பெண்ணுக்கு மட்டும் பட்டா எழுதிக் கொடுத்திருக்கிறதா?

பெண்ணுக்கு மட்டும் பட்டா எழுதிக் கொடுத்திருக்கிறதா?

வாஷிங் மெஷின் வாங்குவதற்காக நானும் அப்பாவும் ஷோரூமுடன் இணைந்திருந்த ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். காலை மணி பத்தரை என்பதால் அப்போதுதான் பணியாளர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். வாசலில் நின்று சல்யூட் அடித்த செக்யூரிட்டி முதல் உள்ளே வணக்கம் சொல்லி வரவேற்ற பணியாளர்களைத் தொடர்ந்து உள்ளே வேலை செய்யும் அத்தனை பேரும் ஆண்களாகவே இருந்தார்கள். பெண்களுக்கு வேறு ஷிஃப்ட் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நினைத்ததை சரிதானா என்பதையும் கேட்டறிந்தேன்.

வாஷிங் மெஷின் பிரிவுக்கு விற்பனையாளர் வரும் வரை கொஞ்ச நேரம் எல்லாவற்றையும் கண்களால் பிரவுசிங் செய்து கொண்டிருந்தேன்.

ஒரு பணியாளர் சுவாமிக்கு மிக அழகாக சாமந்தி மாலை தொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரே ரோஜா மாலை தொடுத்து தங்கள் நிறுவனத்தின் நிறுவனரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அத்தனையிலும் ஒரு நேர்த்தி. அவர் காண்பித்த சாம்பிராணி வாசனையால் கடையே கமகமத்தது. ’ஏ சுப்ரமணி’ என அவரை யாரோ உள்ளே இருந்து அழைத்ததில் அவர் பெயரும் தெரிந்தது.

பத்து நிமிடங்களுக்குள் ஒரு விற்பனையாளர் எங்களிடம் வந்து ஒவ்வொரு பிராண்டாகக் காண்பிக்க ஆரம்பித்து அதன் சிறப்புகளை எல்லாம் பட்டியலிட்டார்.

எல்லாம் ஓகேதான். ஆனால்…

என்ன ஆயிற்று என ரொம்பவெல்லாம் யோசிக்க வேண்டாம். இதோ இப்போ சொல்லிவிடுகிறேன்.

வாஷிங் மெஷின் வைப்பதற்கான ஸ்டாண்ட் குறித்து சொல்லும்போது, ‘சார், ஸ்டாண்ட் இருந்தால்தான் வீட்டில் ‘மேடம்’ பெருக்குவதற்கு வசதியாக இருக்கும். அடியில் உள்ள குப்பைகளை இவங்களால் நன்றாக சுத்தம் செய்ய முடியும்….’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

என் மனதுக்குள் ‘கொத்து பரோட்டா’. அது என்னதது? வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது என்பது பெண்களுக்கு என பட்டா எழுதி வைக்கப்பட்ட வேலையா? ஆண்கள் செய்யக் கூடாதா என்ன?

‘பொதுவாக பெருக்கி சுத்தம் செய்வதற்கு வாஷிங் மெஷினுக்கு ஸ்டாண்ட் இருந்தால் நல்லது‘ என்று சொல்லாமல் ‘மேடம் பெருக்கி சுத்தம் செய்வதற்கு…’ என்று சொன்ன நிமிடத்தில் இருந்து என் காதுகள் தானாக மூடிக் கொண்டன. அவர் பேசிய எதுவுமே காதில் விழவில்லை.

இத்தனைக்கும் அந்த ஷிஃப்ட்டில் கடை முழுக்க ஆண் பணியாளர்கள். பெருக்க, துடைக்க, சுத்தம் செய்ய, பூ தொடுக்க, சாம்பிராணி போட என அத்தனையையும் செய்வது ஆண்களே. ஆனாலும் வீட்டுக்குள் பெண்தான் வேலை செய்ய வேண்டும், பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று காலம்காலமாக போதிக்கப்பட்ட விதியை மட்டும் மனதுக்குள் இருந்து தூக்கி எறிய மாட்டேன் என்கிறார்களே? என நினைத்துக் கொண்டேன்.

ஏதேதோ சொல்ல நினைத்தேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெற்றேன்.

’ஏன் சார், ஆண்கள் பெருக்கினாலும் வாஷிங் மெஷினுக்கு அடியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய ஸ்டாண்ட் வேணுமா? இல்லன்னா…’

அவருக்கு எதுவும் புரியாமல் ‘என்ன மேடம்?’ என்று கேட்டார்.

அவருக்கு நான் பேசுவது தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக, மாஸ்க்கை எடுத்துவிட்டு கொஞ்சம் இயல்பாக்கிக்கொண்ட முகத்துடன் ‘பெண்கள் பெருக்கி சுத்தம் செய்ய வாஷிங் மெஷினுக்கு ஸ்டாண்ட் இருந்தால் நல்லது என்றீர்களே, ஆண்கள் பெருக்கினால் ஸ்டாண்ட் இல்லாவிட்டாலும் குப்பையை அள்ளி சுத்தம் செய்ய வசதியாய் வாஷிங் மெஷின் தானாகவே ஒரு அடி மேலே சென்று இடம் கொடுக்குமா என்ன?’ என்றேன்.

அப்போதும் அவருக்கு எதுவும் புரியவில்லை. அப்பாவும் ‘சரி விடு…’ என ரகசியமாய் சொல்ல ‘நாங்கள் வீட்டில் பேசி முடிவெடுத்துவிட்டு வந்து வாங்குகிறோம்’ எனச் சொல்லி விடைபெற்றோம்.

மேலும் சில கடைகளிலும் ஷோ ரூம்களிலும் இப்போது நாங்கள் வைத்திருக்கும் வாஷிங் மெஷினை விட சிறப்பம்சங்கள் கொண்ட லேட்டஸ்ட் மாடல் இருக்கிறதா என பார்த்தோம். வீடு வந்து சேர்வதற்குள் முதல் கடையில் விற்பனையாளருடன் ஏற்பட்ட அனுபவம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இன்னொரு முக்கியமான விஷயம். விற்பனையாளர் பெண்ணாக இருந்தாலும் ஆண் விற்பனையாளர் எப்படி பேசினாரோ அப்படித்தான் பேசியிருப்பார். காரணம், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெண்ணை வைத்தே பாடம் புகட்டும் அளவுக்கு பொதுபுத்தியில் அவளை கரைத்து முக்கி எடுத்து வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். வேறென்ன சொல்வது?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 17, 2022 | சனிக்கிழமை

(Visited 1,772 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon