திருக்குறளில் ஆரம்பித்து, திருக்குறளிலேயே நிறைவடைந்த நிகழ்ச்சி!
காரைக்குடி – அழகப்பா பல்கலைக்கழகத்தின் 200 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு முன், Ai பற்றி பேசுவதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று சென்றிருந்த அனுபவம் மனதுக்கு இனிய நிகழ்வாக அமைந்தது. உடன் பெற்றோரும் இருந்ததால் நிகழ்ச்சியின் இனிமையும் பெருமையும் பல மடங்காக உயர்ந்தது.
வாசலில் என் புகைப்படத்துடன் கூடிய, என்னைப்போல நான்கு மடங்கு உயரமான நிகழ்ச்சி குறித்த அறிவிப்புப் பலகை கம்பீரமாக வரவேற்றது.
புரொஜெக்ட்டர் மற்றும் பிரசன்டேஷன்களை பரிசோத்துக் கொள்ளநிகழ்ச்சித் தொடங்குவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே சென்றுவிட்டதால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது அங்கே நான்கு மாணவிகளுடன் ஒரு மாணவர் கலர் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.
என்னைக் கண்டவும் எழுந்து நின்று வரவேற்றனர். செமினார் ஹாலுக்கு அழைத்துச் செல்ல அவர்கள் முனைந்தபோது நான் மறுத்து ‘கோலம் போடுங்க, நான் சென்று கொள்கிறேன்’ என சொல்லிவிட்டு அவர்கள் கோலம் போடும் அழகை ரசித்து அந்தக் காட்சியை என் மொபைலுக்குள் சேகரித்தேன். பின்னர் அவர்கள் அந்தப் புகைப்படத்தை என்னிடம் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.
உள்ளே சென்றதும் பரந்து விரிந்த ஹாலில் இருக்கைகள் எங்களை வரவேற்றன. அதற்குள் தமிழ்த்துறைத் தலைவர் வர, அப்பா அம்மாவை பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தேன். அப்பா அம்மாவை முதல் இருக்கையில் அமரச் செய்து அழகு பார்த்தேன். அந்தக் காட்சியும் புகைப்படமாகியது.
புரொஜெக்ட்டர், லேப்டாப், ஆடியோ வீடியோக்கள் சரியாக வேலை செய்கிறதா என பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சியை தங்கள் அழகு தமிழால் கொண்டு செல்ல பேராசிரியர்கள் வந்தார்கள். மாணவ மாணவிகளும் வர ஆரம்பித்தார்கள். காலி இருக்கைகள் மாணவ மாணவிகளால் நிரம்பின. அரங்கமே இலட்சணமாக மாறியது.
இதற்குள் அழகப்பாப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்துவதற்காக ஒப்பந்தம் போட்டு வருடா வருடம் நிகழ்ச்சியை நடத்தி வரும் வி. வி.எல். மோட்டார்ஸ் யமஹா வீ. விஜயலெட்சுமி வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளை நிறுவனரும் (திருமிகு. வீ. வீரபாண்டியன்) அவரது மகனும், மருகளும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் பெற்றோரை அறிமுகம் செய்து வைத்தேன்.
இந்த நிகழ்ச்சிக்கு ’காம்கேர் புவனேஸ்வரி தான் உரை நிகழ்த்த வருகிறார்’ என பல்கலைக்கழகத்தில் சொன்னவுடன் அவர் ‘அடடா அவங்களா, அவங்களுடைய வாசகர் நான். கம்ப்யூட்டரை தமிழில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே பத்திரிகைகளில் அவர் எழுத்துக்களை வாசித்து வருகிறேன்’ என சொன்னாராம்.
அடுத்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்துவரும் அவர் மருமகளும் (திருமிகு. கலைவாணி) இதே கருத்தைச் சொல்ல தலைமுறைகளைக் கடந்தும் என் எழுத்துக்கள் சென்றடைந்திருப்பது புது உத்வேகத்தைக் கொடுத்தது. ‘தொழில்நுட்பம் இருக்கும் வரை உங்கள் எழுத்துக்கள் நிலைத்திருக்கும்’ என மனமார பாராட்டியதும் உற்சாகம் இன்னும் கொஞ்சம் கூடியது.
இடையில் நான் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்களுடன் சேர்த்து எனது அத்தனை நூல்களையும் சூரியன் பதிப்பகத்தின் மதுரைக் கிளையில் இருந்து கொண்டு வந்து ஸ்டால் அமைத்தனர்.
நிகழ்ச்சித் தொடங்குவதாகக் குறிப்பிட்ட நேரத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் (பேரா. முனைவர். க. ரவி) வருகை புரிந்தார்.
நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் இனிதே அழகு தமிழுடன் தொடங்க வரவேற்புரை நிகழ்த்திய துறைத்தலைவர் பேரா. முனைவர். சு. இராசாராம் அவர்களின் கம்பீரத் தமிழ், அறக்கட்டளை நிறுவனர் திருமிகு. வீ.வீரபாண்டியன் அவர்களின் தொழில்நுட்பம் கலந்த வாழ்த்துரை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் க. ரவி அவர்களின் ஆழ்ந்த அனுபவ உரை என மெல்ல வேகமெடுத்து நிகழ்ச்சியின் லகான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தபோது மணி 11.30.
இதற்கிடையில் ஒரு இனிய ‘சர்ப்ரைஸ்’ மேடையில் அரங்கேறியது. அது என்ன என்று தெரிந்துகொள்ள பொறுமையாக பதிவை முழுமையாகப் படியுங்கள்.
என் முன்னே தமிழ்த்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை மாணவ மாணவிகளும் அமர்ந்திருக்க இரு பிரிவினருக்கும் பொதுவாக பேச வேண்டும் என்பதை மனதில் வைத்திருந்து பேச ஆரம்பித்தேன்.
ஹால் முழுவதும் மாணவ மாணவிகள். அமைதியோ அமைதி. அவ்வப்பொழுது கைத்தட்டல்கள். என் உரையின் நடுநடுவில் ஆங்காங்கே அரங்கம் முழுவதும் எழுந்த சிரிப்பொலி நான் நகைச் சுவையாகவும் பேசி இருக்கிறேன் என்பதற்கு சாட்சியானது.
நான் பேசுவது அவர்களுக்குப் புரிகிறதா இல்லையா என்பதை நான் அவ்வப்பொழுது கேட்டு தெரிந்து கொண்டாலும், அவர்களின் கைத்தட்டல்களும், ஆரவாரமான சிரிப்பொலிகளும் என் உரை அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்கிறது என்பதை உறுதி அளித்தன.
நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் பகுதி. அந்தப் பகுதியில் அறக்கட்டளை நிறுவனரின் மருமகள் (மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணி புரிபவர்) கேட்ட கேள்விகள் என் உரைக்கு மகுடம் சூட்டுவதைப் போல் அமைந்தன. மாணவ மாணவிகள் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஆனால் ஒரு மாணவி நிகழ்ச்சி முழுந்ததும் என்னிடம் தனியாக வந்திருந்து ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். அவருக்கே தெரியாது அவரது கேள்வியின் ஆழம். ‘ஜஸ்ட் லைக் தட்’ கேட்டார். என் உரையையும், கேள்வி பதில் பகுதியையும் தனிப்பதிவாக எழுதுகிறேன்.
நிகழ்ச்சி மேடையில் ஒரு சர்ப்ரைஸ் நிகழ்ந்தேறியது என சொன்னேன் அல்லவா?
பிப்ரவரி 8 என் அம்மாவின் பிறந்த நாள். அதை பேச்சின் ஊடே துறைத்தலைவரிடம் எப்போதோ சொல்லி இருந்தேன். அதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெற்றோரை மேடை ஏற்றி இருவருக்கும் சால்வை போர்த்தி மாணவ மாணவிகள் கரகோஷத்தின் வாயிலாக, பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சியை தெரிவிக்க எல்லோரும் மனமார மானசீகமாக ஆசி பெற்றனர். அரங்கத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே என் பெற்றோரை விட வயதில் சிறியவர்களே.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்’
என்ற குறளுக்கு ஏற்ப மகள் மேடையில் அமர்ந்திருக்க பெற்றோர் அதைக் கண்டு பெருமிதம் அடைவது கொடுப்பினை என அறக்கட்டளை நிறுவனர் பேசினார்.
நான் மட்டும் என்ன சளைத்தவளா?
‘தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்’
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நான் உங்கள் முன் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் என் பெற்றோர் என்று உரையை நிறைவு செய்தேன். அப்போது மணி 1.30.
11.30 மணி முதல் 1.30 மணி வரை, இரண்டு மணி நேரம் மாணவ மாணவிகளை அமைதியாக ஒருவரது உரையை கேட்க வைப்பது பெரும் சவால். அதை என்னால் எளிதாகக் கடக்க முடிந்தது. காரணம் Ai.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்காக உரை நிகழ்த்தி மனதை சார்ஜ் செய்துகொண்டு, காரைக்குடி ஜெய்னிக்கா உயர்தர சைவ ஓட்டலில் வயிற்றுக்கு உணவிட்டு உடலை சார்ஜ் செய்துகொண்டு, காருக்கு டீசல் போட்டு அதை சார்ஜ் செய்துகொண்டு சென்னை நோக்கிப் பயணப்பட்டோம்.
காரைக்குடியில் நாங்கள் சென்றுவந்த அரியக்குடி, இலுப்பக்குடி, மாத்தூர் கோயில்கள், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருக்கோட்டியூர் கோயில்கள், ஆத்தங்குடி, கானாடுகாத்தான் பாரம்பர்ய வீடுகள், திருமயம் கோட்டை, திருமால் கோயில், ஆயிரம் ஜன்னல் வீடு என கோயில்கள், பாரம்பர்ய நினைவுச் சின்னங்கள் போன்ற அனைத்தும் மனம் முழுவதும் நிரம்பி இன்னும் சிறப்பாக செயல்பட உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்த சிறப்பான பயணமாக அமைந்தது.
இதை சாத்தியமாக்கிய என் பெற்றோருக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும், பல்கலைக்கழகத்துக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், துறைத்தலைவருக்கும், மாணவ மாணவிகளுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
பிப்ரவரி 8, 2024 | வியாழன்
காம்கேர் கே. புவனேஸ்வரியின் Ai உரை
நிகழ்ச்சி நிரல்
மீடியா செய்திகள்