இதுதான் தர்மம்!
உலகறிந்த வேளச்சேரி டிராஃபிக். பரபரப்பான காலை நேரம். 9.30 மணி. சிக்னலைக் கடக்க கார் திணறிக் கொண்டிருந்தது.
இடதுபக்கம் பார்த்தேன். சாலை ஓரத்தில் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்திருந்த 30 வயதிருக்கும் ஒருவர், மொபைல் கவர் விற்பனை செய்யும் கடையை அப்போதுதான் திறந்தார். கால்களில் இருந்த செருப்பை கழற்றினார். ஊதுவத்தியை ஏற்றி கடையைச் சுற்றிக் காட்டினார். பின்னர் ஒரு எலுமிச்சைப் பழத்தை நறுக்கி கைகளால் கசக்கி கடையின் நான்கு மூலைகளிலும் பிழிந்தார். பின்னர் அதனால் கடைக்கு மூன்று முறை சுற்றிவிட்டு ஓரமாகப் போட்டார். கடையை தெய்வமாக நினைத்து கைகூப்பி வணங்கினார்.
பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. என் மொபைலின் ஒரு கிளிக்கில் அந்தக் காட்சி புகைப்படமாகியது.
அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு ஒளிரவே, காரை முதல் கியருக்கு மாற்றி ஆக்ஸிலேட்டரை அழுத்தினேன்.
வழி நெடுக சாலையோர இளம் தொழிலதிபரின் தொழில் பக்தியும், பெரிய பெரிய மால்கள் இருக்கும் அந்த சாலையில் தன்னுடைய சிறிய கடையிலும் வியாபாரம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் எனக்குள் இனம் புரியா சந்தோஷத்தை சிதறடித்துக்கொண்டே வந்தது.
கடவுள் பக்தி அல்லது தொழில் பக்தி எதுவாக இருக்கட்டுமே, அந்த பக்திக்குக் கட்டுப்பட்டு தன் கால் செருப்பை கழற்றிவிட்டு வணங்கிய அந்த தர்மம் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இதுதான் பக்தி. நம்பிக்கை. தர்மம். அந்த தர்மத்துக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம், அவரவர் விருப்பம் போல்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 6, 2023 | வெள்ளி