நம்மை ஆளப்போகும் Ai [2] : Ai என்பது ரோபோவா? லேடீஸ் ஸ்பெஷல் மே 2024

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்!

மிகப் பலரின் சந்தேகமான ‘Ai என்பது ஒரு ரோபோவா?’ என்பதற்கான பதிலை தெரிந்து கொள்வோம்.

எந்த சாதனத்தில் Ai தொழில்நுட்பத்தை பொருத்துகிறோமோ, அந்த சாதனத்தை ‘Ai சாதனம்’ எனலாம். Ai வாஷிங் மெஷின், Ai கேமிரா, Ai மொபைல், Ai கம்ப்யூட்டர், Ai சாஃப்ட்வேர், Ai ஆப் இப்படி. இதைப்போல ரோபோவிலும் Ai தொழில்நுட்பத்தைப் பொருத்தலாம்.

கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டால் Ai எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

கம்ப்யூட்டர் மூலம் நமக்கு என்ன தேவையோ அதற்கான புரோகிராம்களை எழுதி, அதற்குத் தேவையான இன்புட் தரவுகளையும் கொடுத்து அந்த புரோகிராம்களை இயக்கினால், நமக்குத் தேவையான தகவல்களை அவுட்புட்டாகப் பெறலாம்.

இப்படி புரோகிராம்கள் எழுதுவது, இன்புட் கொடுப்பது, கொடுத்த இன்புட்டின் அடிப்படையில் அந்தந்த புரோகிராம்கள் இயங்கப்பெற்று அவுட்புட்டைக் கொடுப்பது என்ற இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டை சாஃப்ட்வேர் எனலாம். இதுதான் கம்ப்யூட்டர் இயக்கத்தின் அடிப்படை.

உதாரணத்துக்கு, வங்கியில் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேரில், வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களது விவரங்களை இன்புட்டாக சேகரித்து வைத்திருப்பார்கள், கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் மதிப்பெண் சான்றிதழ் சாஃப்ட்வேரில் மாணவ மாணவிகளது விவரங்களை இன்புட்டாக சேகரித்து வைத்திருப்பார்கள்.

கம்ப்யூட்டரின் வருகைக்கு முன் நாம் கைகளால் பராமரித்து வந்த தகவல்களையும் இன்ன பிற விஷயங்களையும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரத்தை சாஃப்ட்வேர்களின் உதவியுடன் செயற்கையாக சிந்திக்க வைத்து இயக்குகிறோம். அதாவது, கம்ப்யூட்டருக்குப் புரியும் வகையில் லாஜிக் எழுதி அதனை சிந்திக்க வைக்கிறோம். இதுவே Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தொடக்கம்தான். ஆம். கம்ப்யூட்டரே Ai-ன் முன்னோடிதான்.

ஆனால் இந்த ஆரம்பப் புள்ளியுடன் நாம் நின்று விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கம்ப்யூட்டர்கள் நாம் சொல்வதை மட்டும் செய்யாமல், அவற்றுக்கு தானாகவே சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அவை முன்பே செய்திருக்கும் பணிகள் மூலம் கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் தானாகவே சில முடிவுகளை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் புகுத்தி, கிட்டத்தட்ட இயந்திரத்தை மனிதனின் மறு உருவமாக மாற்றிக் கொண்டே வருகிறோம். மனிதனுக்கு உதவியாக இருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட Ai ஆராய்ச்சிகள், மனிதனுக்கு நிகரான, அவ்வளவு ஏன் மனிதனையே மிஞ்சிவிடும் அளவுக்கு அதிபுத்திசாலியாக்கி வருகிறோம்.

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். வங்கி சாஃப்ட்வேரில் வங்கி விவரங்களை மட்டுமே பராமரிக்க முடியும். கல்வித்துறைக்கான சாஃப்ட்வேரில் கல்வி சார்ந்த விவரங்களை மட்டுமே பராமரிக்க முடியும். எதற்காக சாஃப்ட்வேரை தயாரிக்கிறோமோ அதற்காக மட்டுமே அதை பயன்படுத்த முடியும்.

இதே லாஜிக்தான் Ai விஷயத்திலும். தரையை பெருக்கி துடைக்க உதவும் ரோபோவிற்குள் தரை பெருக்கும் நுணுக்கங்களை மற்றும் கற்றுக் கொடுத்திருப்போம், ஓட்டல்களில் சர்வராக பணிபுரியும் ரோபோவிடம் ஓட்டல் சர்வருக்கான பணிகள் குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொடுத்திருப்போம், தொலைக்காட்சி சானல்களில் செய்தி வாசிக்கும் Ai அவதார்களிடம் உள்ளீடு செய்கின்ற செய்திகளை படிக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்திருப்போம்.

கற்றுக் கொடுப்பது என்றால் லாஜிக்குகள் மூலம் புரோகிராம்கள் எழுதி சாஃப்ட்வேர்கள் உருவாக்கி ரோபோ / அவதார்களுக்குள் பொருத்துவது என புரிந்துகொள்ளலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், மொபைல் எல்லாமே சாஃப்ட்வேர்களால் இயங்குபவைதான். Ai என்பதும் ஒருவகை சாஃப்ட்வேர் தான். நம் தேவைக்கு ஏற்ப உருவக்க வேண்டும். சாதாரண சாஃப்ட்வேர்கள் நாம் சொல்வதை மட்டும் செய்யும். Ai சாஃப்ட்வேர்கள் அதையும் தாண்டி தானாகவும் சிந்தித்து செயல்படும்.

ஆக, எதற்காக ஒரு ரோபோவை உருவாக்குகிறோமோ அதற்காக மட்டுமே அதனுள் புரோகிராம்களும், தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைத் தாண்டி அவற்றால் எதையும் செய்ய முடியாது. தரை பெருக்கும் ரோபோவிடம் சமையல் செய் என்று சொன்னால் செய்யாது. ஆனால் தரை பெருக்குவதில் உள்ள அத்தனை விஷயங்களையும் செய்துகாட்டி நம்மை அசத்தும். இவ்வளவுதான் விஷயம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கேரளாவின் தென் மாநிலமான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், Ai ரோபோ ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். அந்த Ai ஆசிரியரின் பெயர் ஐரிஸ் (IRIS). நம் இந்தியப் பாரம்பரிய புடவையில், பார்க்க அச்சு அசலாக பெண் போலவே இருக்கும் ஐரிஸ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அழகாக பதிலளிக்கிறது என்றும், இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் எளிதில் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்வதாகவும் சொல்கிறார்கள். இது கல்வித்துறையில் பெரும் புரட்சிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

இந்த Ai ரோபோ ஆசிரியர் ஐரிஸின் உள்ளே இருக்கும் Ai சாஃப்ட்வேரில் கல்வித்துறையில் எந்தெந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் தரவுகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவற்றை மட்டுமே அந்த ரோபோவால் பாடம் நடத்தவும், சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் முடியும். அதில் சேகரிக்கப்படாத பாடத்திட்டத்தை நடத்தவோ, வழிநடத்தவோ அதனால் செய்ய முடியாது.

இந்தியாவிலேயே முதன் முறையாக Ai அவதார் மூலம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை, தமிழகத்தில் சென்னையில் இயங்கிவரும் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டது என்பதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

அதுசரி, கேரளாவில் Ai ரோபோ டீச்சர், தமிழகத்தில் Ai அவதார் என்று இருவேறு பதங்களில் தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பதை அடுத்த மாதம் சொல்கிறேன்.

 (வரம் தர வரும் Ai)

(Visited 2,421 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon