2004-ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு தொழில்நுட்ப இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பிற்கான விருது சான்றிதழும், சிறந்த எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சியே மினி லாரியில்…
முதன் முதலாக நாங்கள் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் அமைத்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
2004-ஆம் வருடம். நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி.
அடிப்படையில் கற்பனை வளமும், எந்த ஒரு விஷயத்தையும் எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் திறனும் கொண்ட நான், படித்ததோ எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். படித்து முடித்து 1992-ம் ஆண்டு, காம்கேர் – ஐ.டி நிறுவனம் மூலம் சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன்கள், ஆவணப்படங்கள் என காலத்துக்கு ஏற்ப படைப்புகளை வெளியிட ஆரம்பித்தேன்.
ஆனாலும், வெறும் கமர்ஷியலாக மட்டுமே என் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே 1992–ம் ஆண்டில் இருந்தே என் தயாரிப்புகள் மூலம் எனக்குக் கிடைக்கின்ற அனுபவங்களை புத்தகங்களாகப் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.
கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் அதிகம் அறிமுகம் ஆகாத காலத்திலேயே கம்ப்யூட்டர் துறையில் அதிரடியாக சாஃப்ட்வேர்களை தயாரித்து வெளியிட்டதால் என் எழுத்துக்களுக்கும் நல்ல வரவேற்பு. எல்லா புத்தக கண்காட்சிகளிலும் என் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு என பதிப்பாளர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள்.
என் முதல் ஆங்கிலப் புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்த பெரிகாம் பப்ளிகேஷன் திரு. ஜெயகிருஷ்ணன் (An Easy Way to Learn C Language), என் முதல் தமிழ் புத்தகத்தை வெளியிட்ட அநுராகம் திரு. நந்தா (தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்), எங்கள் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் என்ற பேனரில் டாக்டர் அப்துல் கலாம், ஓஷோ இவர்கள் வரிசையில் என் பெயர் மற்றும் புகைப்படத்தை பிரிண்ட் செய்து ஊக்கப்படுத்திய கண்ணதாசன் பதிப்பகம் திரு. காந்தி கண்ணதாசன், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் என் எழுத்துத் மற்றும் நிர்வாகத் திறமையை வாய்விட்டு பாராட்டிக்கொண்டே இருக்கும் மணிமேகலை பிரசுரம் திரு. ரவி தமிழ்வாணன் இவர்கள் பதிப்பகத் துறையில் அடிஎடுத்து வைத்திருந்த 1995-களில் என் திறமையை அங்கீகரித்த பதிப்பாளர்கள்.
சாதாரணமாகவே பரபரப்பாக வேலை செய்யும் எனக்கு, ஊக்கமும், பாராட்டும் கிடைத்து விட்டால் கேட்க வேண்டுமா? மாதம் ஒரு புத்தகம் எழுதி வெளியிட ஆரம்பித்தேன். ‘ஆள் வைத்து எழுதுகிறார்’ அப்படி இப்படி என பெயரளவில்(மட்டும்) பெரிய எழுத்தாளர்கள் என பெயரெடுத்தவர்கள் பொறாமையில் பேசும் அளவுக்கு என் வேகம் இருந்தது. ஆள் வைத்து எழுதினால் இந்நேரம் மாதந்தோறும் 100 புத்தகங்கள் வெளியிட்டிருப்பேன் என நினைத்துக் கொள்வேன்.
2000-ம் ஆண்டு முதல் என் நிறுவனம் வாயிலாகவும் புத்தகங்கள் வெளியிடத் தொடங்கினேன். 2004-ம் ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அப்ளிகேஷன் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன். முறையாக அனுமதி பெற்றேன்.
காம்கேர் வாயிலாக ‘அனிமேஷன் நுணுக்கங்கள்’, ‘கம்ப்யூட்டர் சர்வீஸிங்’ என்ற இரண்டு புத்தகங்களை ஒவ்வொன்றிலும் ஆயிரம் காப்பிகள் பிரிண்ட் செய்தேன். அப்போது நான் எழுதி பிற பதிப்பாளர்கள் வெளியிட்ட புத்தகங்கள் டாட் நெட், சி, சி++, ஃப்ளாஷில் கார்ட்டூன், கம்ப்யூட்டர் ரிப்பேரிங் & அசம்ப்ளிங் என வெவ்வேறு பிரிவுகளில் 30 தலைப்புகள் இருக்கும். அவற்றில் ஒவ்வொன்றிலும் 200 காப்பிகள் வாங்கி வைத்துக்கொண்டேன்.
என் அப்பா, அம்மா இருவரும் அலுவலகத்துக்கு 10 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். காம்கேரில் இருந்து 2 பணியாளர்கள். என்னையும் சேர்த்து மொத்தம் 5 பேர். நெய்வேலி செல்லத் தயாரானோம்.
அப்போது எங்களிடன் மாருதி 800 கார் இருந்தது. நாங்கள் செல்ல கார் ரெடியானது. காலை 7 மணிக்கு மினி லாரியில் 2000 புது புத்தகங்கள், 1000 ஏற்கெனவே எழுதிய புத்தகங்கள், ஸ்டாலுக்குத் தேவையான டேபிள், சேர் என அனைத்தும் நெய்வேலிக்கு பிராயாணத்தைத் தொடங்க, அதைத்தொடர்ந்து அப்பாவும், நானும் மாற்றி மாற்றி கார் ஓட்டிச் சென்று நெய்வேலியை அடைய மதியம் 1 மணி ஆனது.
நெய்வேலியே புத்தகக் கண்காட்சிக்கு கல்யாண வீடுபோல கலகலவென்றிருந்தது.
புத்தகத்தோடு சேர்ந்து அதை அடுக்குவதற்கான டேபிள்,சேர் என அனைத்துடனும் மினி லாரி புத்தகக்கண்காட்சி நடைபெறும் இடத்துக்குள் நுழைந்த போது அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அப்போதுதான் ஸ்டால்கள் தயாராகிக் கொண்டிருந்தன. எங்கள் ஸ்டாலில் நாங்கள் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்த போது அக்கம் பக்கம் ஸ்டால்களில் வேலை செய்பவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஸ்டாலுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அங்கேயே வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்ற தாத்பரிகம் அப்போதுதான் தெரிந்தது. எங்களுக்கு அது புது அனுபவமாக இருந்தாலும் அதுவே எங்களுக்கு ஒரு விளம்பரம் போல ஆனது என்றுதான் கூற வேண்டும்.
3000 புத்தகங்களை இறக்கி அடுக்குவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். ‘ஒவ்வொரு புத்தகத்திலும் 50 காப்பிகள் கொண்டு வந்தால் போதும். தேவை என்றால் பிறகு எடுத்துவரச் சொல்லலாம்…’, ‘இதுதான் ஸ்டால் போடுவதில் முதல் அனுபவமா?’, ‘மழை வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்றெல்லாம் பலவாறாக கேள்வி கேட்க, அனைவரது கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது.
புதிய முயற்சியில் புத்தக கண்காட்சியை கண்ட நாங்கள் ஸ்டால் அமைப்பதிலேயே ஆர்வம் மிகுதியில் இருந்தோம். புத்தகங்களை அடுக்கினோம். பில் புத்தகம், விசிட்டிங் கார்ட், பிட் நோட்டீஸ் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து விட்டு சாப்பிட அனுப்பி இருந்த என் நிறுவன ஸ்டாஃப்கள் வரும் வரை காத்திருந்தோம்.
அவர்கள் வந்ததும் ஸ்டால் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டு, அப்பா அம்மாவுடன் ஏற்கெனவே புக் செய்திருந்த ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு ஓய்வெடுத்தோம்.
மாலையில் புத்துணர்வுடன் ஸ்டாலுக்கு வந்து சேர்ந்தோம். நெய்வேலி மக்கள் திருவிழாவுக்கு வருவதைப்போல வர ஆரம்பித்தார்கள். முதல் நாளாக இருந்ததால் கூட்டம் இல்லை. அதுவும் அன்று வேலை நாள் வேறு. வருகின்ற மக்களை விடக்கூடாது என்கின்ற தொனியில் பிட் நோட்டீஸ்களை கொடுத்தோம். எல்லோரும் மிக ஆர்வமாக ‘நீங்கதான் காம்கேர் புவனேஸ்வரியா… உங்கள் புத்தகங்களை நாங்கள் படித்திருக்கிறோம்…’ என்று சந்தோஷமாகச் சொன்னார்கள், என் புத்தகங்களை கையில் எடுத்து ரசித்துப் புரட்டிப் பார்த்தார்கள்… ஒருசிலர் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள்… ஆனால் புத்தகத்தை சனி ஞாயிறில் வரும்போது வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி நகர்ந்து சென்றார்கள். முதல்நாள் சேல்ஸ் எதுவுமில்லை. உள்ளுக்குள் உற்சாகம் கொஞ்சம் குறைந்தது. என் முக வாட்டத்தை உணர்ந்த என் பெற்றோரும், என் ஸ்டாஃப்களும் சனி ஞாயிறில் நல்ல சேல்ஸ் இருக்கும் என ஆறுதல் சொன்னார்கள்.
தினம் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ஸ்டால் என்பதால் காலையில் அப்பா, அம்மாவுடன் நெய்வேலியைச் சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று வருவோம்.
தினமும் அதிகபட்சமாக 50 புத்தகங்கள் விற்பனை ஆனது. நாங்கள் எதிர்பார்த்த சனி, ஞாயிறும் வந்தது. அன்று மக்கள் கூட்டம் அலை மோதின. ஆனால் கூட்டம் நகர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஸ்டாலாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றார்களே தவிர யாரும் ஸ்டாலுக்குள் நுழையவே இல்லை. எல்லோர் கைகளிலும் ஐஸ்க்ரீமும், பாப்கார்னும். குழந்தைகள் கைகளில் பலூன். யாரும் புத்தகம் வாங்க வந்திருப்பதைப் போல தோன்றவில்லை.
ஒரு கட்டத்தில் நானும், அப்பாவும் பிட் நோட்டீஸை வலுக்கட்டாயமாக எங்கள் ஸ்டாலை கடந்து சென்ற மக்கள் கைகளில் திணிக்காத குறையாக கொடுக்க ஆரம்பித்தோம். ம்ஹூம். எதற்கும் யாரும் மசியவில்லை. பலர் பிட் நோட்டீஸை வாங்கி அடுத்த ஸ்டால் வருவதற்குள் கீழே போட்டுச் சென்றார்கள். ஒருசிலர் பஜ்ஜி சாப்பிட்ட தங்கள் எண்ணெய் கைகளை துடைத்துத் தூக்கிப் போட்டார்கள். என் கண்களில் இரத்தக் கண்ணீர் வராத குறைதான்.
இனி அடுத்த சனி ஞாயிறுதான் இந்தக் கூட்டத்தைப் பார்க்க முடியும். இதற்குள் ‘இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளர் விருது’ எனக்குக் கொடுக்க இருப்பதாக புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களிடம் இருந்து தகவல் வந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. கூடவே மற்றொரு சந்தோஷம். அல்லையன்ஸ் பப்ளிகேஷன் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு சிறந்த பதிப்பாளர் விருது.
தினமும் 50-75 புத்தகங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் சேல்ஸ் முடிந்து பில் தொகை பார்த்து, புத்தகங்களை மழை வந்தால் நனையாமல் இருக்க பாதுகாப்பு செய்து அறைக்குத் திரும்பும் அனுபவம் புதிதாக இருந்தது.
இதற்கிடையில் மற்ற ஸ்டால்களை அணுகி சேல்ஸ் பற்றி கேட்டோம். எங்களுக்காவது தினமும் 50 புத்தகங்கள் சேல்ஸ் ஆகி இருந்தன. பெரும்பாலானோருக்கு அதுவும் இல்லை என்பது தெரிந்தது. கொஞ்சம் நிம்மதி ஆனது. அந்த வருடம் சேல்ஸ் மிகக்குறைவு என பேசிக்கொண்டார்கள்.
ஞாயிறு அன்று காலை முதல் இரவு வரை முழுநாளும் கண்காட்சி. கண்காட்சி திடலின் வாசலில் பெரிய விளம்பரம். பாராட்டு பெறும் எழுத்தாளர் என்ற இடத்தில் என் பெயர். வழி நெடுக ‘Welcome to Lignite Hall காம்கேர் புவனேஸ்வரி’ என உயர உயரமான விளம்பர பேனர்கள். இவற்றைப் பார்த்ததும் இத்தனை நாட்கள் நான் பட்ட வருத்தங்கள் அனைத்தும் மறைந்து கண்களில் நீர் பெருகியது. ஞாயிறு அன்று ஒலிபெருக்கியில் ‘சிறந்த எழுத்தாளர் காம்கேர் புவனேஸ்வரி’, ‘சிறந்த பதிப்பாளர் அல்லையன்ஸ் ஸ்ரீனிவாசன்’ என ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி அமைப்பினர் எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் கொடுத்த மரியாதையை விவரிக்க வார்த்தை இல்லை. அன்று விழா ஹாலில் விருது வாங்கிக் கொண்டு வெளியே ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றோம்.
எதிர் சீட்டில் அல்லையன்ஸ் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ‘வாழ்த்துக்கள். ரொம்ப சின்னவரா இருக்கீங்க… அமைதியா இருக்கீங்க… ஆனா பெரிய பெரிய வேலைகளை சப்தமில்லாமல் செய்யறீங்க… வாழ்த்துக்கள்… விடாமல் தொடருங்கள் உங்கள் பணிகளை’ என்றார் சப்தமாக. அவரது குடும்பத்தினரும் கண்களாலேயே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
சாப்பிட்டு முடித்து எல்லோரும் வெளியே வந்தோம். அப்பா அம்மாவைப் பார்த்து ‘நீங்கள் கொடுத்து வைத்த பெற்றோர்’ என அவர் சொன்ன போது நான் இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது என தோன்றியது.
புத்தகக் கண்காட்சியின் கடைசிநாள் அன்று எங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிந்தது.
நெய்வேலி மக்களின் பொழுதுபோக்கே இதுபோன்ற கண்காட்சியும், அதில் அமையும் குதூகல நிகழ்ச்சிகளும்தான். ஏனென்றால் வருடத்துக்கு ஒருமுறைதான் குழந்தைகளுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை காண ஒரு சந்தர்ப்பம் என பலரும் பகிர்ந்துகொண்டார்கள்.
எனவே சேல்ஸுக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமில்லை என தெளிவாக தெரிந்துகொண்டதால் எங்களுக்கு ஒரு மன ஆறுதல். மினி லாரியில் மீண்டும் புத்தகங்களும், டேபிள் சேர்களும் மீண்டும் ஏறி அமர்ந்தன. சென்னையை நோக்கிப் பயணமானோம்.
புதிய அனுபவம் புரியாத சில விஷயங்களைக் கற்றுக் கொடுத்தன.
2004-ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட இந்த விற்பனை அனுபத்திற்குப் பிறகு Retail விற்பனையை குறைத்துக்கொண்டு, Whole Sale விற்பனையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு அனுபவமும் நமக்கு அடுத்தகட்ட வளர்ச்சிதான்….
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
August 8, 2004