நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா?

நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா?

நேற்று இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் இறந்த செய்தியைப் பகிர்ந்த பலர், குறிப்பாக ஆண்கள் தாங்கள் என்னவோ அவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியலைப் பார்க்காததைப் போல தங்கள் மனைவிகள் தான் பார்ப்பதாகவும், அப்போது காதில் விழும் வசனத்தை வைத்து மாரிமுத்து நடிகரின் நடிப்பை வியந்ததாகவும் கூறினார்கள்.

அதாவது தொலைக்காட்சி சீரியல்களை வேலை வெட்டி இல்லாதவர்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்றும், குறிப்பாக எட்டு மணி நேரமோ பத்து மணி நேரமோ வெளியிடங்களில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள்தான் பார்க்கிறார்கள் என்றும் (அதாவது வீட்டிலேயே 24 மணி நேரமும் உழைக்கும் பெண்கள்), சீரியல் பார்ப்பது கேவலமான செயல் என்றும் பலவிதமான பொய்யான மாயைகளை மனதுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே தாங்கள் சீரியல்கள் பார்ப்பதே இல்லை என சொல்லிக் கொள்கிறார்கள் (விதிவிலக்குகள் இருக்கலாம்).

மருமகளும் மகனும் அல்லது மருமகனும் மகளும் வேலைக்குச் சென்று விட்ட பிறகு அல்லது பிள்ளைகள் வெளி ஊரில் / மாநிலத்தில் / நாட்டில் இருக்க இங்கே தனிமையில் இருக்கும் வயதில் பெரியோர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்போது எத்தனை நேரம்தான் ஆன்மிக பஜனைகள் கேட்பது? எத்தனை மணி நேரம்தான் செய்திகள் கேட்பது? எத்தனை மணி நேரம்தான் புத்தகங்கள் வாசிப்பது?

சீரியல்களில் வருகின்ற ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் பேசுவதையும் கேட்டபடி பொழுதைக் கழிக்கும்போது அவர்களுக்கு தனிமைச் சுமையாவதில்லை. யாரோ சிலர் தங்களைச் சுற்றி பேசிக் கொண்டிருப்பதைப் போல, சிரித்துக் கொண்டிருப்பதைப் போல, வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வாழ்கிறார்கள். அதுதான் உளவியல் உண்மை.

யாரும் இங்கே சிறு குழந்தை கிடையாது. சீரியல்களை பார்த்து கெட்டுப் போவதற்கு. அதுபோல யாரும் 24 மணி நேரமும் சீரியலில் உட்கார்ந்திருப்பதும் இல்லை. அவர்வர்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றிரண்டு சீரியல்களை பார்க்கிறார்கள். நேரத்தைக் கடத்த, தனிமையை விரட்ட இப்படி பல காரணங்கள்.

பிடித்த புத்தகங்களை வாசிப்பதைப் போல, விரும்பிய யு-டியூப் சேனல்களை பார்ப்பதைப் போல, பிடித்த நண்பர்களுடன் பேசுவதைப் போல், மனதுக்கு நெருங்கிய உறவினர்களுடன் உரையாடுவதைப் போல இப்படி தங்களுக்குப் பிடித்த ஒன்றிரண்டு சீரியல்கள் பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

இப்போதுள்ள உலகில் எந்த ஒரு விஷயமாவது 100% சரியாக உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா சொல்லுங்கள்?

சரி விஷயத்துக்கு வருகிறேன். மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த சீரியல் இந்த அளவுக்கு பிரபலமானதற்குக் காரணம் ஒன்றிருக்கிறது. அதாவது ஆணாதிக்கத்தை இந்த அளவுக்கு உச்சத்துக்குக் காண்பிக்கும் சீரியல் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் (குறிப்பாக மாணவர்கள்) நிறைய பேர் பார்ப்பதாக ஒரு சர்வே எடுத்துப் போட்டிருந்தார்கள் சில மாதங்களுக்கு முன்னர். அந்த செய்தியும் சர்வேயும் உண்மையா பொய்யா என தெரியாது.

ஆனால், அதில் உண்மை இருக்கலாம் என்றே எனக்குத் தோன்றியது. எந்த சீரியலுக்கும் இல்லாத வரவேற்பு, ஞாயிறும் ஒளிபரப்பாகும் அளவுக்கு டிஆர்பி ரேட் எகிறி உள்ளது என்றால் திடீரென எப்படி பார்வையாளர்கள் அதிகரித்திருக்க முடியும்.

சினிமாவில் ஹீரோவின் ஹீரோயிசம் எப்படி சாதாரண சினிமா ரசிகனால் உள்வாங்கப்பட்டு தானே அந்த சாகசம் செய்வதைப் போல் உணரப்படுகிறதோ அதுபோன்ற ஒரு லாஜிக் தான் இங்கும்.

எல்லோரும் சொல்வதைப் போல வழக்கமான பெண்கள் வரவேற்பு என்றிருந்தாலும், இளைஞர்கள் என்ற மாபெரும் கூட்டமும் சேர்ந்துள்ளதால் மட்டுமே பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டிருக்கும் என்பது என் கணிப்பு.

சீரியலோ, சினிமாவோ, புத்தகமோ எதுவானாலும் அவரவர் தேர்வு. ஏனெனில் எல்லாமே மிதமிஞ்சிக் கொட்டிக் கிடக்கிறது. எல்லோராலும் எல்லாவற்றையும் பார்க்கவும் முடிவதில்லை. படிக்கவும் முடிவதில்லை. அவரவர்கள் தேர்வு அவரவர்களுக்கு. இருந்துவிட்டுப் போகட்டுமே.

எதற்காக ‘நானெல்லாம் சீரியலே பார்க்க மாட்டேன்பா’ என்று மற்றவர்களை கூனிக்குறுகச் செய்யும் மனோபாவம்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 9, 2023 | சனிக்கிழமை

(Visited 1,127 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon