சந்திரயான் வெற்றியால் என்ன பயன்கள்?
சந்திரயான் – 3 நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய வெற்றிக்குப் பிறகு உலக அளவில் நம் நாட்டுக்குப் பெருமிதம் என்ற நிலையைத் தாண்டி, அதனால் மக்களுக்கு பயன் என்ன என்பதே பல தரப்பினருக்குமான கேள்வி.
காரணம், சந்திராயன் – 3 வெற்றியில் Ai-ன் பங்களிப்பு இருப்பதாலும், எங்கள் காம்கேர் நிறுவனமும் Ai – குறித்த சாஃப்ட்வேர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாலும் என்னிடம் இருந்து என்ன பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் என்னிடமும் கேள்வி கேட்டார்கள்.
எனக்கு இதற்கு பதில் சொல்லத் தெரிந்தாலும், ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதால் இது சம்மந்தமாக விஞ்ஞானிகள் பலரிடமும் பேசி உள்ளேன்.
இதற்கான விரிவான பதிலை Ai-க்காக நான் எழுதிவரும் புத்தகத்தில் கொடுக்கிறேன்.
அதற்கு முன் இப்போதைக்கு சிறு குறிப்பாக ஒரு கருத்தை முன் வைக்கிறேன்.
நாங்கள் 1992-ல் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கிய போது கம்ப்யூட்டரே நம் நாட்டில் தலை எடுக்கவில்லை. பலருக்கும் சாஃப்ட்வேர் குறித்த தெளிவும் கிடையாது. கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வும் கிடையாது.
அப்போதே, நாங்கள் ஆராய்ச்சிகள் செய்து சி மொழியில் (C Language) அனிமேஷன் எல்லாம் செய்ய புரோகிராம் எழுதி இருக்கிறோம். இன்டர்நெட்டே அறிமுகமாகாத காலத்திலேயே தமிழ் மொழிக்கான ஃபாண்ட்டுகளை உருவாக்கினோம். இதுபோல ஆயிரம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். இங்கு நான் குறிப்பிட்டுள்ள இரண்டும் மாதிரிக்குத்தான்.
அப்போதெல்லாம் எங்களைப் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றியிருக்கும்?
‘இவர்கள் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள்… தேவையில்லாத வேலை… அவரவர்களுக்கு படிப்பு, வேலை இதுவே கேள்விக்குறியாக இருக்கிறது… இவர்கள் பொழுது போகாமல் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்…’
ஆனால் நாங்களும் எங்களைப் போன்றவர்களும் தொழில்நுட்பத்துக்காக செய்த ஆராய்ச்சிகள் தான் இன்று Ai தொழில்நுட்பம் வரை வளர்ந்துள்ளது.
அவ்வளவு ஏன், நான் நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் செய்த நேர்காணல் வரை நான் சொல்லும் என் நிறுவனக் குறிக்கோளையும், மீடியாக்கள் புரிந்துகொள்வதையும் நினைத்தாலே சலிப்பாக இருக்கிறது. ஆனாலும் புரிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நான் கூறுவது:
‘படித்து முடித்து விட்டு ஓரிடத்தில் வேலைக்குச் சென்று அந்த நிறுவனத்துக்காக உழைப்பதைவிட சுயதொழில் செய்ய வேண்டும், கண்டுபிடிப்புகள் நிறைய உருவாக்க வேண்டும். அதனால்தான் நான் பிசினஸ் செய்ய முடிவெடுத்து காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்…’
மீடியாக்கள் புரிந்து கொள்வது:
‘மேடம், நீங்கள் வசதியாக இருப்பதால் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நிறுவனம் தொடங்கி இதுபோல ஆராய்ச்சிகள் செய்து புதுமைகள் எல்லாம் செய்கிறீர்களா?’
நான் என்ன கூறுகிறேன். மீடியாக்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் பாருங்களேன்.
ஆனாலும் புரிய வைக்க வேண்டியது என் கடமை என்பதால் சலிக்காமலும், சளைக்காமலும் பதில் சொல்லி வந்திருக்கிறேன்.
ஒரு தனிநபர் உருவாக்கிய நிறுவனத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கே இத்தனைப் பலன்கள் என்றால், ஒரு நாட்டில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் கடுமையான ஆராய்ச்சிகளுக்குப் பலனாக இந்தப் பிரபஞ்சத்துக்கான ஆதாயங்கள் எத்தனை இருக்கும் என சற்றே யோசித்துப் பாருங்கள்.
காத்திருங்கள். இவை அத்தனைக்குமான பதில், விரைவில் நான் தமிழில் வெளியிட இருக்கும் Ai புத்தகத்தில்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 23, 2023 | செவ்வாய்