சாவித்திரி டீச்சர்!
என் பள்ளி ஆசிரியர், வயது 80+. கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் கணித ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர்.
எங்கள் பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசித்ததால் பள்ளிப்படிப்பும், கல்லூரிப் படிப்பும் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில்தான்.
அந்த வகையில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மயிலாடுதுறையில். அப்போது எனக்கு கணிதம் எடுத்த உயர்திரு. சாவித்திரி டீச்சர் எங்கள் காம்கேரின் 30-வது ஆண்டு நிறைவுக்கு அளித்த ‘ஆடியோ’ வடிவிலான வாழ்த்துரையை வீடியோவாக்கியுள்ளோம். நெகிழ்ச்சியாக இருந்தது.
பள்ளியில் என் மீது தனி கரிசனம் உண்டு இவருக்கு. கண்ணாடிக்குப் பின்னால் உள்ள பெரிய கண்களில் கருணை மட்டுமே தெரியும்.
அறிமுகம் ஆன சில மணி நேரங்களிலேயே பெயர் சொல்லி அழைப்பதும், ‘நீ’, ‘வா போ’ என பேசுவதும் வழக்கமாகிப் போன இந்நாளில் இவரது வாழ்த்துரையில் என்னை மரியாதை நிமித்தம் ‘அவர்கள், இவர்கள்’ என பேசி இருப்பது கொஞ்சம் சங்கடமாக இருக்க அவரிடம் ‘ஏன் டீச்சர், என்னை ‘நீ வா போ‘ என்றே அழைக்கலாமே, நீங்கள், அவர்கள் என அழைப்பது சங்கடமாக உள்ளது’ என்றேன்.
அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
‘மரியாதை கொடுப்பது உனக்கோ, உன் வயதுக்கோ அல்ல… உன் திறமைக்கும் அதனால் உயர்ந்துள்ள உன் நிலைக்கும்தான்… பொதுவெளியில் அப்படித்தான் பேச வேண்டும்…’
இதுதான் ‘சாவித்திரி’ டீச்சர்.
இவரைப் போன்றவர்கள்தான்
நல்லாசிரியர்கள்.
அன்பாசிரியர்கள்.
பண்பாசிரியர்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 22, 2022 | வியாழன்