முருகப்பெருமான் அருளாசியுடன்!
மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் (2023 ஜூலை 21-23) முருகப்பெருமான் அருள் ஆசி பெற்றேன்.
மலேசியாவின் சிறப்புகளுள் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோவில். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்தக் கோயிலின் ஸ்தல புராணம்:
இயற்கையாய் உருவான சுண்ணாம்புக் கற்களால் ஆன மிகப் பெரிட குகை இது. இதில் பல அரிய வகை மூலிகைகளும், குரங்குகளும், பறவைகளும் உள்ளன.
இது இந்து மதத்திற்குரிய கோவிலாக இருந்தாலும், இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியை மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் வணங்குவதற்காக வருகிறார்கள். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர், தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோவில் கட்டி உள்ளார். அதன் பிறகு அவர் கனவில் வந்த மாரியம்மன் முருகப்பெருமானுக்கு ஒரு கோயில் கட்ட ஆணையிட்டதாக கூறுகிறார்கள்.
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் கற்பாறை ஒன்றில் வேல் போன்ற உருவம் தெரிவதைப் பார்த்த காயோராகணம் பிள்ளையின் மகன் கே. தம்புசாமி பிள்ளை அங்கு முருகப் பெருமானுக்கு ஆலயத்தை கட்ட முடிவெடுத்து மூங்கிலை வேலாக பாவித்து நிலைநிறுத்தியுள்ளார். அதன் பிறகு 1891 ஆம் ஆண்டு பத்துமலை முருகன் கோயிலை மிக சிறப்பாகக் கட்டி முடித்திருக்கிறார்.
இது தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. அப்போது முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
1938 ஆம் ஆண்டில் முருகனை தரிசிக்க 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது.
தற்போது இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் வெளியில் இருந்தே தரிசிக்கும் வகையில், தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் உயரம் 142 அடி. உலகத்திலேயே மிக உயரமானது என்கிறார்கள்.
இந்தச் சிலை அமைக்கும் பணி 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது.
இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர். தியாகராஜன் தலைமையில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023