குழந்தையாக மாறிடுவோமே!
ஒரு குடும்ப நிகழ்ச்சி. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தன் வயதை ஒத்தவர்களுடன் விளையாடி ஓய்ந்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து லேகோ வைத்து விளையாட ஆரம்பித்தான்.
நான் அவன் அருகில் சென்று அமர்ந்து ‘உனக்கு ஸ்கூல் நண்பர்கள் எல்லாம் நிறைய உண்டா?’ என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘ஓ. நிறைய உண்டு. என் குளோஸ் ஃப்ரண்ட் இப்போத்தான் யூரோப் கண்ட்ரிக்கு டூர் போயிட்டு வந்தான். சுவசர்லேண்ட் கூலாத் தானே இருக்கும். ஆனா அவன் போனப்ப அனல்காத்து அடிச்சுதாம்…’
‘அப்படியா?’ என நான் ஆவலாகக் கேட்டேன்.
வீட்டில் டிவி ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ‘நீ டிவி பார்க்க மாட்டியா?’ என்றேன்.
‘பார்ப்பேன்’ என சொல்லி ஏதோ சில சானல் பெயர்களைச் சொன்னான்.
‘ஆனா எங்க பாட்டி வீட்டுக்குப் போனா சீரியல் போட்டுடுவாங்க… ‘ என்றான் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.
‘அப்படியா?’ என்றேன்.
‘ஆமாம். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியாது… ‘ என்றான் இன்னும் கொஞ்சம் சோகத்தைக் கூட்டி.
அவன் பேசும் அழகை ரசித்தவாறு நான் அமர்ந்திருக்க, அவனுடனேயே அந்த வீட்டில் வசிக்கும் பாட்டி தாத்தா என்னிடம் வந்து ‘என் பேரன் யாருடனும் அத்தனை சீக்கிரம் பேசிவிட மாட்டான்.
எங்ககிட்டக் கூட இவ்வளவு பேசியதில்லை. உன் கிட்ட இவ்வளவு நேரம் பேசியது ஆச்சர்யமா இருக்கு’ என்று சொன்னதைக் கேட்ட அந்தச் சிறுவன் சிரித்தபடி லெகோவை கோர்ப்பதிலேயே கவனமாக இருந்தான்.
தன் நண்பன் ஐரோப்பா சுற்றுலா சென்றது முதல் தொலைக்காட்சி சீரியல் வரை பேச குழந்தைகளுடன் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் என்ன, நாம் குழந்தையாகிவிட வேண்டும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 4, 2023 | திங்கள்