எதிர்வினை நேர்வினையான சம்பவம்!

எதிர்வினை நேர்வினையான சம்பவம்!

எங்கள் கிளையிண்ட் ஒருவர். மதுரைக்காரர். அங்கேயே சின்னதும் பெரிதுமாய் இரண்டு மூன்று பிசினஸ் செய்கிறவர். சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட்டுக்காக எங்களை அணுகினார்.

முதல் கட்டமாக என்னிடம் விளக்கி அப்ரூவல் பெற்ற பிறகு, சென்னையிலேயே வீடெடுத்துத் தங்கினார். எங்கள் நிறுவனத்துக்கே வந்திருந்து அவருக்கு என்ன தேவையோ அதை எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அமர்ந்து பொறுமையாக விளக்கினார். தினந்தோறும் அப்டேட்டுக்காக ஒரு விசிட் அடித்துவிடுவார். அப்படி விசிட் அடிக்கும்போதெல்லாம் எனது நிர்வாக ஆளுமையைக் கண்டு வியப்பார். அது அவரது பார்வையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியும். பல நேரங்களில் வாய்விட்டும் பாராட்டுவார்.

அவரது ப்ராஜெக்ட் முடிய நான்கைந்து மாதங்கள் ஆனது. இடைப்பட்ட காலத்தில் அவரது வியப்பும், பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தக்கட்டமான ‘பொறாமை’ என்ற ஸ்தானத்தை அடைந்தது.

அதற்குக் காரணம் எங்கள் பொறியாளர்கள் என் அனுமதி இன்றி இம்மியும் நகர்த்த மாட்டார்கள். அது அவருடைய மனதுக்கு இடைஞ்சலாக இருந்தது. மேலும் என் ஆளுமையும் அதற்கு தூபம் போட சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் எரிச்சல்பட ஆரம்பித்தார். ஜாடைமாடையாக ‘சர்வாதிகாரி’ என்று நேரடியாக என்னிடமும் மறைமுகமாக எங்கள் பொறியாளர்களிடமும் சொல்ல ஆரம்பித்தார்.

‘இனி தினமும் அலுவலக வராதீர்கள் சார், நாங்கள் பிராஜெக்ட் முடிந்ததும் சொல்கிறோம். வாரா வாரம் வெள்ளிக்கிழமை அன்று டெமோ கொடுக்கிறோம். அப்போதுதான் பொறியாளர்களும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக வேலை செய்வார்கள்…’ என்று பணிவாகவும் அதே நேரம் உறுதியாகவும் சொல்லி விட்டேன். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் வீடியோ கால் வசதி, ஸ்கைப் வசதிகள் கிடையாது என்பதால் நேரடியாகவே வந்தால் தான் டெமோவெல்லாம் பார்க்க முடியும்.

அவரும் ஒத்துக்கொண்டார். ஒருநாள் போன் செய்து என்னிடம் மற்றொரு ப்ராஜெக்ட் குறித்து பேச வேண்டும் வரலாமா என்று கேட்டுக்கொண்டு என்னை வந்து சந்தித்தார்.

‘உங்களிடமும் உங்கள் ஸ்டாஃப்களிடமும் நான் கொஞ்சம் எரிச்சலாக நடந்துகொண்டமைக்கு சாரி மேடம்….’ என்று ஆரம்பிக்க நான் கொஞ்சம் வியந்தேன்.

‘உங்கள் நிர்வாகத் திறமையும், ஆளுமையும், தொழில்நுட்ப அறிவும் என்னை வியக்க வைத்தது. என் மனைவியுடன் ஒப்பிட ஆரம்பித்தேன். ஒரு நாளில் சமைத்து, வீடு சுத்தம் செய்து, துணிமணிகள் துவைத்து பாத்திரம் தேய்க்க எப்படியும் மூன்று நான்கு மணி நேரம்தான் எடுக்கும். அதனால் அவரையும் என் பிசினஸில் ஏதேனும் ஒன்றில் அவரை ஈடுபட வைக்கலாம் என்றிருக்கிறேன்.’ என்றாரே பார்க்கலாம். எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

‘ரொம்ப சந்தோஷம் சார். உங்கள் மனைவி என்ன படித்திருக்கிறார்?’

‘பி.காம் படித்துவிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸுகள் கற்றுக்கொண்டுள்ளார்…’

‘அடடே, இத்தனை நாட்கள் இவரை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டீர்களே. இனி அவரை டேலி கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் எல்லா பிசினஸ் அக்கவுண்ட்ஸையும் அவரையே பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்…’ என்று சொல்லி நான் எழுதிய டேலி புத்தகத்தை அவர் மனைவிக்கு பரிசாகக் கொடுக்கச் சொல்லி அவரிடம் கொடுத்தேன்.

அவருக்கு அத்தனை சந்தோஷம். இன்னும் கொஞ்சம் பெரிதாக மனதைத் திறந்து அத்தனையையும் கொட்டினார்.

‘நீங்கள் இனி தொடர்ச்சியாக எங்கள் நிறுவனத்துக்கு வராதீர்கள். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை மட்டும் டெமோவிற்கு வாருங்கள் என நீங்கள் சொன்ன பிறகு நானும் பொறுமையாக என் மனதை படித்தேன். எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலக அதுவே காரணம். நான் உங்களிடமும் உங்கள் பொறியாளர்களிடமும் எரிச்சல்படவும் எப்படி ஒரு பெண்ணால் இப்படி திறமையாக நிர்வாகம் செய்ய முடிகிறது என்ற ஈகோவினால்தான் மேடம்… தினமும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வீட்டில் என் மனைவி வீட்டு வேலை செய்யும் போஸ்கள் நினைவுக்கு வந்து அலைகழிக்கும்… பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்வதற்காகவே என போதிக்கப்பட்ட என் மனதுக்கு உங்கள் ஆற்றலை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை….’

நான் இடைமறித்து ‘இப்போ தெளிவாயிட்டீங்க இல்லையா சார்?’ என்றேன்.

‘ரொம்பவே…மிக்க நன்றி, அடுத்த முறை என் மனைவியுடன் உங்களை சந்திக்கிறேன். அவளுக்கு பிசினஸ் ஐடியாக்கள் கொடுக்கவும்’ என்று கைகூப்பி விடைபெற்றார்.

சின்னச் சின்ன பொறாமைகள் நல்லதுதான். அந்தப் பொறாமையை பாசிட்டிவாக பயன்படுத்தும் எல்லையை நாம் அறிந்திருக்கும் வரை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 15, 2022 | வியாழன்

(Visited 1,793 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon