வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு!

வாசித்து மகிழ்வதும், படித்துக் கற்றுக்கொள்வதும் ஒன்றல்ல… வெவ்வேறு!

என் நீண்டநாள் வாசகர் ஒருவர் நான் எழுதிய தொழில்நுட்ப நூல் ஒன்றை கேட்டிருந்தார். விகடனில் பிரசுரத்தில் சொல்லி அனுப்பச் சொல்லி இருந்தேன்.

அந்த வாசகர் என்னிடம் போனில் பேசும்போதே கண்ணதாசன் பதிப்பகத்தில் வெளிவந்த என் நிறைய நூல்களை வாசித்திருப்பதாக சொல்லித்தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

விகடனில் இருந்து அவருக்கு புத்தகம் சென்றவுடன் அவரிடம் இருந்து ஒரு தகவல்.

‘என்னதான் இருந்தாலும் கண்ணதாசன் பதிப்பக புத்தகம் போல் இல்லை’

உடனடியாக, ‘அப்படியா சார், நீண்ட காலமாக என் நூல்களை படித்து வருகிறீர்கள். 1996-ல் இருந்து தொழில்நுட்பம் எழுதுகிறேன் & வெளியிட்டும் வருகிறோம். அந்த வகையில் நீண்ட நாள் வாசகராக உங்கள் கருத்துகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எந்த மாதிரி வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என சொன்னால் இனி வரும் நூல்களில் அப்டேட் செய்கிறோம். நன்றி’ என பதில் அளித்தேன்.

இரண்டு தினங்கள் எடுத்துக் கொண்டு, ‘கண்ணதாசன் பதிப்பகத்தில் Paper நல்லா white ஆ இருக்கும், Font size கொஞ்சம் பெரிசா இருக்கும், illustrations நல்லா தெளிவா இருக்கும் மேடம்’ என பதிலளிக்க நான் நன்றி சொன்னேன்.

ஆம். அவர் சொல்வது உண்மைதான். தொழில்நுட்ப நூல்களை வடிவமைக்கும்போது கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கதை, கட்டுரை நூல்களை வெளியிடும் அதே ஸ்டைலில் தொழில்நுட்ப நூல்களை லே அவுட் செய்வது படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

ஏனெனில் கதை, கவிதை, கட்டுரைகள் வாசித்து மகிழ்வதற்காக. ஆனால் தொழில்நுட்பம் என்பது படித்து கற்பதற்காக என்பதால் Font, Font Size, Paper Quality, Picture Clarity என எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் படிப்பதற்கே அயற்சியாக இருக்கும்.

அதிலும் எழுத்துக்கள் வலதுபக்கம் சாய்வாக இருக்கும் ஸ்டைலில் உள்ள ஃபாண்ட்டுகள் படிப்பதற்கு மிக சிரமமாக இருக்கும். இரண்டு பக்கங்கள் படிப்பதற்குள் கண்களை உறுத்தும். அதுவும் வழவழப்பான காகிதங்களில் விளக்கப்படங்களை கொஞ்சம் தெளிவில்லாமல் பிரிண்ட் செய்தால்கூட படித்துப் புரிந்துகொள்வது கடினமாகிவிடும்.

இன்று வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளில் கலர் பக்கங்களில் வேறு கலரில் எழுத்துக்களை பிரிண்ட் செய்து வெளியிடுகிறார்கள். பச்சைக் கலர் பேப்பரில் கருப்பு கலர் எழுத்தில் அச்சிட்டால் படிக்க எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். அச்சுப் புத்தகங்களை வாசிப்பவர்களுக்குத்தான் அவற்றை வாசிப்பதில் உள்ள கஷ்டம் புரியும்.

வெள்ளை காகிதங்களில், தெளிவான ஃபாண்டுகளில், சற்றே பெரிய எழுத்துக்களில், புரியும்படியான விளக்கப்படங்களுடன் வெளிவரும் தொழில்நுட்பப் புத்தகங்கள் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

இது குறித்தெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பதிப்பாளர்களிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்.

நான் எங்கள் நிறுவனம் வாயிலாக வெளியிடும் புத்தகங்களில் இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றுகிறேன்.

இந்தப் பதிவின் மூலம் யாரையும் குறையோ, குற்றமோ சொல்லவில்லை. தொழில்நுட்ப நூல்களை புரியும்படி எழுதுவது ஒரு கலை என்றால், அவற்றை வெளியிடுவது அதைவிட பெரிய கலை.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 12, 2023 | ஞாயிறு

(Visited 796 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon