சிவபெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற தெய்வீகத் தருணம்!
#usatrip2025_ckb-4
அமெரிக்காவில் ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் ஆலயம் சென்றிருந்தோம் (ஏப்ரல் 23, 2025). இந்தக் கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தபோது சிவபெருமான் மறைமுகமாக எனக்கு ஓர் உத்தரவை அருளினார். சிவபெருமானின் கருணை கிடைக்கப் பெற்ற அற்புதத் தருணம் அது. இந்தப் பதிவின் கடைசியில் அதை குறிப்பிட்டுள்ளேன்.
அந்தக் கோயிலுக்கு பக்தர்கள் முன் அனுமதி பெற்று அவர்கள் குறிப்பிடும் நேரத்துக்கு மட்டுமே பூஜையில் கலந்துகொள்ள முடியும். நாங்கள் ஹவாய் சென்றிருந்த போது அந்தக் கோயிலுக்குச் செல்ல காலை 9 மணிக்கு அனுமதி பெற்றோம். அன்றைய தினம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. பசுமையான மரம் செடி கொடிகள், மலைகள், அருவிகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் ஹவாயில் நம் ஹிந்து கடவுள் சிவனை தரிசிக்கும் பெரும் வாய்ப்பும், தெய்வீகப் பேரருளும் கிடைத்தால் நம் மனநிலை எப்படியான கொண்டாட்டமாக இருக்கும். அமைதியான சூழல், இயற்கையின் கொள்ளை அழகு. தெய்வீக அருள். பக்திப் பரவசமாக இருந்தது. குளுமையும், அமைதியும் பக்தியை இன்னும் இனிமையாக்கி தெய்வீகக் கொண்டாட்ட மனோநிலைக்கு கொண்டு சென்றது.
நம்மை வழிநடத்த தன்னார்வத் தொண்டராக பளீரென முழுநீள வெள்ளைக்கலர் சுடிதாரும் ருத்ராட்ச மாலையும், ருத்ராட்சம் வைத்து செய்யப்பய்ய ப்ரேஸ்லெட்டும் அணிந்த வெள்ளை வெளேர் கலரில் அமெரிக்க பெண் அழகான ஆங்கிலத்தில் வழி நடத்தினார். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கோயில் சிறப்புகளை சிரித்த முகத்துடன் விளக்கினார். முக்கியமாக கோயிலுக்குள் புகைப்படம் வீடியோ எடுக்கக் கூடாது என்பதையும் சிரித்துக் கொண்டே சொன்னார். கோயிலுக்கு வெளியே உள்ள சிலைகள், சிற்பங்கள், இயற்கை பேரழகுகள், வெளிப் பிரகாரம் இவற்றை எடுக்க அனுமதி உண்டு என்றும் கூறினார்.
சரி, சிவபெருமான் எனக்கு அருளிய உத்தரவு காட்சியை விளக்குகிறேன்.
2004 – ஆம் ஆண்டு திருவாசகத்தின் 51 பதிகத்தையும் 658 பாடல்களையும் மல்டிமீடியா வடிவில் தயாரித்தோம். எங்கள் தயாரிப்புக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு. ‘தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதன் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் மல்டிமீடியா வடிவில் திருவாசகம்’ என ஊர் உலகமே கொண்டாடி கெளரவித்தது. நம் நாட்டில் கூகுள் எல்லாம் அறிமுகம் ஆவதற்கு முன்பே தேடும் வசதிகளை (Search) கொடுத்து பார்வையற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் நேவிகேஷன் பட்டன்களை (Navigation) பொருத்தி எழுத்து, ஆடியோ, வீடியோ என பிரமாதப்படுத்தி இருந்தோம். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிட்டது உலகம் முழுக்க சிறப்பு கவனத்தைப் பெற்றதற்கு பிரதானக் காரணம்.
மேலும் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மட்டுமே கொஞ்சம் காலூன்றி இருந்தது. இன்டர்நெட் தொழில்நுட்பம் அறிமுக அளவில் மட்டுமே. அனிமேஷனும், மல்டிமீடியாவும் அடி எடுத்து வைக்கவா வேண்டாமா என ததிங்கினதோம் போட்டுக் கொண்டிருந்த காலகட்டம்.
அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எடுத்த இந்த முன்னெடுப்பு புதுமை. பெரும் சாதனை. என் கடும் உழைப்புக்கான வெற்றி.
சரி, அந்த படைப்பின் முதன்மைத் திரையை எப்படி வடிவமைத்திருந்தோம் தெரியுமா?
ஒற்றைக் காலை தூக்கி நடமனாடும் நடராஜர் சிலை. அந்த சிலையில் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக ஒற்றை வரிசையில் மஞ்சள்நிற பூக்களை ஒவ்வொன்றாகப் பொருத்தி 51 பதிப்பகத்துக்கு 51 எண்கள் என்ற கணக்கில் வைத்து அவற்றின் மேல் 1,2,3…51 என எண்களை டைப் செய்து வெளிப்படுத்தினோம். அந்த எண்கள் பதிக எண்களாகும். நடராஜ பெருமான் காலடியில் பூஜை செய்த வண்ணமயமான பூக்குவியல். சிவனுக்கு இரண்டு புறமும் ஐந்து முக குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
51 பூக்கள், 51 எண்கள், 51 பதிகம். இதுதான் கணக்கு. ஒவ்வொரு பூவையும் கிளிக் செய்தால் அந்தந்தப் பதிகம் வெளிப்பட்டு அதிலுள்ள பாடல்களை வெளிப்படுத்தும். உதாரணம்: 5 என்ற எண் பொருத்திய பூவை கிளிக் செய்தால் திருவாசகத்தின் 5-ம் பதிகம் வெளிப்படும். 51 என்ற எண் பொருத்திய பூவை கிளிக் செய்தால் 51-ம் பதிகம் வெளிப்படும்.
சரி சரி இந்தக் கதையெல்லாம் ஏன் இப்போது? ம்… சொல்கிறேன்.
இந்த மல்டிமீடியா படைப்பை வெளியிட்ட 20 வருடங்கள் கழித்து இப்போது திருவாசகத்தை Ai தொழில்நுட்பத்தில் கொண்டுவர கடந்த 3 வருடங்களாக எங்கள் காம்கேரில் நாங்கள் செய்துவரும் முக்கியமான ப்ராஜெக்ட் ‘Ai தொழில்நுட்பத்தில் திருவாசகம்’. எல்லாமே 99 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நானே வெளியிடலாமா அல்லது வேறு நிறுவனம் மூலம் வெளியிடலாமா என்ற சிறு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்ததால் அதன் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்தக் கோயிலுக்கு வந்த பிறகு என் சஞ்சலத்தை முற்றிலும் விலக்கி, சிவபெருமான் எனக்கு ஒரு உத்தரவை அருளினார்.
சிவபெருமான் எனக்கு எந்த வகையில் உத்தரவை வழங்கினார் தெரியுமா?
நடராஜ பெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரத்துக்காக திரை போட்டார்கள் (தானியங்கி திரை). திரை விலகியதும் தெய்வீக அழகுடன் பேரழகான அலங்காரத்துடன் நடராஜ பெருமான் காட்சி அளித்தார்.
நான் அசந்தே போனேன். பக்திப் பரவசம் ஒருபக்கம் என்றாலும், நான் அசந்து போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணமும் உள்ளது. 2004 ஆம் ஆண்டு நாங்கள் வெளியிட்ட திருவாசகம் மல்டிமீடியா படைப்பில் முகப்புத் திரையை எப்படி வடிவமைத்திருந்தேனோ அதே அலங்காரத்துடன் நடராஜர் காட்சி அளித்தால் சிலிர்க்காமல் எப்படி இருக்க முடியும். நடராஜ பெருமானின் திருவுருவ வளைவை சுற்றி மஞ்சள் நிற பூக்கள் ஒற்றை வரிசையில் ஒவ்வொன்றாக வைத்திருந்தார்கள். காலடியில் சிவப்பும், மஞ்சளுமாக அர்ச்சனை செய்த பூக்குவியல்.
2004 ஆம் ஆண்டு நாங்கள் தயாரித்த எங்கள் திருவாசகம் மல்டிமீடியா படைப்பில் இருந்த நடராஜ பெருமானின் அலங்காரமும், 2025 ல் ஹவாயில் தரிசனம் செய்து கொண்டிருக்கும் சிவபெருமானின் அலங்காரமும் 100-க்கு 100 சதவிகிதம் இம்மியும் மாறாமல் அப்படியே இருந்தது. எனக்குள் சிவபெருமானின் குரல் ஒலித்ததாக உணர்ந்தேன். ‘நீ தயாரித்த Ai வடிவ திருவாசகம் படைப்பை நீயே வெளியிடு…’
இதை நான் சிவபெருமானின் உத்தரவாக ஏற்றுக் கொண்டேன். விரைவில் வெளியீட்டு அறிவிப்பை வெளியிடுகிறேன்.
அடுத்த பதிவில் இந்தக் கோயில் பற்றிய முக்கியமான செய்தி ஒன்றை ஹவாயின் இயற்கை எழில் கொஞ்சம் அழகான சூழலை புகைப் படங்களுடன் பதிவிடுகிறேன்.
புகைப்படக் குறிப்பு: கோயிலுக்கு வெளியே எடுத்த புகைப்படம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 4, 2025 | ஞாயிறு
#காம்கேர்கேபுவனேஸ்வரி
#காம்கேர்புவனேஸ்வரி
#compcarekbhuvaneswari
#compcarebhuvaneswari
#compcaresoftware
#காம்கேர்சாஃப்ட்வேர்