுவானா இதை, என்ன நினச்சுட்டிருக்கீங்க, காசு கொடுத்து தானே குடிக்கிறோம், ஓசிலயா கொடுக்கறீங்க…’ என்று கத்தினால் அவர் கூனிக் குறுகி பவ்யமாக உங்களிடம் இருந்து காபி டம்ளரை வாங்கி உள்ளே சென்று ’சூடச்சுட காபி எடுத்துக்கொண்டு வருவார்…’ என்றேன். நான் இன்னும் பேச்சை முடிக்கவில்லை. அதற்குள் ஓரிருவர், ‘ஆமாம் மேடம். சத்தம் போட்டால்தான் வேலை நடக்கும்’ என்று சொன்னார்கள்.

நான் இன்னும் முடிக்கலையே… ‘ஆறின காபியை கொட்டி விட்டு சுடச்சுட எடுத்துக்கொண்டு வருவார்தான், ஆனால் அவர் மனதில் நீங்கள் கத்திய வார்த்தைகள் பிராண்டி எடுக்க என்ன செய்வார் தெரியுமா?’

மீட்டிங் ஹாலே அமைதியில்.

‘என்ன செய்வார் என்பதை விட என்ன செய்ய வாய்ப்புள்ளது தெரியுமா?’

ஹால் அமைதியில் இருந்து வெளிவரவில்லை. பேரமைதியானது.

‘சுடச்சுட காபியை எடுத்துக்கொண்டு வரும் வழியில் ஓரமாக ஒதுங்கி உங்களிடம் அவர் பட்ட அவமானத்துக்கு ஆறுதல் தேடும் பொருட்டு ‘சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா தூ?’ என வேகமாக ஒரு துப்பு துப்பி காபி டம்ளரை உங்கள் டேபிளில் பவ்யமாக வைத்துவிட்டு ‘இப்ப குடித்துப் பாருங்க சார்’ என்று சிரிக்க 99 சதவிகதம் வாய்ப்புள்ளது.

சூடான காபி தேவை என்பதுடன் சுத்தமான காபியும் தேவை என்றால் பொறுமையாக சொல்ல வேண்டும். அமைதியாக சொல்ல வேண்டும்.

எனவே நியாயம் பேசுவது முக்கியம்தான். கூடுமானவரை நாம் அமைதியாக பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்காவது நியாயம் கிடைக்கும்’ என்று புரிய வைத்தேன்.

ஒருமுறை எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தவறுதலாக ஒரு பிளக்கை எடுத்துவிட்டு சுத்தம் செய்ய ஹார்ட் டிஸ்க் ஒன்று சட்டென பழுதாகிவிட கொஞ்சம் வேகமாக சப்தமாக ‘என்ன இது?’ என்று பேச ஆரம்பித்தேன். அவர் இதுபோல செய்வது முதன்முறை அல்ல. பல முறை செய்துவிட்டதால் என்னால் அமைதியாக சொல்ல முடியவில்லை. குரல் உயர்ந்துவிட்டது. அவருடன் அவரது பத்து வயது மகன் உடன் வந்திருந்ததால் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு குரலை தழைத்தேன். குழந்தை தன் கண் முன் அம்மா திட்டு வாங்குவதை அவமானமாகக் கருதிவிடக் கூடாதே என அவரை தனியாக அழைத்து சொல்ல நினைத்ததை அதே வேகத்துடன் சொல்லி முடித்தேன். கோபத்தைக் காண்பிக்கும்போது கூட அந்தக் கோபத்தினால் எதிராளி தன் தவறை திருத்திக்கொள்ளும் அளவுக்கு அழுத்தமாக சொல்ல வேண்டும்.

இங்கு பலருக்கும் கோபத்தைக் காட்டும் முனைப்பு இருக்கிறதே தவிர எதிராளியை அவமானப்படுத்தாமல் கோபத்தைக் காட்டத் தெரியவில்லை.

எங்கள் காம்கேர் கற்றுக்கொடுத்த பல விஷயங்களுள் இதுவும் ஒன்று.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 27, 2022 | ஞாயிறு

(Visited 780 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon