இன்னும் கொஞ்சம்…
நேற்று வாஷிங் மெஷின் விற்பனையாளர் ஒருவரின் விற்பனைப் பாங்குடன் பொதுவான மனப்பாங்கையும் இணைத்து எழுதி இருந்தேன். அதற்கு வந்திருந்த பின்னூட்டங்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது.
அந்த இடத்தில் ஒரு பெண் விற்பனையாளர் இருந்தாலும் அவரும் அப்படித்தான் செய்திருப்பார். ஆகவே, நேற்று நான் எழுதி இருந்தது ஆணாதிக்க மனோபாவத்துக்காகப் பொங்கியோ, பெண்ணடிமையை எதிர்த்தோ அல்லது பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தோ அல்ல.
ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையையே சொல்லி இருந்தேன்.
மயிலாப்பூரில் உள்ள பூஜை சாமான்கள், பரிசுப் பொருட்கள், பாத்திரங்கள் என எந்த ஒரு பொருளை வாங்குவதற்காக கடைக்குள் சென்றுவிட்டால் நம்மையே குழப்பும் அளவுக்கு விதவிதமான மாடல்களில் அவை மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
அந்தக் கடைகளுக்கு நானும் அப்பாவும் சென்றால் அங்கு பணி செய்யும் பெண் விற்பனையாளர்கள் என் பின்னாலேயேதான் சுற்றிச் சுற்றி வருவார்கள். ‘என்ன வேண்டும்கா?’, ‘என்ன வேண்டும் மேடம்’, ‘என்னா வேணுங்க’ என விதவிதமான அடைமொழிகளில்.
நான் சொல்வேன், ‘என் அப்பாதான் பார்த்துப் பார்த்து வாங்குவார். அவரிடம் கேளுங்கள். நான் அவருடன் மாரல் சப்போர்ட்டுக்காகவே வந்துள்ளேன். நீங்கள் எப்படி அழகாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள், எப்படி பொருட்களை கீழே விழாமல் லாவகமாக எடுக்கிறீர்கள் என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்…’ என்று சொல்வேன்.
அதுவே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.
அவர்கள் வினோதமாக என்னை ஒரு பார்வை பார்ப்பார்கள். நாங்கள் கிளம்பும் வரை என்னையே ஏதோ விசேஷ ஜந்துபோல பார்ப்பார்கள். பார்ப்பது என்னவோ பெண் பணியாளர்கள்தான். ஒருவருக்கொருவர் சமிக்ஞை செய்து கொள்வார்கள்போல. காரணம் எல்லோரின் கவனமும் என் மீதே இருக்கும்.
அவர்கள் என் அப்பாவுக்கு சாமான்களை எடுத்துக் காண்பிப்பதற்கு உதவினாலும் கண்கள் என்னவோ என் மீதே. செளஜன்யமாக என்னைப் பார்த்து சிரிப்பார்கள். அங்கு ஆண் விற்பனையாளர்களும் இருந்தாலும் அவர்கள் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
பெண் விற்பனையாளர்களின் கவனத்தில் பொங்கித் தெறிப்பது சந்தேகப் பார்வையல்ல, ஆச்சர்யப் பார்வை.
‘எப்படியடா நம் இனம் ஒன்று இப்படி பொறுப்புகளை சுமக்காமல் மகிழ்ச்சியாக இருக்கிறது? கடைக்குள் வந்து வேடிக்கைப் பார்க்கவே வந்துள்ளேன் என்கிறது?’ என என் மீதும், ‘எப்படி இப்படி ஒரு பாசக்கார தகப்பன் இருக்கிறார்’ என என் அப்பாவின் மீதும் கொஞ்சம் பொறாமையும் தெரியும்.
நான்தான் அடிக்கடி சொல்லி இருக்கிறேனே, நம் எல்லைக்குள் கொஞ்சம் பொறாமை இருந்தால் அது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று. அதனால் கொஞ்சம் கர்வத்துடன்(!) அவர்களின் பொறாமையை ரசித்துக்கொண்டே கடைக்குள் உலா வருவேன்.
அவர்களின் வியப்புக்குக் காரணம், பொதுவாக வீட்டு சாமான்கள் வாங்க பெண்கள்தான் வருவார்கள், அவர்களுக்குத்தான் தெரியும், அவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதே. அப்படி நினைக்க வைப்பதற்கு ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் பழக்கி உள்ளார்கள் நம் மக்கள்.
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெண்ணை வைத்தே பாடம் புகட்டும் அளவுக்கு பொதுபுத்தியில் அவளை கரைத்து முக்கி எடுத்துள்ளது இந்த சமூகம்.
விற்பனைப் பணியாளர்களோ அதிகம் படிக்காதவர்கள். தங்கள் உரிமைகளைக் கூட கேட்கும் அளவுக்கான ஞானம் இல்லாதவர்கள். அவர்களிடம் எப்படி உயரிய சிந்தனையை எதிர்பார்க்க முடியும். பொதுபுத்தியில் பேசுவார்கள் என்று ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார்.
அதற்கும் பதில் உண்டு.
நன்கு படித்தவர்களுக்கும், நல்ல பதவியில் இருப்பவர்களுக்கும், புகழில் வெளிச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் என்ன உயரிய சிந்தனையுடனா இருக்கிறார்கள்? அவர்களுக்கு நாம் சொல்வது புரிந்துவிடுகிறதா என்ன? நல்ல படிப்பாளி, புத்திசாலி, திறமைசாலி என்றால் நாம் சொல்லாமலே அல்லவா புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகம் படிக்காதவர்களுக்கு நாம் சொன்னாலாவது புரிந்து கொண்டு சிறப்பாக சிந்திக்க முயல்வார்கள். படிப்பாளிகள் சொன்னாலும் கேட்கமாட்டார்கள், சொல்லாமலும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஈகோ. அது மட்டுமே அவர்கள் மனதுக்குள்.
முந்தாநாள் ஒரு பதிவு நன்றாக இருந்ததால், நான் எதேச்சையாக லைக் செய்தேன். பதிவாளர் நல்ல படிப்பாளி, புகழின் விளிம்பில் இருப்பவர் தான். வயதிலும் மூத்தவரே. அவர் பல வருடங்களுக்கு முன்னர் கொடுத்த நட்பு அழைப்பை சென்ற வாரம்தான் ஏற்றுக்கொண்டேன்.
எனவே, அவர் பதிவுக்கு லைக் செய்வது இதுவே முதன் முறை. உடனே அவர் இன்பாக்ஸ் வந்து ‘நீங்க சி.ஈ.ஓவா…’, ‘அப்போ பெரிய ஆள்தான்…’ என ஆரம்பித்து பல கேள்விகள். அதில் ஒரு கேள்வி. ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’
இதற்கு மேல் அவருடனான விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
அவர் நேற்றும் இன்பாக்ஸ் வந்து குட்மார்னிங் மெசேஜ் செய்தார். ‘ஏன் பதில் அளிக்கவில்லை?’ என்ற துணைக் கேள்வியுடன்.
நான் குட்மார்னிங் மெசேஜ் எல்லாம் திறக்கவே மாட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. விளக்கவும் விருப்பமில்லை. புதிதாக நட்பு அழைப்பை ஏற்பதில் உள்ள சிக்கலில் இதுவும் ஒன்று. என் கட்டுப்பாடுகளை நான் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
நான் அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்காததால், நேற்று காலை அன் ஃப்ரண்ட் செய்துவிட்டு சென்றுவிட்டார். போகட்டும். அவர்தானே வேண்டி விரும்பி நட்பு அழைப்பை கொடுத்தது.
முதல்நாள் கேள்விகளை அள்ளிவீசி, அடுத்த நாள் ஏன் பதில் வரவில்லை என மீண்டும் கேள்வி கேட்டு, அதற்கடுத்த நாள் நட்பு அழைப்பைவிட்டு விலகுதல்.
எத்தனை ‘இன்ஸ்டண்டாகவும், ஈஸியாகவும்’ உள்ளது பழகுவது இவர்களுக்கெல்லாம்.
இவ்வளவுதான் நம் மக்களின் மனப்பக்குவம். அவர்கள் கேட்டதற்கெல்லாம் நாம் பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்காவிட்டால் அவர்களை ‘ஈகோ’ அடித்துக் கொன்றுவிடும். அந்த அடி தாங்காமல் ஓடுவார்கள் அல்லது நம்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லால் அடிப்பார்கள்.
இப்படியாக ‘பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற எல்லையை அவரவர்கள் அவரவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்கிறார்கள்.
முக்கியமான விஷயத்தை சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன். என்னைச் சுற்றி இயங்கும் மனிதர்களுடன் நான் பிணைத்துக்கொண்டுதான் பயணிக்கிறேன். கூடுமானவரை அவர்களிடம் உள்ள நல்லவற்றையே பார்க்கிறேன். அதையே ஆயுதமாக்கி அவர்களிடம் நமக்குக் கிடைக்க வேண்டிய சேவைகளை நல்ல முறையில் பெறவே நினைக்கிறேன்.
அவர்கள் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, புத்திசாலியோ, உழைப்பாளியோ, சோம்பேறியோ… அட அவர்கள் எப்படிப்பட்டவர்களாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. யாரையும் நான் வெறுக்கவும் இல்லை, யாரையும் எதற்காகவும் தலையில் தூக்கிக் கொண்டாடும் மனநிலையும் என்னிடம் கிடையாது.
பெண்ணியம், ஆணியம் என எதையும் பேசவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் மனிதம்.
That’s all. அவ்ளோதான்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 18, 2022 | ஞாயிறு