எழுத்தின் வலிமை!
நேற்று ஒரு துணிக் கடையில் பில்லிங் செக்ஷனில், எதிர்பாராதவிதமாக ஒருவர் என் அருகில் வந்து கொஞ்சம் சப்தமாகவே ‘ஹலோ காம்கேர் புவனேஸ்வரி மேடம்…’ என கேட்க நான் சற்று பரபரப்பாக பின் திரும்பிப் பார்த்தேன்.
65+ மதிப்புமிக்க ஒரு பெண்மணி சிரித்த முகத்துடன் எனக்கு கைக் கொடுத்து ‘நான் உங்கள் ஃபேஸ்புக் ஃபேன்…’ என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது சந்தோஷப் பரபரப்பு எனக்குள்ளும் தொற்றிக்கொள்ள அவரது பெயரைக் கேட்டறிந்தேன்.
அவர் டிரான்ஸ்ப்போர்ட் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்ற போது கூடுதல் மரியாதை உண்டானது. காரணம், அந்தக் காலத்திலேயே பணிக்குச் சென்று தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த பெண்களைக் கண்டால் எனக்கு சற்று பெருமையாக இருக்கும்.
அவருடன் வந்திருந்த அவரது மகனுக்கும், மகனின் மகளுக்கும் (ஐந்தாறு வயதிருக்கும் பேத்திக்கும்) என்னை அறிமுகம் செய்து வைத்தார். இதற்குள் என் அப்பா பில்லிங் செக்ஷனில் இருந்து வர நான் அறிமுகம் செய்து வைத்தேன்.
‘எங்களுக்கு காம்கேர் புவனேஸ்வரியையும் தெரியும், அவருடைய அப்பா அம்மாவையும் தெரியுமே, நீங்கள் செய்யும் பக்கோடா, ஓமப்பொடி, அல்வா இவற்றை எல்லாம் மேடம் பெருமையாக எழுதியப் பதிவுகள் வாயிலாக தெரிந்து வைத்திருக்கிறோமே, அப்பா அம்மாவைப் பற்றி எல்லாம் உங்கள் மகள் பெருமையாக எழுதுவது எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது…’ என்று அப்பாவையும் பாராட்டினார்.
என் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டு ’எனக்கு பாராட்டி எழுதவெல்லாம் தெரியாது. ஆனால் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…’ என்று சொல்ல ஆரம்பித்து அவரது மனதுக்குள் இதுநாள் வரை என்னைப் பற்றி வைத்திருந்த அத்தனை பாசத்தையும் கிடைத்த ஒரு சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்தார்.
அவரது சகோதரியும் என் பதிவுகளைப் பின் தொடர்பவர் என்றும் அவர் மூலம்தான் ஃபேஸ்புக்கில் என் அறிமுகம் கிடைத்தது என்றும் சொன்னார். ‘soooooooper’ என என் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் அவரது சகோதரியின் புகைப்படம் என் மனக்கண்ணில் வந்து சென்றது. ஒரு குடும்பமாக என் எழுத்துக்களை வாசிக்கிறார்கள் என்பதை நினைக்க எனக்கும் சந்தோஷமாக இருந்தது.
எங்கள் சம்பாஷனையின் முடிவில் சம்பிரதாய புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
இவ்வளவையும் அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன், ‘அம்மா, எனக்குக் கூட ஃபேஸ்புக் ஃப்ரென்ட் எல்லாம் கிடையாது. ஆனால் உனக்கு ஃபேஸ்புக் ஃப்ரெண்டா?’ ரகசியமாக சொல்வதாக நினைத்துக் கொண்டு வேகமாக சொன்னது அந்தக் கடையில் இருந்த அனைவரது காதுகளிலும் விழ எல்லோரும் அர்த்தப் புன்னகை செய்தார்கள்.
நாங்கள் கடை வாசலுக்கு வந்த பிறகு ‘பேஸ்புக்கில் உங்கள் புகைப்படத்தை நான் அவ்வப்பொழுது எடுத்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன்..’ என்றபோது நான் மிகுந்த வியப்புடன் ‘ஏன் அப்படி?’ என்றேன்.
அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார். அந்த பதிலை அவர் சொன்னபோது அவர் முகத்தில் ஒரு பெருமிதமான நிறைவு இருந்தது.
அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என யூகிக்க முடிகிறதா?
‘படித்த புத்திசாலியான பெண்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பிடிக்கும்!’ இதுதான் அவர் சொன்ன பதில்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 16, 2023 | திங்கள்