வெற்றியின் பின்னணி!
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை (ஆண் / பெண்) ஒரு துறையில் வெற்றி பெற்று பொதுவெளியில் புகழுடன் திகழ்கிறது என்றால் அதற்குக் காரணம் அப்பா அம்மா என இரண்டு பேருடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்போதுதான் முழு மனநிறைவுடன் அந்தத் துறையில் மென்மேலும் முன்னேற கவனம் செலுத்த முடியும்.
குழந்தை என்ற இடத்தில் பொதுவாக எல்லா வயதினரையும் என்றுகூட பொருத்திக்கொள்ளலாம். திருமணம் ஆனவர்களாக இருந்தால் கணவன் அல்லது மனைவியின் ஒத்துழைப்பும், ஒட்டு மொத்தக் குடும்பத்தின் ஆதரவும் மிக மிக அவசியம்.
அப்படி இருக்கும்போது செஸ் வீரர் பிரக்ஞானந்தா குறித்து செய்திகள் / தகவல்கள் / கட்டுரைகள் எழுதும்போது (நெறியாளர்கள்) அவருக்காக அவர் அம்மாதான் தன் ஒட்டு வாழ்க்கையையே சமர்ப்பணம் செய்து முன்னுக்குக் கொண்டு வருவதாக எழுதுகிறார்கள். காரணம் அவர்தான் மகனுடன் பயணிக்கிறார். வெளியில் தெரிவது அதுதான் என்பதால் எழுதுபவர்கள் அதை ஒட்டியே செய்திகளைத் தருகிறார்கள்.
இத்தனைக்கும் பிரக்ஞானந்தா தன் அக்காதான் தனக்கு செஸ் விளையாடுவதற்கு கற்றுக்கொடுத்தார் என்றும் இன்றும் அவரிடம் ஆலோசனைகள் கேட்பதாக பல வீடியோ நேர்காணல்களில் சொல்லி இருக்கிறார். ஆனாலும், நெறியாளர்கள் எழுதும்போது அவர் அம்மா மீது மட்டுமே ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் பாய்ச்சுகிறார்கள்.
அவருக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒருவர்தான் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. அவர் மகளும் செஸ் சாம்பியன் என்று கூறுகிறார்கள். பிரக்ஞானந்தாவுடன் அவர் அம்மா பயணங்களில் இருக்கும்போது வீட்டில் மகளும் அப்பாவும் பள்ளிக்கும் வேலைக்கும் சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். அவரது அப்பாவுக்கு காலில் பிரச்சனை என்பதால் அடிக்கடி பிரயாணங்கள் செய்ய முடியாது என்பது மிக மிக நியாயமான காரணம்.
இத்தனைக்கும் மிக அவசியமான நேரங்களில் அவரும் கூட பயணித்து வருகிறார் என்பதை செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிக்கு அவர் அம்மா, அப்பா மற்றும் அவரது அக்கா அனைவரும் தான் காரணம்.
ஒருவரது வெற்றி என்பது அவரது திறமையினால் கிடைக்கலாம், ஆனால் மொத்த குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவரது வெற்றிப் பயணம் தொடர்ச்சியானதாக இருக்கும். அதுதான் நிதர்சனமும்கூட.
இந்தப் பதிவு செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்காக மட்டும் எழுதவில்லை. வெற்றிப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளேன்.
அவர் குறித்த செய்திகளை படிக்கும்போது எனக்குள் தோன்றிய எண்ண அலைகளை இங்கே பதிவிட்டுள்ளேன். அவர்களிடம் நெருக்கமாகப் பேசிப் பார்த்தால் அவர்கள் கூட நான் இங்கு பதிவிட்டதையேதான் சொல்வார்கள்.
(மது போன்ற போதைக்கு ஆளானவர்கள் வீடுகளில், ஒத்துவராத கருத்து வேறுபாட்டில் உள்ள பெற்றோர் இருக்கும் வீடுகளில் வேண்டுமானால் பெற்றோரில் ஒருவரின் பின்னணியில் வெற்றிப் பாதையில் பயணிக்க வாய்ப்புண்டு)
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 2, 2023 | சனிக்கிழமை