மண்மணம் மாறாத மஞ்சரி!

மண்மணம் மாறாத மஞ்சரி!

2021-ம் ஆண்டு மஞ்சரி புது அவதாரம் எடுத்தது. நிர்வாகம் வேறொருவர் கைக்கு மாறியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  சுவாமிமலையில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. அதன் அறிமுகக் கூட்டம் சென்னையில் ஏற்பாடானபோது எனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முறையாக அழைப்பு வந்தது. அழைத்தவர், மஞ்சரியை மெருகேற்றி அதன் மண்மணம் மாறாமல் அதனை புது அவதாரம் எடுக்க வைப்பதற்காக அதனை தன்வசப்படுத்திய திரு. ஜெ. ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஜெ.ஆர். கிருஷ்ணன். சொந்த ஊர் கும்பகோணம். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் நன்கு அறிந்தவர்.

மஞ்சரி அலுவலகத்தில் திரு. ஜெ.ஆர். கிருஷ்ணன், எடிட்டர்

நான் அப்போது அலுவலகப் பயணமாக துபாயில் இருந்தேன். போனில் பேசினோம். தன்னைப் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டு, என்னால் தொழில்நுட்பத் தொடர் ஒன்றை எழுதிக் கொடுக்க முடியுமா என கேட்டிருந்தார். அப்போது நான் வேறொரு பத்திரிகையில் தொழில்நுட்பம் குறித்து எழுதிக் கொண்டிருந்ததால் தற்சமயம் இயலாது என்பதை வருத்தத்துடன் சொன்னேன்.

நான் பிறந்த ஊரும் கும்பகோணம்தான் என்பதாலும், மஞ்சரியின் புது நிர்வாகமும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் தலைமையில் சுவாமிமலையில் நடப்பதாலும், என் அம்மாவின் சேகரிப்பிலும் அப்பாவின் முன்னெடுப்பிலும் மஞ்சரியின் பல கட்டுரைகள் எங்கள் கைவண்ணத்திலேயே பைண்டிங் செய்து எங்கள் வீட்டு லைப்ரரியில் வைத்திருப்பதாலும் மஞ்சரி மனதுக்கு இன்னும் மிக நெருக்கமானது.

இடையில் 2022-ஆம் ஆண்டு மஞ்சரியை தொழில்நுட்ப ரீதியாக ஆன்லைனில் கொண்டுவருவது குறித்தும், இ-புத்தகமாக்குவது குறித்தும் போனில் பேசி இருக்கிறோம். வரும் காலத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் மஞ்சரி புது அவதாரமெடுக்கும்.

திருமிகு. ஜெ.ஆர். கிருஷ்ணன், திருமிகு. வி. கிருஷ்ணமூர்த்தி, திருமிகு பத்மாவதி. (இடமிருந்து வலமாக)

அதன் பின்னர் இரண்டு வருடங்கள்  கழித்து, சமீபத்தில் அப்பா அம்மாவுடன் சுவாமிமலையில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்காக  சென்றபோது திரு. ஜெ.ஆர். கிருஷ்ணன் அவர்களை போனில் தொடர்பு கொண்டேன். முதன் முதலில் பேசிய புத்துணர்வில் கிஞ்சித்தும் குறையவில்லை. மஞ்சரி அலுவலகம் இயங்கும் தெருவிற்கு அடுத்தத் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்தான் எங்கள் உறவினரின் திருமணம். அங்கிருந்து மஞ்சரி அலுவலகத்துக்கு எப்படி வருவது என வழி கேட்டபோது, நானே வருகிறேன் என நேரில் வந்து சந்தித்தார்.

மஞ்சரி பத்திரிகையை கொடுப்பவர் திரு. ஜெ.ஆர்.கிருஷ்ணன், பெறுபவர் காம்கேர் கே. புவனேஸ்வரி

நானும் என் பெற்றோருடன் மஞ்சரி அலுவலகம் சென்றேன்.  இவர் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு (2006) பெற்றவர். ராஷ்ட்ரபதிபவனில் கே.ஆர். நாராயணன், சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன், டாக்டர் அப்துல்கலாம் என நான்கு ஜனாதிபதிகளுக்கு தனிச் செயலாளர் ஆக பணிபுரிந்தவர் என்று சொன்னால்தான் தெரியும். அத்தனை எளிமை. ஜனாதிபதிகளின் தனிச் செயலாளராக மட்டுமல்ல, இவரது சர்வீஸில் இவர் ‘Sometimes I handled the role of Ceremonial Officer in charge of President’s outdoor functions, Sometimes Estate Officer of Presidential Estates, Sometimes Legal officer of President’s Secretariat’   என பல்வேறு பதவிகளில் பணியில்  இருந்ததாகவும், விருப்ப ஓய்வுக்குப் பிறகு 2018 வரை, ‘I was involved in solar plant constructions all across the Country and Worked as an Advisor to Sterling & Wilson a Shapoorji Pallonji Group company’ என்றும் கூறினார்.

India 2020 நூலின் எளிய தமிழ் வடிவம் இலக்கு 2020. ஆங்கிலத்தில் எழுதியவர் டாக்டர் அப்துல்கலாம். எளிய தமிழில் ஜெ.ஆர். கிருஷ்ணன்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘India 2020, A Vision for the New Millennium’ என்ற நூலை  ‘இலக்கு 2020 – இளைய சமுதாயத்திற்கென இந்தியா 2020-க்கான ஒரு தொலைநோக்கு’ என்ற தலைப்பில் தமிழில் எளிமையாக எழுதினார். இது இவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்த நூல்களில் மிக முக்கியமானது. இதுபோல ஆங்கிலம் தவிர்த்து பிறமொழி நூல்களையும் தமிழில் எழுதியுள்ளார்.

2005 : திரு. ஜெ. ஆர். கிருஷ்ணன் குடும்பத்தினருடன் டாக்டர் அப்துல் கலாம்! நடுவில் கண்ணாடி அணிந்திருப்பவர் பாலாம்பாள் அம்மா!

2005 ஆம் ஆண்டில் ஒருமுறை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இவரது வீட்டுக்கு வந்திருந்தபோது, இவரது தாயாரை சந்தித்து ‘How did you bring up RK, he is such a good fellow’ என்று புகழ்ந்த தருணத்தை மிக கெளரவமாகக் கருதுகிறார்.  இவருக்கு மட்டுமல்ல, இவரது தாயாருக்கும் பெருமையான தருணம் அல்லவா அது? ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என கேட்ட தாயாக நெகிழ்ச்சியாக உணர்ந்திருப்பார் அல்லவா இவரது தாயார். டாக்டர் கலாம் இவரை ஆர்.கே என்றுதான் அழைப்பாராம்.

இவரது இரண்டு மகள்களும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். பணியில் இருந்தபோது ஏசி அறை, ஐந்து நட்சத்திர ஓட்டல், முக்கியஸ்தர்களின் வலது கை, அரசாங்க உத்யோகத்தின் வசதிகள் என சகல செளகர்யங்களுடன் வாழ்ந்து வந்தவர், இப்போதும் தனக்கு நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும், தனக்கென ஏசி அறை கூட வைத்துக் கொள்ளாமல் மிக எளிமையாக வாழ்ந்து வருவதை பார்ப்பதற்கே ஆச்சர்யம்தான்.

தினமும் மதியம் 1 மணி முதல் 5.30 மணி வரை அம்மாவின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள சுவாமிமலையில் இருந்து கும்பகோணத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவதால் அந்த நேரத்தை ‘அம்மா டியூட்டி’ என்கிறார். ஏசி இல்லாமல் வசிப்பதற்கான காரணத்தைக் கேட்டால் ‘சுகங்களுக்கு பழகிவிட்டால் உடம்பு படியாது’ என அவர் அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்கிறார். சரளமான நுனி நாக்கு ஆங்கிலம், அக்ஷர சுத்தமான தமிழ். நெற்றியில் விபூதி. எளிமையான நடை, உடை, பாவனை. குறிப்பாக புன்னகைத் தவழும் முகம்.

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ இது இவரது தாரக மந்திரமாக இருக்கலாம். இதைக் கூட அவர் தன் வாயால் சொல்லவில்லை. உரையாடிய பத்து பதினைந்து நிமிடங்களில் நானாக உணர்ந்தது.

ஆன்மிகம், அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம் என எந்த சப்ஜெக்ட்டைத் தொட்டுப் பேசினாலும் அதில் ஆழ்ந்த விஷய ஞானம். தொழில்நுட்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிறமொழி இலக்கியங்களிலும் அத்தனை தெளிவு.

அம்மாவின் நேரம்!

பொருளாதார ரீதியாக தன் அம்மாவுக்கு நிறைய செய்துவிட்டாலும் அருகில் இருந்து அம்மாவுடன் நேரம் செலவிட்டு அன்பினால் அம்மாவின் கடைசி காலத்தை நிரப்ப வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாகச் சொல்கிறார். 2018-ல் இருந்து கும்பகோணத்தில் அம்மாவுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இதைக் கூட அவர் ‘பார், என் அம்மாவுக்கு நான் செய்கிறேனாக்கும்’ என்ற தோரணையில் பெருமையாக சொல்லவில்லை. வெகு இயல்பாய் பேச்சுடன் பேச்சாய் சொல்லிக்கொண்டே போனார்.

அது மட்டுமா? இன்னும் எவ்வளவோ சொல்லலாம் இவர் குறித்து. கொஞ்சம் விரிவாக கேட்டால், ‘என்னைப் பற்றி சொல்லிக் கொள்வது கூச்சமாக இருக்கிறது’ என்று சொல்கிறார். ஆனாலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விடாப்பிடியாக கேட்கும்போது சில விஷயங்களை மனம் திறந்து பேசினார்.

பாலாம்பாள் திருமண மண்டபம்

பாலாம்பாள் திருமண மண்டபம்!

தன் அம்மா ‘பாலாம்பாள்’ பெயரில் திருமண மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறார். ஏற்கெனவே இருந்த மண்டபத்தை வாங்கி புதுப்பித்து லாபநோக்கமில்லாமல் எளியவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார். அதனால் சுவாமிமலையில் திருமஞ்சன வீதியில் இயங்கி வரும் ‘பாலாம்பாள்’ திருமண மண்டபத்தில் எல்லா முகூர்த்த நாட்களும் ‘ஹவுஸ்புல்’.

பாலாம்பாள் பாராயணக் கூடம்

பாலாம்பாள் வேதபாராயண டிரஸ்ட் அலுவலகம்!

அந்தத் திருமண மண்டபத்துக்கு நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் அம்மாவின் பெயரிலேயே தர்மகாரியம் செய்யும் நோக்கத்தில், கடந்த நான்கு வருடங்களாக ‘பாலாம்பாள் வேதபாராயண டிரஸ்ட்’ ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த பாராயணக் கூடத்தில், வருடத்தில் குறைந்தபட்சம் ஆறு முறை வேத பாராயணம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு பாராயணமும் 11 நாட்கள் நடக்கும் என்றும் சொல்கிறார்.

வைதீகம் படிப்பவர்களும் வேத பாடசாலை மாணவர்களும் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிள்ளையார் சதுர்த்தி, மகா பெரியவர் ஜெயந்தி என சிறப்பு வழிபாட்டு பண்டிகை தினங்களின் போதும் 11 நாட்கள் பாராயணம் செய்கிறார்கள். ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம் என நான்கு வகையான வேதபாராயணங்களும் நடைபெறும் என்கிறார். 108 கற்களை வைத்து பிரமாண்டமான ஹோமங்களும் நடைபெறும் என்றும், அதற்கான இடமும் இருப்பதாகக் கூறுகிறார்.

பாம்பே டெல்லி போன்ற ஊர்களில் உள்ளவர்கள் தங்கள் மகனுக்குப் பூணல் போடும்போது அல்லது பெண்ணிற்கு கல்யாணம் செய்யும்போது குலதெய்வ வழிபாடாக பாராயணம் செய்ய விரும்பி சுவாமிமலைக்கு வருவார்கள். அவர்களுக்கும் இந்த இடத்தை பாராயணம் செய்வதற்கு கொடுத்து வருகிறார். காஞ்சி மகாப் பெரியவருக்கே சுப்ரமணிய சுவாமிதான் குல தெய்வம் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

பாராயணம் செய்பவர்கள் தங்கி சுத்தமாக சமைத்து சாப்பிட வசதியாக சமையல் அறை, குளியல் அறை என வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார். மேலும் பாராயணம் செய்யும் அறையின் நடுவில் ஒய்யாரமாக ஊஞ்சல் அதன் தெய்வீகத்தைக் கூட்டியது.

இவரது குடும்பத்தின் வைதீக குருவான இவரது தாயாதி தினகரன் சர்மாதான் பாராயணக் கூடத்தை பராமரிக்கிறார் என்றும், அங்கு நடைபெறும் ஹோமங்களையும், வேதபாராயணங்களையும் மேற்பார்வையிட்டு நல்லபடியாக கவனித்து வருகிறார் என்றும் கூறுகிறார்.

இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் விஷயம்தான் ‘மஞ்சரி’.

மஞ்சரியின் உயிர்நாடி

மஞ்சரி அலுவலகத்தில் மே 2023 மஞ்சரி இதழை திரு. ஜெ.ஆர்.கிருஷ்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்பவர் காம்கேர் கே. புவனேஸ்வரி

மஞ்சரி – பெயரிலேயே மங்கலகரத்தைத் தாங்கி இருக்கும் உலகத் தரமான பத்திரிகையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பெயரிலேயே நம் பாரம்பர்யத்தை சொல்லும் பத்திரிகை.

இப்போது இவர்தான் ‘Man Behind Manjari’. மஞ்சரியின் உயிர்நாடி.

மூன்று தலைமுறைகளாக வெளி வந்துகொண்டிருந்த இந்த பத்திரிகை கொரோனா காலகட்டத்தில் மார்ச் 2020 இதழுடன் நின்று போனது. பின்னர் இவர் தலைமையில் மஞ்சரி நிர்வாகம் 2021, நவம்பர் மாதம் உயிர் பெற்று, கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் இருந்து  இயங்க ஆரம்பித்துள்ளது.

வரலாற்று செய்திகள், அறிவியல் கட்டுரைகள், பல்சுவை செய்திகள், இயல், இசை, நாடகம், கதை, கவிதை, நாவல்கள்  என பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் தீவிர வாசகர்கள் வரை மூன்று தலைமுறைகளை தன் வசம் வைத்திருந்த மஞ்சரியில், இப்போது உலக சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கட்டுரைகள், நம் நாட்டு விஞ்ஞானிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என 360 டிகிரியில் பரவலாக அனைத்துப் பிரிவினரையும் ஈர்க்கும் விதமாக படைப்புகள் வெளியாகி வருகிறது. தொழில்நுட்பக் கட்டுரைகளையும் விட்டு வைக்கவில்லை. முதல் இதழிலேயே செயற்கை நுண்ணறிவு கட்டுரையை வெளியிட்டு மஞ்சரியின் புது அவதாரத்துக்கு வித்திட்டது.

சப்தமே இல்லாமல் பெரிய பெரிய விஷயங்கள்

பாலாம்பாள் வேதபாராயணக் கூடத்தில் திரு. ஜெ.ஆர். கிருஷ்ணன், திரு.வி. கிருஷ்ணமூர்த்தி!

பெரிய பெரிய விஷயங்களை சின்னதாக ஒரு சப்தம் கூட இல்லாமல் செய்து வரும் இவரிடம் ‘கொஞ்சம் மார்க்கெட்டிங் செய்தால் இன்னும் பலருக்கு உங்கள் செயல்பாடுகள் தெரிய வருமே’ என கேட்டதற்கு ‘வெளி உலகில் இருந்து பெறுவதற்கு இனி ஒன்றும் இல்லை. என்னிடம் இருப்பதை கொடுப்பதற்காகவே நான் செயல்படுகிறேன்’ என்று அவருக்கே உரிய மனமுதிர்ச்சியான பாணியில் பதில் சொன்னார்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக என் வாழ்க்கைப் பயணம் இனி Inward Journey என்றும், Inner Peace மட்டுமே தான் விரும்பும் வாழ்க்கை என்றும் கூறி முடித்து வேதபாராயாணக் கூடத்துக்கு வருகை தருபவர்களுக்கு மட்டை தேங்காய் வைத்துக் கொடுப்பது வழக்கம் எனகூறி வீட்டுக்கு வருபவர்களுக்கு குங்குமம், வெற்றிலைப் பாக்கு வைத்துக் கொடுப்பதைப் போல் எங்களுக்கு மட்டைத் தேங்காய் வைத்துக் கொடுத்து இனிதே வழி அனுப்பினார்.

எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

(Visited 144 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon