நேர்மைதான் கவிதை!
இன்று, என்னிடம் ஒரு வாசகர் பேச விரும்புவதாக உதவியாளர் தகவல் கொடுக்க, மீட்டிங்கை முடித்துவிட்டு அவரிடம் நானே போன் செய்து பேசினேன்.
‘யார் பேசறீங்க… காம்கேர் புவனேஸ்வரி மேடம் தானே?’ என ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டார்.
‘ஆமாம் சார், ஏன் கேட்கறீங்க திரும்பத் திரும்ப?’ என்று கேட்டேன்.
‘இவ்வளவு பெரிய பதவில இருக்கீங்க… நீங்கள் போன் செய்து பேசுவீங்கன்னு நினைக்கல்ல…’ என்றார்.
அவர் சென்ற வாரம் நான் எழுதிய ‘கம்ப்யூட்ராலஜி’ என்ற நூலை கேட்டிருந்தார். பதிப்பகப் பிரிவில் அனுப்பி இருந்தார்கள். சென்ற வாரமே கிடைத்து விட்டதாம். ஆனால் இந்த வாரம் திரும்பவும் அதே புத்தகத்தின் மற்றொரு பிரதி அனுப்பி வைத்திருக்கிறார்கள், தவறுதலாக. அதனால் அந்த இரண்டாம் நூலுக்கான பணத்தை ஜிபே செய்வதாக கூறினார்.
நான் அவரது நேர்மையை வியந்து ‘சார், உங்கள் நேர்மை வியக்க வைக்கிறது…’ என்று பாராட்டியபோது ‘நான் இப்போது போன் செய்ததே, பின்னாளில் ஸ்டாக் சரி பார்க்கும்போது, தவறுதலாக புத்தகத்தை இரண்டாவதாக அனுப்பி வைத்த உங்கள் நிறுவன ஊழியர் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது, அவர் தண்டனை அனுபவிக்கக் கூடாது. அதனால்தான் திரும்பவும் பணம் அனுப்பி அந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன். யாருக்கேனும் பரிசாகக் கொடுக்கிறேன்…’ என்றாரே பார்க்கலாம், அவர் மீதான மதிப்பும், வியப்பும் கூடிக் கொண்டே போனது.
‘மிக்க நன்றி சார், உங்கள் நேர்மையை வியக்காமலும், பாராட்டாமலும் இருக்கவே முடியாது… நன்றி வாழ்த்துகள்’ என்று சொன்னபோது, ‘இதில் என் நேர்மை என்ன இருக்கிறது. உங்கள் நிறுவன ஊழியர் மீதான எம்பதியினால்தான் மீண்டும் கட்டணம் செலுத்துகிறேன்’ என்று சொன்னார்.
‘அந்த உணர்வுக்குப் பெயர்தான் நேர்மை சார்… பிறர் கவனக் குறைவினால் பிழையாக ஒரு செயலை செய்தமைக்கு, அவர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என அவர் நிலையை உங்கள் நிலையாக எண்ணி உணர்வுப்பூர்வமாக செயல்படுகிறீர்களே அதற்குப் பெயர்தான் நேர்மை!’ என்றேன் மனப்பூர்வமாக.
இன்று கவிதை தினமாமே. இன்று போனில் பேசிய நேர்மையான மனிதரின் செய்கையே எனக்குக் கவிதையாக தோன்றுகிறது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 21, 2024 | வியாழன்