#மலேசியா: உணவு!

உணவு!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக நம் நாட்டில் இருந்து மலேசியா சென்றவர்களுக்கு அங்கிருந்த ஐந்து நாட்களும் உணவுக்கு எந்த குறையுமில்லை. வேளா வேளைக்கு விதவிதமான சுடச்சுட உணவு. அதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளை பொறுப்பேற்றிருந்தது.

நான் யாரையும் குறை சொல்லவில்லை. தாழ்வாகவும் எண்ணவில்லை. உணவு என்பது அவரவர் விருப்பம். அவரவர் தேர்வு. ஆகையினால் இந்தப் பதிவில் என் நிலைப்பாட்டை மட்டுமே சொல்கிறேன். இதனை மனதில் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

உணவைப் பொருத்தவரை சைவம், அசைவம் இரண்டுமே வைத்திருந்தார்கள். அது ஒரு பக்கம். இது பக்கம் என பிரித்துதான் வைத்திருந்தார்கள்.

ஆனால், சைவமும், அசைவமும் ஒரே சமையல் அறையில்தான் தயாராகிறது என்பதாலும், இரண்டு வாசனைகளும் சாப்பிடும் இடத்தில் ஒரு மாதிரி ஒவ்வாமையை உண்டு செய்வதாலும் இரண்டையும் ஒரே இடத்தில் பரிமாறும் இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறேன்.

அது இந்தியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா இப்படி எந்த ஊர் / நாடாக இருந்தாலும்.

அதுவும் மலேசியாவில் டீ விற்பனை செய்யும் இடங்களில்கூட ‘Is it Vegetarian Tea?’ என்று கேட்டுத்தான் சாப்பிட வேண்டி இருந்தது. காரணம், முட்டை வேக வைத்து அதில் டீ போடுகிறார்கள். மேலும் அசைவப் பொருள் கலந்து டீ போடுகிறார்கள். இதை நானாக சொல்லவில்லை. என் கற்பனையும் அல்ல. டீ போடுபவர்களே பொறுமையாக எனக்கு விளக்கினார்கள். அதனால் டீயும் ரூல்ட் அவுட்.

சரி ஐந்து நாட்களும் நான் என்னதான் சாப்பிட்டேன் என கேட்கிறீர்களா?

நான் சென்னையில் இருந்து கிளம்பும்போதே என் பெற்றோர் பாதாம் கேக்கும், அரிசி மாவு பொட்டுக்கடலை மாவில் தயாராகும் ரிப்பன் பகோடாவும் வீட்டிலேயே செய்து ஐந்து நாட்களுக்கு ஐந்தைந்து பாக்கெட்டுகள் கொடுத்திருந்தார்கள். கூடவே ஜீரணத்துக்கு வீட்டில் தயார் செய்த இஞ்சிமுரப்பாவும். இவைதவிர பிஸ்கட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவை இணைப்புப் பண்டங்களாக.

பொது இடங்களில் ஏதேனும் சாப்பிட்டால், அதன் பிறகு இரண்டு ஸ்பூன் மிளகு + பனங்கற்கண்டு சேர்த்து அரைத்த பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க எடுத்துச் சென்றிருந்தேன். பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பொது வழக்கு. அதாவது மிளகு நஞ்சை முறிக்கும் வல்லமை பெற்றது என்பதால் ஃபுட் பாய்சன் வராமல் தடுக்கும்.

தினமும் காலையில் 7 மணிக்கு காலை டிபன். ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த ஹாலுக்குச் சென்றால் அவரவர்கள் விதவிதமாக தாங்கள் விரும்பியதை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் மனநிறைவு. நானும் எனக்குப் பிடித்ததை சாப்பிட்டதால் எனக்கும் மனநிறைவு.

நான் சுடச் சுட வெறும் காபி டிகாஷனை ஒரு கப்பில் எடுத்து அதில் பால் பவுடர், சர்க்கரை இரண்டையும் கலந்து குடிப்பேன். கூடவே நான் கையோடு எடுத்துச் சென்றிருந்த பிஸ்கட்டில் நான்கு. காலை உணவு இவ்வளவுதான்.

நான் தங்கி இருந்த 22 அடுக்கு மாடி ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு தளத்தில் நம் நாட்டுப் பழங்களும், மளிகைப் பொருட்களும் விற்பனை செய்தார்கள். அதில் வாழைப்பழம் வாங்கி எடுத்துக் கொள்வேன். மதிய உணவிற்காக.

காலையில் 11 மணிக்கு நான் கொண்டு வந்திருக்கும் பாதாம் கேக்கில் இரண்டு சாப்பிடுவேன். கொஞ்சமும் சோர்வே இருக்காது.

மதியம் மலாயாப் பல்கலைக்கழகத்தில் விருந்து சாப்பாடு. கல்யாண மண்டபம் போல அவரவர்கள் மிக மகிழ்ச்சியாக சாப்பிட்டார்கள். அந்த மாட மாளிகை போன்ற பல்கலைக்கழகத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து இரண்டு வாழைப்பழங்களுடன் மதிய உணவை முடித்துக் கொள்வேன். வாழைப்பழம் இரண்டு சாப்பிட்டால் உணவு சாப்பிடுவதற்கு இணை.

மூன்று மணி அளவில் அனைவருக்கும் டீயும், சிறு டிபனும். நான் எடுத்துச் சென்றிருந்த ரிப்பன் பகோடாவுடன் டீ இடைவேளையை முடித்துக் கொள்வேன்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் டீ இடைவேளைக்கு இடை இடையே மாநாட்டில் வெவ்வேறு அறைகளில் நடந்து கொண்டிருக்கும் உரைகளை கவனிக்க அமர்ந்து விடுவேன்.

பிறகு மீண்டும் இரவு ராஜ உபச்சார சாப்பாடு. நான் பழங்களுடன் பாதாம் கேக் இரண்டு. இவ்வளவுதான் என் இரவு சாப்பாடு.

இப்படித்தான் மலேசியாவில் இருந்த 5 நாட்களும் என் உணவை கட்டமைத்துக்கொண்டேன்.

மூன்று வேளை அரிசி உணவும், காய்கறிகளும் சாப்பிட்டால் எப்படி புத்துணர்வுடன் இருப்போமோ அதே புத்துணர்வுடன் இருந்தேன். எந்த மாற்றமும் இல்லை என் மனதிலும், உடலிலும்.

சாப்பாட்டுக்காக நாக்கு ஏங்கவுமில்லை. சென்னை விமான நிலையத்துக்கு அப்பா அம்மா வந்திருந்தார்கள் என்னை அழைத்துச் செல்ல. அவர்களுடன் மீனம்பாக்கம் தாண்டியவுடன் பிரமாண்டமாக புதிதாக வந்திருந்த சங்கீதா ஓட்டலில் தோசையும் காபியும் சாப்பிட்ட போதும் ஐந்து நாட்கள் நம் உணவை சாப்பிடாத எந்த ஒரு பரபரப்பும் இல்லை.

என்னுடன் வந்திருந்தவர்கள் சாப்பிடாவிட்டால் உடல் சோர்ந்துவிடும். கொஞ்சமாவது சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். நான், ‘உங்கள் அனைவரையும் விட நான் நன்றாகவே சாப்பிடுகிறேன்… என்ன நீங்கள் அரிசி சாப்பாடு, நான் பாதாம் கேக்கும் பழங்களும்… அவ்வளவுதான். நம் உடலுக்கு எது தேவையோ அதை நம் உடல் தானாகவே தேடி எடுத்துக்கொள்ளும். நாம் நன்றாக சாப்பிடும் நாட்களில் தேவைக்கும் அதிகமாக நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கொழுப்பு உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையான சமயத்தில் அதை கார்போஹைட்டிரேட்டாக மாற்றி நம் உடல் எடுத்துக்கொள்ளும்…’ என வகுப்பெடுப்பேன்.

நம் உடலையும் மனதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒன்று, நாம் வழக்கமாக சாப்பிடும் அரிசி சாப்பாடு சாப்பிடவில்லை என்பதால் ‘நாம் ஏதோ பட்டினியாகக் கிடக்கிறோம்’ என்ற எண்ணம் தோன்றவே கூடாது. அந்த எண்ணம் தோன்றாத வரை நம்மை யாராலும் அசைத்துக்கொள்ளவே முடியாது. நம் மன உற்சாகமும், உடல் தெம்பும் இம்மியும் குறையாது.

நானே அதற்கு உதாரணம்.

என்னடா இது, மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசச் சென்றேனா அல்லது சாப்பிடச் சென்றேனா என யோசிக்கிறீர்களா?

கற்றோரும், சான்றோரும் வீற்றிருந்த பிரமாண்ட அரங்கில் மலேசிய நாட்டுப் பிரதமர் துவக்கி வைத்த மாநாட்டில் துணைப் பிரதமந்திரி, மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என பலரும் பங்கேற்ற மேடையில் நிறைவு விழாவன்று என்னையும் அழைத்து மேடையேற்றி சிறப்பித்தார்கள்.

என் பெயரை மட்டுமே அறிந்து நேரில் சந்திக்காத அன்பர்கள் கூட தானாகவே வந்து ‘நீங்க தானே காம்கேர் புவனேஸ்வரி’ என அறிமுகம் செய்துகொண்டு பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

மலேசியா நாட்டு வானொலி மற்றும் செய்தித்தாள்களில் அவ்வப்பொழுது என்னிடம் சிறு பேட்டியும் எடுத்துக்கொண்டார்கள்.

மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையை கவனிக்க வந்திருந்த அன்பர்களில் சிலர் புகைப்படமும், வீடியோவும் எடுத்து எனக்களித்து அன்பின் மழையில் என்னை மூழ்கடித்தார்கள்.

இவ்வளவு சந்தோஷமான நிகழ்வுகளும் எனக்கு Addon உணவாக அமைந்தது என சொல்லவும் வேண்டுமா?

மீண்டும் சொல்கிறேன், நான் யாரையும் குறை சொல்லவில்லை. தாழ்வாகவும் எண்ணவில்லை. உணவு என்பது அவரவர் விருப்பம். அவரவர் தேர்வு. ஆகையினால் இந்தப் பதிவில் என் நிலைப்பாட்டை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

ஜூலை 2023 

(Visited 1,329 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon