பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்!

பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்!

வண்ணமயமான நவராத்திரி அலங்காரம் கலைந்த நங்கநல்லூர் சாலைகள் முற்றிலும் வெறுமைக் கோலம். ஆனாலும், ஆஞ்சநேயர் கோயில் அருகில் மட்டும் ஓரிரு கடைகளில் நான் உள்ளே போக மாட்டேன் என கொலு பொம்மைகள் அடம் பிடிக்கும் குழந்தைகள் போல வரிசை கட்டி வீற்றிருந்தன. பூஜை சாமான் ஒன்று வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். சனிக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை. அப்பா, அம்மா, ஒரு குட்டி தம்பிக்கு ஒரு சுட்டி அக்கா என  குடும்பமாக வியாபாரம் செய்ய தங்கள் கடைக்கு வந்திருந்தார்கள். கடை வாடகை எடுத்து வியாபாரம் செய்யும் அளவுக்கு வசதியானவர்களே. அங்கு நான் கண்ட காட்சிதான் நேற்று முழுவதும் என் மனதின் பின்னணி காட்சி.

தேவையானதை வாங்குவதில் கவனம் இருந்தாலும், என் கண்கள் அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த சுட்டி பெண் மீதுதான். அந்த சுட்டிப் பெண் தன் மடியில் ஒரு குட்டி பூனைக் குட்டியை வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே மொபைலில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த சுட்டிப் பெண்ணும், குட்டிப் பூனையும் வெகுவாக ஈர்க்க, நான் அவள் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தேன். அவள் வீடியோ பார்ப்பதை நிறுத்திவிட்டு என்னுடன் பேச ஆரம்பித்தாள்.

‘இந்தப் பூனைக் குட்டி ரொம்ப அழகா இருக்கே…’

‘தேங்க்ஸ்…’

‘இது ரொம்ப குட்டியா இப்பத்தான் பிறந்த குழந்தை போல இருக்கே…’

‘ஆமாம், 3 மன்த்ஸ் தான்…’

‘இதோட அம்மா எங்கே?’

‘இதோட அம்மா ரொம்ப வீக்கா இருந்ததால நாங்க இத எடுத்து வந்து வளர்க்கறோம்…’

மனதுக்குள் பப்பி, சுப்பி, புஜ்ஜூ, சொஜ்ஜூ என செல்லப் பெயர்களோ அல்லது வாயில் நுழைய முடியாத ஆங்கிலப் பெயர்களோ இருக்கும் என நினைப்புடன், ‘அடடா அப்படியா, இதுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?’ என்றேன்.

அந்தச் சுட்டிப் பெண் சொன்ன பெயர்தான் பூனைக் குட்டியைவிட அழகாக இருந்தது.

‘தங்க மீனாட்சி அம்மன்’

‘ஆ… பெயரும் ரொம்ப அழகா இருக்கே… ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறீர்கள்?’

‘அதுக்குப் பின்னாடி ஒரு ஸ்டோரி இருக்கு…’

‘ம்… ஸ்டோரிய எனக்கு சொல்லாம்னா சொல்லு…’

‘நாங்க இந்தப் பூனையை எடுத்து வந்து கடையில விட்டதும் அது நேரா அந்த அம்மன் மடி மேல போய் ஏறி உட்கார்ந்து கொண்டது. அதனால் அம்மன் பெயர் வைத்திருக்கிறோம்…’ என அங்கிருந்த பெரிய அம்மன் கொலு பொம்மையை காட்டினாள்.

‘ஆஹா, அந்த அம்மன் மீனாட்சி அம்மன் போல் இல்லையே…’ என்றதும் அவள் அம்மா ‘கருமாரி அம்மன், ஆனா நாங்கள் அம்மன் பெயரில் அழகான பெயராக இருக்கட்டும் என தங்க மீனாட்சி அம்மன் என பெயர் வைத்திருக்கிறோம்’ என்றார்.

‘ரொம்ப சந்தோஷமா இருக்கு…’ என்றதும் ‘இவள் கோத்தாஸ் பால் தான் சாப்பிடுவாள், வேறெந்த பால் கொடுத்தாலும் சாப்பிட மாட்டாள்’ என்று சொன்னபடி அருகில் பாலுடன் இருந்த கோத்தாஸ் பேப்பர் கப்பை எடுத்து என்னிடம் காண்பித்தாள்.

‘நீங்கள்தான் அப்படி பழக்கி வைத்திருக்கிறீர்கள்…’ என்றதும் ‘ஆமாம், அருகில் இருக்கும் காபி கடையில் இந்த பால்தான் கிடைக்கிறது…’ என்ற அவளிடம் ‘என்ன படிக்கிறாய், இன்று விடுமுறையா’ என விசாரித்தேன்.

‘ஆமாம்’ என்று சொல்லி தான் படிக்கும் பல கிளைகள் இருக்கும் தனியார் பள்ளியின் பெயரைச் சொன்னாள்.

பரவாயில்லை, நுனி நாக்கு வரை ஆங்கிலம் எட்டிப் பார்த்தாலும் என்னிடம் தமிழில் பேச பிரயத்தனப்பட்டு முழுக்க முழுக்க தமிழில் தடையின்றி பேசிய அவளது பேச்சும், நயமும் அத்தனை அழகு.

கதை முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். இனிதான் கிளைமேக்ஸ்.

‘இதை ஒரு தாத்தா வாங்கிக்கறேன்னு சொன்னார். பாட்டி செத்துப் போயிட்டாங்க. அதனால அவருக்கும் ஒரு கம்பேனியன்ஷிப் இருக்கட்டும் என நினைத்து கொடுக்கலாம் என்றிருந்தோம்…’

‘ம்…’ என அவள் பேசுவதில் இருந்த முதிர்ச்சியையும் வார்த்தை இலாவகத்தையும் ரசித்துக் கொண்டிரிந்தேன்.

’ஆனா, அவர் இது பெண் பூனை என்றதும் வேண்டாம் என சொல்லிட்டார்…’

‘அடடா, அப்படியா ஏன்?’ என்றேன் காரணங்களை நான் யூகித்திருந்தாலும்.

‘பெண் பூனை என்றால் குட்டிப் போடும், கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்கணும் என்றார்…’ என்றபோது இத்தனை நேரம் மன முதிர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த அந்தச் சுட்டிப் பெண்ணின் முகத்தில் சோக கீதம். அவள் சொன்னதை நினைத்து என்னையும் மீறி வந்த சிரிப்பை மிகப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

நன்றாக குழம்பி இருக்கிறாள். பெண் பூனை என்றால் குட்டிப் போடும் அதனால் பராமரிப்பது கஷ்டம் என அந்த பெரியவர் சொல்லி இருப்பார், அதன் தொடர்ச்சியாக, பெண் குழந்தைகளை பாதுகாப்புடன் வளர்ப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பொதுவாக அவர் அவளுடைய பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்திருப்பார். இரண்டையும் சேர்த்து  ‘பூனைக்குக் கல்யாணம் எல்லாம் செய்யணும் கஷ்டம் அதெல்லாம்’ என்று அவள் புரிந்து கொண்டதை நினைத்து ஒரு பக்கம் ரசித்தாலும், மறுபக்கம்  பெண்ணாக இருந்தால் அது பூனையாக இருந்தாலும், மனுஷியாக இருந்தாலும் ஒரே விதமான சிந்தனைகள்தான் என்ற நிதர்சனத்தின் கொஞ்சம் சலிப்பாக இருந்தது.

இதற்குள் சுட்டி சிறுமியின் அம்மா, ‘மடியிலேயே வைத்திருந்தால் பூனைக்குட்டி வளராது. அதோட படுக்கையில் போடலாம்’ என வாங்கி அதற்காகவே அவர்கள் செய்து வைத்திருந்த குட்டி மெத்தையில் படுக்க வைத்தார். கோத்தாஸ் பாலை ஒரு தட்டில் கொஞ்சமாக கொட்டி அதன் வாய் அருகே வைக்க, அது குடித்துவிட்டு படுக்கச் செல்ல எத்தனிக்கையில் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என கேட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

நேற்று முழுவதும் மனதுக்குள் ‘மியாவ் மியாவ்’ தான்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 3, 2024 | ஞாயிறு

#aram_valarppom, #அறம்வளர்ப்போம்
#காம்கேர்கேபுவனேஸ்வரி, #compcarekbhuvaneswari

(Visited 3,049 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon