புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!
சிறுவர் இலக்கிய உலகில் பி. வெங்கட்ராமன் எனும் 90 வயது இளைஞரின் 75 ஆண்டுகால கால பங்களிப்பு!
‘பிவி மாமா’ என்று நெருங்கியவர்களாலும், ‘பிவி சார்’ என்று நண்பர்களாலும், ‘குழந்தை இலக்கியச் செல்வர்’ என இலக்கியவாதிகளாலும் அழைக்கப்படும் பி. வெங்கட்ராமன் அவர்களின் 75 ஆண்டுகால குழந்தை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அவர் குறித்து காம்கேர் கே. புவனேஸ்வரியின் கருத்துக்களை ஆவணப்படுத்துவதில் பெருமை அடைகிறோம்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை இலக்கிய ஆர்வலர் பி. வெங்கட்ராமன் என இரு முதுபெரும் குழந்தை இலக்கிய ஆர்வர்களுடன் தொழில்நுட்ப வல்லுநர், முதன் முதலில் இந்தியாவில் ஐடி நிறுவனம் தொடங்கிய பெண் பொறியாளர், 250 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை எழுதியவர், Ai ஆராய்ச்சியாளர், சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான காம்கேர் கே. புவனேஸ்வரியின் தொழில்நுட்ப அறிவும் இணைந்து குழந்தை இலக்கியத்துக்கு புதுமையான டிஜிட்டல் வடிவம் கிடைத்துள்ளதை மறுக்க முடியாது.
இதற்கான முன்னெடுப்புகளை 2000 – ஆம் ஆண்டே ஆரம்பித்து குழந்தை இலக்கியத்துக்கு என தனிப்பாதை அமைத்ததில் பெரும்பங்கு வகித்தவர் காம்கேர் கே. புவனேஸ்வரி.
குழந்தைக் கவிஞரின் பல்வேறு படைப்புகளை ஆடியோ, வீடியோ, அனிமேஷன் என டிஜிட்டலில் கொண்டு வந்ததில் காம்கேர் புவனேஸ்வரிக்கு ஊக்க சக்தியாக இருந்த குழந்தை இலக்கிய ஆர்வலர் உயர்திரு. பி. வெங்கட்ராமன் குறித்து காம்கேர் கே.புவனேஸ்வரியின் பார்வை இதோ உங்களுக்காக!
காம்கேரின் அறிமுகம்!
என்னைப் பற்றிய சிறு அறிமுகம். கடந்த 32 ஆண்டுகாலமாக (1992-ல் இருந்து) ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ (ComPcare Software) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் நம் நாட்டில் அறிமுகம் ஆவதற்கு யோசித்துக்கொண்டிருந்த ஆரம்ப காலக்கட்டத்திலேயே கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்று (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கினேன். பெற்றோரின் ஆசியுடன் என் உழைப்பு, கல்வி, திறமை இவை மூன்றையும் அடித்தளமாக்கினேன். ‘நம் நாட்டில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றேன். இடைப்பட்ட காலத்தில் எம்.பி.ஏ-வும் முடித்தேன்.
எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணி சாஃப்ட்வேர் தயாரிப்பு. பின்னர் அனிமேஷன், ஆவணப்படம், பதிப்பகம் என பல பிரிவுகள் அறிமுகமானது. இன்று நம் மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வரும் Ai ஐ எல்லாம் நாங்கள் எங்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பில் 1992 களிலேயே Ai குறித்த ஆராய்ச்சிகளையும் அது சார்ந்த பல்வேறு தயாரிப்புகளையும் வெளியிடும்போதே அறிமுகப்படுத்தினோம். நாங்கள் தயாரிப்பதை இந்த சமுதாயமும் பயன்படுத்துமாறு பொதுவெளியிலும் வெளியிட்டு சிறப்பித்தோம். அந்த வகையில் Ai யின் முன்னோடிகளில் நாங்களும் மிக முக்கிய அங்கத்தினர் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
எல்லாம் சரி, குழந்தை இலக்கியச் செல்வர் பி. வெங்கட்ராமன் அவர்கள் எப்படி காம்கேருக்குள் வந்தார் என தெரிந்துகொள்ளும் முன்னர் அவரது சிறப்பை தெரிந்துகொள்ளுங்களேன்.
உயர்திரு. பி. வெங்கட்ராமனின் சிறப்பு இயல்பு!
கோவில்களுக்குச் செல்கிறோம். கர்ப்பகிரஹத்துக்குள் இருக்கும் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பெயர், ராசி, நட்சத்திரம் வாங்கிச் சென்று ஸ்வாமிக்கு பூஜையும் அர்ச்சனையும் செய்து அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேற பிராத்தனை செய்து அர்ச்சனை தட்டை பக்தர்களிடம் கொடுப்பார்கள். ஸ்வாமிக்கும், பக்தர்களுக்கும் இடையே ஒரு பி.ஆர்.ஓ போல செயல்படுவார்கள் அர்ச்சகர்கள்.
இதே ஒப்பீட்டை நான் பிவி அவர்கள் குறித்து ஒரு மீட்டிங்கில் கூறினேன்.
திறமையானவர்களுக்கும், அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நிலையில் இருப்பவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பவர் பி.வி அவர்கள். யாரிடம் என்ன திறமை இருந்தாலும் அவர்களை ஊக்குவிப்பதில் வல்லவர். ஊக்குவிப்பதோடு அவர்களுக்கான தக்க விருது கிடைக்கச் செய்வதிலும் ஆக்கபூர்வமாக செயல்படுபவர்.
குழந்தை இலக்கியத்தின் மீதான ஈடு செய்ய முடியாத ஒப்பிட முடியாத அளவுக்கான அதீத ஈடுபாட்டின் காரணமாக இவர் டிவிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பதைவிட குழந்தை இலக்கிய ஆர்வலராகவே பெரும்பாலானோருக்கு தெரியும். அந்த அளவுக்கு இவர் குழந்தை இலக்கியத்தின் மீது காட்டிய ஆர்வமும் அக்கறையும் இன்றளவும் பேசப்படுகின்றது.
இவர் எனக்கும் எங்கள் காம்கேருக்கும் எப்படி அறிமுகமானார் தெரியுமா?
காம்கேருக்கு உயர்திரு. பி. வெங்கட்ராமனின் அறிமுகம்!
வருடம் 2000. எங்கள் நிறுவனத்தின் ஆதம்பாக்கம் கிளையின் அருகே ஒரு மருத்துவ ஸ்கேன் சென்டர் இயங்குகிறது. அங்கு ஸ்கேன் செய்வதற்காக வந்திருந்தார் பிவி அவர்கள். அப்போது எங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து எங்கள் நிறுவன ரிசப்ஷனிஸ்டிடம் ‘ஸ்கேன் செய்ய வந்திருந்தேன்… சாஃப்ட்வேர் நிறுவனம் என போட்டிருந்ததால் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்…’ என்றார். அதை ரிசப்ஷனிஸ்ட் என்னிடம் அப்படியே சொல்ல, நான் ‘நம்முடையது சாஃப்ட்வேர் நிறுவனம்… இங்கு டிடிபி வேலை மற்றும் ஸ்கேன் எல்லாம் செய்வதில்லை என சொல்ல வேண்டியதுதானே?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘மேடம், அவர் நம் நிறுவனத்துக்கு பக்கத்தில் உள்ள மருத்துவ ஸ்கேன் சென்டருக்கு வந்திருக்கிறார்… அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தாராம்…’ என்றவுடன்தான் டிடிபி பணிக்கான ஸ்கேனுக்கு வரவில்லை தன் மருத்துவ ஸ்கேனுக்கு வந்திருக்கிறார் என்பதே எனக்கு உரைத்தது.
உடனே அவரை என் அறைக்கு வரச் சொன்னேன்.
இப்படித்தான் எங்கள் அறிமுகம் ஆரம்பமானது. எங்கள் பேச்சு சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகம் இப்படி விரிவானது. அப்போதே (வருடம்: 2000) நான் 35 புத்தகங்களுக்கும் மேல் எழுதி இருந்தேன். ‘எப்படி எழுத்தில் ஆர்வம் உண்டானது?’ என அவர் வியப்பில் கேட்க என் இளமைக்காலம் குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.
எனது முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என் 12 வயதில் கோகுலத்தில் வெளியானது, அப்போது அழ. வள்ளியப்பா அவர்கள் எடிட்டராக இருந்தார் என சொன்னபோது அவர் முகம் பிரகாசமானது, பேச்சும்தான். காரணம் அவர் அழ வள்ளியப்பாவின் அபிமான மானசீக மாணவர்.
மேலும் தன் இளமைக் காலம் குறித்தும், குழந்தை இலக்கியப் பங்களிப்பு குறித்தும் பல்வேறு சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 1935 ஆண்டு பிறந்த இவர் 1944 – 1947 வரை அறிவுக்கதிர், கோமாளி போன்ற கையெழுத்துப் பிரதிகளை தன் நண்பர்களுடன் சேர்த்து நடத்தி வந்தார். மேலும் பாலர் மலர், டமாரம், சங்கு இதழ்களில் கட்டுரைகள் மற்றும் வேடிக்கைப் புதுமொழிகள் எழுதி வந்தார்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் எழுத்துக்கள் அச்சேறுவதற்கு முன்பே படித்து குழந்தை இலக்கியத்தில் பங்கேற்றிருக்கிறார். குழந்தைக் கவிஞர் கொடுத்த ஊக்கத்தில் ‘டிங் டாங்’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார்.
இப்படியாக குழந்தைக் கவிஞரை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார். அவர் புகழ் பரப்புவதை தன் வாழ்க்கையின் முக்கியப் பணியாகவும் ஆக்கிக் கொண்டவர் உயர்திரு. பி. வெங்கட்ராமன் அவர்கள்.
அச்சில் இருந்து அனிமேஷனில் அழ. வள்ளியப்பாவின் பாடல்கள்!
அந்த காலகட்டத்தில் நம் நாட்டில் அனிமேஷன் நிறுவனங்களும் குறைவு, அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகளும் மிகக் குறைவு. அப்போதுதான் எங்கள் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்தி இருந்தோம். அது மக்களிடையே பிரசித்தி பெற ஆரம்பித்திருந்தது.
எங்கள் நிறுவன முதல் அனிமேஷன் சிடியான ‘தாத்தா பாட்டி கதைகள்’ என்ற அனிமேஷன் படைப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் ‘குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்களைத் தொகுத்து அனிமேஷன் சிடியாக்கலாமே, உங்களால் செய்ய முடியுமா?’ என கேட்டார். அந்த காலகட்டத்தில் அழ அவள்ளியப்பா அவர்களின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை என்பதால் அவரது மகனிடம் கட்டணம் செலுத்தி முறையாக ஒப்புதல் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பாடல்களைத் தொகுத்து ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற தலைப்பில் அனிமேஷன் சிடியாக வெளியிட்டோம். அதற்கு அடுத்த வருடமே அவரது பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டன.
இடையில் இவர் எழுதிய ‘சாலைவிதிப் பாடல்கள்’ என்ற நூலை எங்கள் காம்கேர் பதிப்பகம் வாயிலாகவும், அதை ஆடியோ சிடியாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வாயிலாகவும் வெளியிட்டு சிறப்பித்தோம்.
அச்சு வடிவில் இருந்த குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பாடல்களை முதன் முறையாக (2000-ல்) டிஜிட்டல் வடிவிற்குக் கொண்டு சென்றதற்காக குழந்தைக் கவிஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் (நவம்பர் 7, 2022) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் குடும்பத்தார் காம்கேரையும் என்னையும் சிறப்பித்தார்கள்.
அச்சு வடிவில் இருந்த குழந்தைக் கவிஞரின் பாடல்கள் அனிமேஷன் வடிவம் காண குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் காம்கேருக்கும் பாலமாக இருந்தவர் உயர்திரு. பி. வெங்கட்ராமன்.
ஸ்ரீபத்மகிருஷ் விருதளித்தத் தருணம்!
எங்கள் பெற்றோர் பெயரில் நாங்கள் நடத்தி வரும் ‘ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை’ மூலம் வருடா வருடம் துறை சார்ந்து சிறப்பாக செயல்படும் சாதனையாளர்களுக்கு ஸ்ரீபத்மகிருஷ் விருதளித்து வருகிறோம். 2008-ம் ஆண்டு பிவி அவர்களுக்கு அவரது குழந்தை இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து சிறப்பித்தோம்.
இப்படியாக பிவி அவர்கள் எனக்கும், எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கும் அறிமுகமாகி ஐக்கியமானார்.
குழந்தைக் கவிஞரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!
ஒவ்வொரு வருடமும் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பிறந்த நாளின்போதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார். அதன் சிறப்பு விருந்தினராக என்னையும் பேச்சாளராக அழைத்துப் பேச சொல்வார். சில கூட்டங்கள் எங்கள் காம்கேர் நிறுவனத்திலேயே நடந்திருக்கின்றன.
குழந்தைக் கவிஞருக்கு சிலையும், தபால்தலையும்!
சுருங்கச் சொன்னால் குழந்தைக் கவிஞரின் புகழைப் பரப்புவதையே தன் வாழ்நாள் கொள்கையாக வைத்திருக்கிறார் பி. வெங்கட்ராமன் அவர்கள். குழந்தைக் கவிஞரின் சிலை நிறுவிடப்படவும், தபால்தலை வெளியிடப்படவும் பிவி அவர்கள் மிக முக்கியக் காரணக்கர்த்தா. பூங்காக்களில் குழந்தைக் கவிஞரின் பாடல்களை கல்வெட்டாக்குதல், நூலகங்களில் குழந்தை இலக்கியப் புத்தகங்கள் பிரிவுக்கு குழந்தைக் கவிஞரின் பெயர் சூட்டுதல், குழந்தைக் கவிஞர் பெயரில் விருது, சாலைக்கு குழந்தைக் கவிஞர் பெயர் சூட்டுதல் என இன்னும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுத்தபடியே உள்ளார்.
குழந்தைக் கவிஞருக்கு ஆவணப்படம்!
2021-ம் ஆண்டு குழந்தைக் கவிஞரின் 100-வது பிறந்த தினத்தை ஒட்டி ‘குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா நூற்றாண்டு சிறப்பு ஆவணப்படம்’ ஒன்றை எங்கள் காம்கேர் வாயிலாகத் தயாரித்து எங்கள் காம்கேர் டிவி யு-டியூப் சேனலில் வெளியிட்டோம். லிங்க்: https://youtu.be/OSFfeQy5T9o. இதற்கும் தூண்டுதலாக இருந்தவர் உயர்திரு. பி. வெங்கட்ராமன் அவர்களே.
இப்படியாக 2000 முதல் 2024 ஆண்டு வரை கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் காம்கேருக்கும் பிவி அவர்களுக்குமான தொடர்பின் பாலமாய் இருப்பவர் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களே.
இப்போது குழந்தை இலக்கியச் செல்வர் பி. வெங்கட்ராமன் அவர்களின் வயது 90. ஆனால் 25 வயது இளைஞரைப் போன்ற சுறுசுறுப்பு. இதுவே இவரது அடையாளம்!
இனியும் அப்படியே அமைய இறையருளும், இயற்கை சக்தியும் அருள் புரிய பிராத்தனை செய்து இந்த இனிய பங்களிப்பை நிறைவு செய்கிறேன்.
வணக்கத்துடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare Software