ஆண் தேவதைகளும், பெண் காவல்தெய்வங்களும்!

ஆண் தேவதைகளும், பெண் காவல்தெய்வங்களும்!

எங்கள் குடும்ப நண்பரின் மருத்துவம் படிக்கும் பெண்ணும் அவள் அம்மாவும் இரவு எட்டு மணிக்கு கையில் ஸ்வீட்டுடன் வந்திருந்தார்கள்.

அந்த பெண் என் அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்து தான் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து விட்டதாகவும் நேற்றுதான் ரிசல்ட் வந்ததாகவும் சொல்லி வாழ்த்துப் பெற்றாள்.

‘அப்போ இனி நீ டாக்டர் …’ என்றேன்.

‘ஆமாம் ஆண்ட்டி, ஆனால் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டி இருக்கு. நாளையில் இருந்து ஹவுஸ் சர்ஜன் ஆரம்பமாகிறது. அது ஒரு வருடம். அதன் பிறகு மறுபடி நீட் (NEET) எழுத வேண்டும். பின்னர் மேற்படிப்பு…’ என்று சொல்லிக்கொண்டே போக அவர் முகத்திலும், அவளது அம்மாவின் முகத்திலும் தெரிந்த பூரிப்பையும் பெருமிதத்தையும் கண்டு நாங்களும் பூரித்தோம். அந்த பூரிப்பை அப்படியே புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.

‘இந்த நீட் தேர்வுக்காக திரும்பவும் ஏதேனும் பயிற்சி எடுக்க வேண்டுமா?’ என்றேன்.

‘இல்லை ஆண்ட்டி, இந்த நான்கு வருடம் நாங்கள் என்ன படித்தோமோ அதில் இருந்துதான் கேள்விகள் வரும்…’ என்றதுடன் இன்னும் கொஞ்சம் விரிவாக ‘இந்த நான்கு வருடமும் நன்றாக படித்தவர்களுக்கு அந்தத் தேர்வை எழுதி பாஸ் செய்வது கஷ்டம் இருக்காது…’ என்றாள் அந்தப் பெண்.

அவள் அம்மாவும் மகளுக்காக காலையில் நான்கு மணிக்கே எழுந்து சமைத்து டிபன் செய்துகொடுத்து மகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு பின்னர் வீட்டு வேலைகளைப் பார்ப்பார். இரவு வெகு நேரம் படிக்கும் மகளுக்காக அவளுடனேயே அமர்ந்திருப்பார். டீ, காபி போட்டுக்கொடுத்து அவள் கண் பார்வையிலேயே அமர்ந்திருப்பார். கிட்டத்தட்ட அவரும் மருத்துவம் படிக்கும் மனப்பக்குவத்திலேயே இருப்பார். இதை எல்லாம் அவர் அவ்வப்பொழுது சொல்லிக் கேள்வி.

‘உங்கள் மகள் டாக்டர் ஆனதில் உங்கள் பங்கு மிக அதிகம் இல்லையா…’ என அவள் அம்மாவிடம் கேட்டபோது ‘ஆமாம்… சொன்னால் நம்ப மாட்டீர்கள், கடந்த இரண்டு மாதமாக இவளுக்கு பரிட்சை ஆரம்பமானது முதல் நாங்களும் இரண்டு வேளைதான் சாப்பிடுகிறோம்…’ என்றபோது நாங்கள் ஆச்சர்யப்பட்டோம்.

’அவளுக்கு காலையில் பரிட்சை என்றால் காலையில் டிபன், மதியம் சாப்பாடு. இரவு சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடுகிறது என சாப்பிட மாட்டாள். நானும் அவளுக்காக அப்படியே பழகிக்கொண்டேன். மதியம் பரிட்சை என்றால் காலையில் சாப்பிடுவாள், மதியம் சாப்பிட மாட்டாள். அப்படியே தேர்வெழுதச் செல்வாள். இரவு வந்து சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என லைட்டாகவே சாப்பிடுவாள். நானும் அப்படியே பழகிக்கொண்டேன்.’

நாங்கள் பெருமிதமாக அவர் பேச்சை கவனித்தோம். ‘இனிதான் மூன்று வேளை சாப்பிட வேண்டும்…’ என்றார் முத்தாய்ப்பாக.

அவரது பேச்சில் நிறைவு இருந்தது. என்னவோ அவரே பரிட்சை எழுதி முடித்ததைப் போன்ற பெருமிதமும், நிறைவும், பூரிப்பும். பெற்றோருக்கு இதைத்தவிர வேறெதை பரிசாகக் கொடுத்துவிட முடியும் பிள்ளைகளால்.

வீட்டில் ஒரு மருத்துவரை உருவாக்க வேண்டும் என்றால் வீட்டில் அவருக்காக ஒரு ஜீவன் எல்லாவற்றையும் தியாகம் செய்து அவருடனேயே பயணிக்க வேண்டி இருப்பதை நினைத்துக்கொண்டேன்.

மருத்துவரை உருவக்க மட்டும் இல்லை, சாதனைகள் செய்பவர்கள் குடும்பங்களில் அப்பா, சகோதரன், கணவன் என ஏதேனும் ஒரு வடிவில் ஆண் தேவதைகளும், அம்மா, சகோதரி, மனைவி என ஏதேனும் ஒரு வடிவில் பெண் காவல் தெய்வங்களும் இருந்தால் மட்டுமே சாதனையாளர்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு பெருமைப்பட முடியும்.

சாதனை செய்பவர்கள் மட்டுமல்ல, ஊருக்கு சேவை செய்பவர்களின் செயல்பாடுகளுக்குப் பின்னரும் இதே லாஜிக் தான்.

இதை என்னவோ இளம் தலைமுறையினருக்காக மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம். எல்லா வயதினருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 23, 2022 | வெள்ளி

(Visited 1,304 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon