கல்வி சொத்து!
பல முறை தொலைபேசியிலும், அலைபேசியிலும், தபாலிலும் தொடர்பு கொண்டு, என்னிடம் உள்ள புத்தகங்களை கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தவர் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.
பொதுவாக ‘இன்னென்ன புத்தகங்கள் தேவை, கிடைக்குமா?’ என்றுதான் கேட்பார்கள். ஆனால் இவரோ ‘இன்னென்ன புத்தகங்கள் என்னிடம் உள்ளன… வேறு என்னென்ன புத்தகங்கள் உள்ளன. அதை சொல்லுங்கள். வாங்க வேண்டும்…’ என்று தன் பேத்தியின் மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். அவரது பேத்தி கையால் எழுதிய அவரிடம் இருக்கும் புத்தகப் பட்டியலைத்தான் இங்கு இணைத்துள்ளேன்.
என் 32 வருட தொழில்நுட்ப அனுபவத்தில் இதுபோல ஒருவர் கேட்பது எனக்குப் புதிது.
ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும், தமிழில் நான் எழுதிய புத்தகங்களை மட்டுமே வாசிப்பதாகவும், மிக எளிமையாக இருப்பதாகவும் கூறுவார்.
அதுபோல், ஒவ்வொரு முறையும் இந்தப் புத்தகம் இருக்கிறதா, அந்தப் புத்தகம் இருக்கிறதா என கேட்டுவிட்டு ‘தயவு செய்து இந்தப் புத்தகங்களை சீக்கிரம் அனுப்பி வையுங்கள். நான் பணம் அனுப்பி விடுகிறேன்…’ என்பார். புத்தகங்கள் வாங்குவதற்கு ‘தயவு செய்து’ என்று கூறி பணிவுடன் கேட்பதெல்லாம் மிக உயரிய குணம்.
யார் இவர்? இவ்வளவு சிலாகித்து எழுதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறையவே இருக்கிறது.
வயது 81, திருச்சியை சேர்ந்தவர். பர்மாவில் பி.ஈ. அக்ரிகல்சர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இந்தியாவில் அரசாங்க உத்யோகத்தில் பணியில் இருந்தவர். இப்போது இவர் என்ன புத்தகம் கேட்கிறாரோ அதை வாங்கித் தருவது இவரது மருமகன் (60+). ஒரு பேத்தி கல்லூரி படிப்பு முடித்துவிட்டு இசையில் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பேத்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்துவிட்டு பணியில் இருக்கிறார்.
இந்த முறை நான் எழுதி இப்போது விற்பனையில் இருக்கும் எல்லா நூல்களையும் இவருக்கு அனுப்பி வைத்த பிறகு, இவரது மருமகனிடம் பேசியபோதுதான் இந்த விஷயங்களை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது நான், பெரியவரைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறது என்று சொல்லி அவரது புகைப்படத்தைக் கேட்டிருந்தேன்.
‘நிச்சயம் மேடம். வாட்ஸ் அப் செய்கிறேன்’ என்று சொன்னதுடன், ‘உங்கள் ஆசிர்வாதமும் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டும்’ என சொன்ன போது உண்மையில் அவர்களின் பண்பு வியக்க வைத்தது.
‘உங்கள் குடும்பத்தை நினைத்தால் மிக ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. படிக்கும் ஆர்வமுள்ள 81 வயது தாத்தா, பிள்ளைக்குப் பிள்ளையாய் பார்த்துக் கொள்ளும் மருமகன், கல்விதான் முக்கியம் என சொல்லி சொல்லி வளர்த்த இரண்டு பெண் குழந்தைகள் என ஒரு மாதிரி அழகான கவிதைபோல் உள்ளது உங்கள் குடும்பம்…’ என்ற போது மிக உற்சாகமாக நன்றி சொன்னார்.
‘குறிப்பாக மாமனாருக்கு புத்தகங்கள் வாங்கித் தருவது சந்தோஷமாக உள்ளது’ என்றபோது ‘ஏதோ எங்களால் முடிந்தது… பெரியவருக்கு 81 வயதாகிறது. இருக்கும் வரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே அவர் கேட்கும் நூல்களை வாங்கித்தருகிறோம்..’ என்றபோது அவர் மீதான மதிப்பு இரட்டிப்பானது.
தங்கள் பேரன் பேத்திகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் தாத்தா பாட்டிகளுக்கு மத்தியில் அறிவை சேர்த்து வைத்துவிட்டுச் செல்ல கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கும் இந்தப் பெரியவரை மானசீகமாக வாழ்த்தி வணங்கினேன்.
பெரியவர் பெயர்: அப்துல் காதர் ஜெய்லானி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 18, 2023 | புதன்