கடமை எனும் டாப்பிங்!

ஒரு எழுத்தாளர் தனது கட்டுரையில் ஒரு காட்சியை விவரித்து அது குறித்த தன் சிந்தனையை எழுதி இருந்தார். எப்போதோ வாசித்தது. ஆனால் சாராம்சம் மறக்கவில்லை என்பதால் என் வார்த்தைகளில் விவரித்துள்ளேன்.

நிச்சயம் அவர்கள் இளம் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும். ஸ்கூட்டியில் முன்னே பள்ளி சீருடையில் ப்ரீகேஜி படிக்கின்ற வயதில் ஒரு சிறுவன், மகனாக இருக்க வேண்டும். பின்னால் ஒரு இளம் பெண் சுடிதாரில், மனைவியாக இருக்க வேண்டும். ஸ்கூட்டியை ஓட்டி வந்தது முப்பது வயதுமிக்க ஒரு இளைஞர், அவனே குடும்பத் தலைவனாக இருக்க வேண்டும்.

பஸ் ஸ்டாப்பில் தான் இறங்கி மனைவியிடம் ஸ்கூட்டியை கொடுத்துவிட்டு வந்து நின்ற பஸ்ஸில் ஏறி புறப்பட்டான்.

இதுவரை ஓகே. இதற்கு அடுத்து அவர் கொடுத்திருந்த விளக்கங்கள்தான் எழுத்தாளர்களும் கவிஞர்களும் கற்பனை உலகில் மட்டுமே வாழ்க்கிறார்களோ என்ற வழக்கமான கேள்வியை வலு செய்தது.

’பஸ் ஸ்டாப் வரை மனைவி ஸ்கூட்டியை ஓட்ட, தான் பின்னால் அமர்ந்து வர அவனுக்கு ஈகோவாக இருக்கும். அதனால்தான் ஸ்கூட்டியை தான் ஓட்டி வந்தான்…’ – எழுத்தாளரின் மன ஓட்டத்தை இப்படியாக எழுத்துக்களில் விவரித்திருந்தார்.

என் மன ஓட்டம்…

பெரும்பாலான பெண்களுக்கான ஸ்கூட்டிகள் பின்னால் அதிக வெயிட் இருந்தால் வண்டி இழுக்காது. அப்படித்தான் வடிவமைக்கிறார்கள். மேலும் எல்லா பெண்களுக்கும் அதிக வெயிட் வைத்து டபுள்ஸ் ஓட்டும் துணிச்சல் இருக்காது அல்லது வலு இருக்காது. வண்டி ஸ்கிட் ஆகி கீழே விழுந்துவிடுமோ என்ற சிறு அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.

இப்போதெல்லாம் ஆண்களுக்கான (இளைஞர்களுக்கான) பைக்குகளில் பின்னால் அவர்களின் காதலியோ அல்லது மனைவியோ மட்டும்தான் அமர்ந்து செல்லும்படி வடிவமைக்கிறார்கள். இதுவரை கவனிக்கவில்லை என்றால் இனி கவனியுங்கள். அவர்கள் வீட்டுக்குத் தேவையான சிறு பொருளை வாங்கினால் கூட அதில் வைக்க இடம் இருக்காது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

அடுத்து, ‘பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன் அவன் மெக்கானிக்கலாக சீட்டில் அமர்ந்து டிக்கட் வாங்குவதிலும் தன் பையை சரியாக வைத்துக் கொண்டு செளகர்யமாக உட்காருவதிலும் கவனமாக இருந்தான். காதல் மனைவியை பார்த்து பாசமாக ஒரு ‘பை பை’ சொல்லவோ அல்லது பரிவான பார்வை பார்க்கவோ இல்லை… அதுபோல அந்தப் பெண்ணும் மெகானிக்கலாக வண்டியை விர்ரென ஓட்டிச் சென்று விட்டாள்…’ மற்றொரு இடத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து என் மன ஓட்டம்.

காலை வேளையில் பரபரப்பில் அந்தப் பெண் தன் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு தானும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் இருக்கலாம். அல்லது வீட்டில் மற்றொரு குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கலாம். அதை கவனிக்க சென்றிருக்கலாம்.

பொறுப்பான குடும்பத்தில் வசிக்கும் ஆணும் பெண்ணும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதெல்லாம் கனவில் கூட நடைபெற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கொருவர் கடுப்படித்துக் கொண்டு சிடுசிடுக்காமல் காலை நேர பரபரப்பைக் கடந்தாலே போதும் என்கின்ற சூழலில் அந்த எழுத்தாளர் எப்படி அந்த இளம் கணவனையும், மனைவியையும் விமர்சித்திருந்தார் என தெரியவில்லை.

அடுத்தடுத்த வேலைகள் தன்னால் செய்யப்பட காத்திருக்கும் சூழலில் முதலில் கடமைதான் முன் நிற்கும். அந்தக் கடமையிலேயே அன்பும், கரிசனமும், முக்கியத்துவமும் கலந்திருக்கும். காதலை வெளிப்படுத்த தனியாகவெல்லாம் ‘ஈ’ என சிரித்து, சினிமாவில் வருவதைப் போல கை அசைத்து பஸ் கண் பார்வையை விட்டு மறையும் வரை காத்திருப்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை.

இவ்வளவு ஏன், குடும்பத்தில் எல்லாவற்றையும் எடுத்துச் செய்யும் முக்கியமான நபரின் (அவர் ஆணோ, பெண்ணோ), அப்பாவோ அம்மாவோ இறந்துவிட்டால் கூட அவர் அழக் கூட நேரமும், திராணியும் இல்லாமல் அடுத்தடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பார். சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்வதிலும், வைதீக காரியங்களுக்கு ஏற்பாடு செய்வதிலும் மற்ற அத்தியாவசிய பணிகளிலும்தான் மும்முரமாக இருப்பார். அதற்காக அவருக்கு அன்போ, பாசமோ இல்லை என்று அர்த்தம் கிடையாது. எல்லாம் முடிந்து தனியாக இருக்கும்போது அழுது தன் ஆற்றாமையை தீர்த்துக் கொள்வார். இதுதான் இயல்பு. இயற்கையும் கூட.

இது ஏன் இப்போது நினைவுக்கு வந்தது என்றால் சமீபத்தில் ஒரு டாக் ஷோ பார்த்தேன்.

ஆண் குழந்தைகளை விரும்புவோர் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்தில் பெண் குழந்தைக்காக ஏங்குபவர்கள்.

ஆண் குழந்தைகளை விரும்பும் பக்கத்தில் ஒரு பெண் சொல்லிய கருத்துக்கள் ‘இன்னுமா இப்படி?’ என சிந்திக்க வைத்தது.

அவர் கணவர் ஆஃபீஸில் இருந்து வரும்போதே தன் அம்மாவிடம் ‘சாப்பிட்டீங்களாம்மா’, ‘மனைவி செய்யும் சாப்பாடு நல்லா இருக்கா, இல்லைன்னா சொல்லுங்கம்மா ஓட்டலில் வாங்கி வருகிறேன்’ இப்படி அக்கறையாக விசாரிப்பாராம். ஆனால் அந்தப் பெண் தன் அம்மாவை தன் வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடி வைத்திருக்கிறாராம். தினமும் தானே சாப்பாடு கொண்டு கொடுப்பாராம். மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக் கொடுப்பாராம். ஆனால் ‘சாப்பிட்டாயாம்மா?’, ‘நல்லா இருந்துதா?’ என்றெல்லாம் ஒருநாளும் கேட்டதில்லையாம்.

அவர் சொல்ல வந்தது என்னவென்றால் ‘அவர் கணவர் தன் அம்மாவை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார். ஆனால் தான் தன் அம்மாவை அந்த அளவுக்கு பாசத்துடன் கவனிப்பதில்லை’.

இதனால் ஆண்கள் தான் தன் பெற்றோரை அக்கறையாக கவனித்துக் கொள்வார்கள் என்பதால் தனக்கும் ஆண் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தொனியில் பேசிக் கொண்டே சென்றார்.

அவருக்கே அவர் பேசியதில் நியாயம் இருக்கிறதா என நான் நினைத்துக் கொண்டேன்.

அவரது கணவனுக்கும், குழந்தைகளுக்கும், அவரது கணவனின் அம்மாவுக்கும், தன் அம்மாவுக்கும் பார்த்துப் பார்த்து சமைப்பது முதல் வீட்டு வேலை செய்வது வரை அவர்த்தான். அப்படி இருக்க அந்த வீட்டில் அவர் நாள் முழுவதும் பணிகளை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது செய்கின்ற பணிகளில்தான் கவனம் இருக்கும்.

உதாரணத்துக்கு சமையல் செய்யும்போதே அவரவர்களுக்கு ஏற்றாற்போல் உப்பு, புளி, கராம் இவற்றை பார்த்துப் பார்த்து போட்டு அவரவர்களுக்கு பிடித்த டிஷ்ஷை செய்து, பெரியவர்களுக்கு உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தயாரித்து கொடுத்து என சமையலில் அன்பு, பாசம், கருணை இப்படி எல்லாவற்றையும் சேர்த்தே செய்வார்கள்.

அதில் கடமை மட்டுமே ‘டாப்பிங்க்’ போல மேலே தெரியும். மற்றவை எல்லாம் குடத்துக்குள் விளக்காய்.

ஆனால் அவரது கணவன் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வருகிறார். ‘சாப்பிட்டாயா?’ என அன்புடன் விசாரிக்கிறார். அதுவும் அவரது மனைவி சமைத்து கொடுத்த சாப்பாட்டை. ‘நன்றாக இருந்ததா?’ என கூடுதலாக அன்பைக் கொட்டி பேசுகிறார். அதுவும் அவரது மனைவி சமைத்து கொடுத்த சாப்பாட்டின் சுவையைப் பற்றி. ‘ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் அம்மா, நாளை வேறு விதமாக செய்யச் சொல்கிறேன்’ என இன்னும் கொஞ்சம் கூடுதல் கனிவை சேர்க்கிறார். அதுவும் அவர் மனைவி செய்த சாப்பாட்டை விமர்சனம் செய்யாத குறையாக.

இப்படி மற்றவர் (அது மனைவியாகவே இருந்தாலும்) செய்த சாப்பாட்டை பற்றி தன் அம்மாவிடம் ’சாப்பிட்டாயா’, ‘பிடித்திருக்கிறதா’ என்றெல்லாம் கேட்க யாரால்தான் முடியாது? அவர்கள் தாங்களே 2 மணி நேரம் சமையல் அறையில் நின்று சமைத்து பரிமாறும்போதும் அதே அக்கறை அவர்கள் வாயில் இருந்தும், மனதில் இருந்தும் வருமேயானால் அவர்களை என்னால் ‘என்ன ஒரு கனிவான அணுகுமுறை, இப்படியல்லவா ஒரு மகன் இருக்க வேண்டும்’ என பாராட்ட முடியும்.

உணவை சமைப்பவர்களுக்கும், அதை பரிமாறுபவர்களுக்கும், அதற்குப் பின் உள்ள அடுப்படி வேலைகளை செய்பவர்களுக்கும் கடமை மட்டும்தான் முன்னே நிற்கும். பாசம், அன்பு, கருணை, காதல் கத்தறிக்காய் எல்லாவற்றையும் சமையல் செய்யும்போதே அதில் கலந்துவிடுவதால் தனியாக அவர்கள் வாய் விட்டு கேட்டு விசாரிப்பதில்லை.

இதுகூட தெரியாமல் அந்தப் பெண் தான் அன்பாக தன் தாயிடம் ‘சாப்பிட்டாயா?, நன்றாக இருந்ததா?’ என விசாரிப்பதில்லை என தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 31, 2024 | புதன்

(Visited 1,028 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon