#Ai: அசத்தும் Ai

 

அசத்தும் Ai

அசத்தும் #Ai – வர இருக்கும் புது நூலில் நான் பயன்படுத்தியுள்ள Ai புகைப்படம் இது. மாடல் நான்தான். Ai புகைப்படங்கள் எப்படி உருவாகிறது என்ற தொழில்நுட்ப விவரங்களை புத்தகத்தில் விளக்கி உள்ளேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், யார் வேண்டுமானாலும் Ai புகைப்படங்களை உருவாக்கலாம், ஆனால் Ai புகைப்படங்களை உருவாக்க என்ன மாதிரியான தொழில்நுட்பம் பயன்படுகிறது, எப்படி செயல்படுகிறது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் நூலில் எழுதியுள்ளேன்.

யார் வேண்டுமானாலும் பகோடா சாப்பிடலாம். ஆனால் பகோடா எப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம் தானே.

அந்த நூலில் இருந்து சிறு பகுதி இதோ உங்களுக்காக….

எந்த ஒரு விஷயமும், அது தயாரிப்பு, தொழில்நுட்பம், பொருள், கண்டுபிடிப்பு இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது மக்களிடம் விரைவாகச் சென்றடைய மக்கள் மனதின் ஓரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு சிறு ஏக்கத்தை அது நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆம். அந்த விஷயத்தைத்தான் Ai கையில் எடுத்துள்ளது. பொதுவாகவே நம் எல்லோருக்குமே பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக பளிச்சென நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கும். அது தவறான விஷயம் இல்லை. நாம் பளிச்சென வெளிப்படுவது நம் கம்பீரத்தை ஆளுமையை அதிகரிக்கும். உள்ளுக்குள் ஏதேனும் தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதையும் அழித்துவிடும். இது ஓர் உளவியல்.

இந்த உளவியலை கையில் எடுத்துக் கொண்டுள்ளது Ai. நம்முடைய ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், Ai நம்முடைய பல அவதாரங்களை நாமே வியக்கும் அளவுக்கு கூகுள் செய்யும் வேகத்தைவிட குறைவான நேரத்தில் நம் கண்முன்னே கொட்டி Ai மீது ஒரு தீராக் காதலை உண்டு செய்துள்ளது.

புகைப்படங்களை பேச வைப்பது, டைப் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ப ஓவியங்களை வரையச் செய்வது, வரைந்த ஓவியங்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுத்து பேச வைப்பது என எழுத்து, ஓவியம், ஒலி, ஒளி என ஒவ்வொரு விஷயத்திலும் Ai புகுந்து விளையாடத் தொடங்கி விட்டது.

சாப்பிடுவதற்கு முன் பசியை தூண்டுவதற்காக அல்லது சமன் செய்வதற்காக நாம் சாப்பிடும் பதார்த்தங்களுக்கு அப்பிடைசர் என்று பெயர். பெரும்பாலும் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் நாம் சாப்பிடும் சூப், வற்றல், பகோடா போன்றவை அப்பிடைசர் பிரிவின் கீழ் வரும்.

இதுபோல நம் மக்கள் Ai சென்னும் செயற்கை தொழில்நுட்பத்துடன் இணைந்து ஓடுவதற்கான அப்பிடைசர் தான் Ai புகைப்படங்கள். இனி நம் மக்களை கைகளில் பிடிக்க முடியாது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 6, 2023 | வெள்ளி

(Visited 115 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon