இயல்பில் வாழ்வது வரம்!
அந்தப் பத்திரிகையின் அந்த மாதத்தின் அட்டைப்படமாக என் புகைப்படம். உள்ளே என் நீண்ட நெடும் நேர்காணல்.
அப்போது என்னை சந்திக்க வந்திருந்த ஒரு கிளையிண்டை என் அறையில் அமரச் செய்து, அந்த புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு, நான் அடுத்த அறையில் உள்ள எங்கள் ஆடியோ ரெகார்டிங் பிரிவுக்குச் சென்றிருந்தேன்.
பத்து நிமிடக் காத்திருப்பில் அந்த கிளையிண்ட் என்ன செய்திருந்தார் தெரியுமா?
பத்திரிகையின் அட்டைப் படத்தில் உள்ள என் புகைப்படத்தில் என் முகத்தில் சில கோடுகளை வரைந்து நான் அமைதியாக சிரிக்கும் போஸை, நன்றாக சிரிப்பதைப் போல மாற்றி இருந்தார். ஒரு சிலருக்கு இந்தப் பழக்கம் உண்டு. எந்த புகைப்படம் என்றாலும் அதில் தன் இஷ்டத்துக்கு பேனாவால் கோடுபோட்டு கிறுக்குவது.
அது நல்லதா கெட்டதா என்பதை ஆராய்வதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.
பின் எதற்காக என்று ரொம்பவும் யோசிக்க வேண்டாம். சொல்லத்தானே போகிறேன்.
எனக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது அவர் செய்தது. ஆனாலும் உள்ளடக்கிக்கொண்டு அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தேன்.
சாதாரணமாகவே எனக்கு புத்தகங்களை கசக்குவதோ, அதன் நுனிகளை படிக்கும் சுவாரஸ்யத்தில் கிழித்தெறிவததோ, பக்கங்களை கசக்கி கசக்கி திருப்புவதோ, எச்சில் தொட்டு திருப்புவதோ, அட்டையிலோ அல்லது வெறெங்கோ பேனா பென்சிலால் கிறுக்குவதோ சுத்தமாகப் பிடிக்காது.
இப்போது அவர் என் நேர்காணல் வந்திருந்த புத்தகத்தின் அட்டையில் என் புகைப்படத்திலேயே கிறுக்கி வைத்திருப்பதைப் பார்த்தபோது உள்ளுக்குள் சுனாமி.
‘மேடம் பார்த்தீர்களா? இப்படி சிரித்துக் கொண்டிருப்பதுதான் தன்னம்பிக்கையாளர்களின் அடையாளம்…’ என்று தான் செய்த தவறை தவறு என்றுகூட உணராமல் மேலும் மேலும் அதனை வளர்த்துக் கொண்டே இருந்தார்.
’அப்படியா?’ என நான் என் உடல் மொழியாலேயே கேட்டேன்.
‘ஆமாம் மேடம். நீங்கள் யாரை வேணா எடுத்துக்கோங்க, தன்னம்பிக்கையா இருப்பவர்கள் முகம் முழுக்க புன்னகையுடன் தான் காட்சி அளிப்பார்கள்…’ என்று சொல்லிவிட்டு உதாரணத்துக்கு கூகுளில் இருந்தே சில புகைப்படங்களை காண்பித்தார்.
அவரின் செய்கைகளை கவனித்துக்கொண்டே அவருக்கு புரிய வைக்க எளிமையான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
‘சார், நன்றாக வாய் விட்டு சிரித்தபடி போஸ் கொடுப்பதுதான் தன்னம்பிகையாளர்களின் அடையாளம் என்பது உங்கள் கருத்து என்றால், அவரவர் இயல்பில் அவரவர் வாழ்வதும், அவரவர் இயல்பில் அவர்களை இயங்க விடுவதும் அதைவிட தன்னம்பிக்கை ஊட்டுபவை…’ என்ற போது பதில் ஏதும் சொல்லாமல் என் முகத்தில் என்னையும் மீறி வெளிப்பட்ட சிறு கோபத்தால் தடுமாறினார்.
‘ஆமாம் சார், நம் இயல்பில் இருந்து மாறுபட்டு இயங்கும்போது நம்மையும் அறியாமல் நம் மனதை நாம் கசக்கினால் மட்டுமே அது சாத்தியப்படும். அப்படி செய்யும்போது நம் உடலும் மனமும் சோர்வடையும். நாளடைவில் இதையே தொடர்ந்துகொண்டிருந்தால் அதுவே பெரும் வியாதிக்கெல்லாம் அச்சாரமாகிப் போகும். இதெல்லாம் வெளிப்படையாக தெரியாத நிகழ்வுகள், நம் உள்ளுக்குள் நடைபெறும் உளவியல்கள்…’ என்று புரிய வைப்பதாய் நினைத்துக்கொண்டு பேசினேன்.
இத்தனைக்கும் அப்போது என் வயது 35 தான்.
உதாரணத்துக்கு சிறப்பு விருந்தினராக மேடை நிகழ்ச்சிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆடாமல் அசையாமல் உட்காரும் சமயங்களில் எல்லாம் வீட்டுக்கு வந்ததும் என் உடல் வலிக்க ஆரம்பிக்கும். தலைவலியும் சேர்ந்துகொண்டு பாடாய்படுத்தும்.
காரணம், ஓரிடத்தில் பத்து நிமிடத்துக்கு மேல் உட்காரும் இயல்பே இல்லாத எனக்கு, என் இயல்பில் இருந்து மாறி ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுகூட பெரும் வேதனையான செயல்தான்.
நம் எல்லோருக்கும் உடலும் மனமும் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
‘ஸ்ட்ரெஸ்’ என்பது ஏதோ கவலைகளாலும், பெரும் கஷ்டங்களினாலும், தீராத நோய்களாலும், கடன் தொல்லைகளாலும் வருவது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. ஸ்ட்ரெஸ்ஸுக்கு பெரும் காரணங்கள் தேவையில்லை. நம் இயல்பில் நாம் இயங்க முடியாத சூழல்களே பிரதான காரணமாக இருக்கும்.
கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.
மொத்தத்தில் அவரவர் இயல்பில் அவரவர் அழகு, அவரவர் இயல்பில் இயங்கும் சூழல் வரம்.
That’s all. அவ்ளோ தான்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 24, 2022 | சனிக்கிழமை