ஹவாய் தீவில் சிவபெருமான் தரிசனம்
#usatrip2025_ckb-5
ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு பக்தர்கள் முன் அனுமதி பெற்று அவர்கள் குறிப்பிடும் நேரத்துக்கு மட்டுமே பூஜையில் கலந்துகொள்ள முடியும். நாங்கள் ஏப்ரல் 23, 2025 அன்று காலை 9 மணிக்கு முன் அனுமதி பெற்று சென்று வந்தோம். அன்றைய தினம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. பசுமையான மரம் செடி கொடிகள், மலைகள், அருவிகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் ஹவாயில் நம் ஹிந்து கடவுள் சிவனை தரிசிக்கும் பெரும் வாய்ப்பும், தெய்வீகப் பேரருளும் கிடைத்ததில் எங்களுக்குப் பேரானந்தம்.
இந்தக் கோயிலின் சிறப்பம்சங்களை பார்ப்போம். இந்தக் கட்டுரையின் இறுதியில் முக்கியமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளேன். தவறாமல் வாசிக்கவும்.
கோயில் உள்ள இடம்: ஹவாய் தீவு, அமெரிக்கா
கோயில் பெயர்: கடவுள் ஹிந்து கோயில் (Kadavul Hindu Temple)
தோற்றம் : 1973
பிரதான இறைவன்: பிரதானமாக சிவன். கருவறையில் நடராஜ பெருமானும் அதற்கு முன் 700 பவுண்ட் 3 அடி உயரத்தில் கிரிஸ்ட்டல் சிவலிங்கமும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்கள்.
வலப்புறம் தனி சன்னதியில்: முருகன்
இடப்புறம் தனி சன்னதியில்: பிள்ளையார்
பக்தர்கள் அமரும் மண்டபத்தை சுற்றியுள்ள சுவரில் சிவபெருமான் ஆடிய 108 தாண்டவ நடன தொகுப்பு அலங்கரிக்கிறது. ஒவ்வொன்றும் 16 அங்குல உயர்முள்ள வெண்கல சிலைகள். அவற்றை பொன்னிற இலைகள் அலங்கரிங்கின்றது. பக்தர்கள் அந்த மண்டபத்தில்தான் அமர்ந்து பூஜையை கவனிக்க வேண்டும்.
வெளியே சிவபெருமானுக்கு நேர் எதிராக 32000 பவுண்ட் நந்தி வீற்றிருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்கிறார்கள்.
கோயிலில் வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகிறது. முதல் பூஜை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கடவுள் கோயிலில் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தனி சன்னதியோ சிலையோ கிடையாது. ஏனெனில் சக்தியை உள்ளடக்கியதே சிவன். சிவனை இயக்குவதே சக்திதான். அதனால்தான் அர்த்தநாதீஸ்வரர் கோலத்தில் உள்ள சிவபெருமானின் இடப்புறம் சக்தியுமாய், வலப்புறம் சிவனுமாய் காட்சி அளிப்பார்கள். சிவனும் சக்தியும் ஒன்றுதான். வெவ்வேறு அல்ல.
பக்தர்கள் முன் அனுமதி பெற்று அந்த நேரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆண், பெண் இருபாலருக்கும், நம் ஹிந்து பாரம்பர்ய உடைகளை மட்டுமே அணிந்துவர அனுமதிக்கிறார்கள். முட்டிக்கால் தாண்டிய நீண்ட உடைகள், இறுக்கமாக இல்லாத மேலாடைகள் அணியலாம்.
கோயிலுக்குள் புகைப்படமும் வீடியோவும் எடுக்க அனுமதி கிடையாது. கோயிலைச் சுற்றி வெளியே எடுக்கலாம்.
இந்த ‘கடவுள் கோயில்’ சிவனை தரிசனம் செய்த பிறகு அருவிகளும், பசுமையான செடி கொடி மரங்களும் அடர்ந்த சாலையில் நடந்து சென்று ‘இறைவன் கோயில்’ செல்லலாம். இங்கு சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி தருகிறார். இந்தக் கோயில் சிவலிங்கம் 1975 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். செல்லும் வழிநெடுக பிரம்மனும், பிள்ளையாரும், நந்தியும், சிவலிங்க சிலைகளும்.
*முக்கியக் குறிப்பு:*
காஞ்சி மடத்தில் முறையாக அனைத்து வேதங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, ஐந்து மொழிகளுக்கும் மேல் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்த 30 வயதே ஆன எங்கள் வீட்டு இளையதலைமுறை (சகோதரியின் மருமகன்) உயர்திரு. பரத்வாஜ் தான் இந்தக் கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் மிசெளரியில் உள்ள செயிண்ட் லூயிஸில் ஹிந்து கோயிலில் Chief Priest ஆக பணி புரிகிறார். இதுபோல பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்.
யோகா மாஸ்டராகவும், உபன்யாசங்கள் செய்பவராகவும், ஸ்லோக வகுப்புகள் நடத்துபவராகவும் தான் கற்றதையும் பெற்றதையும் இந்த சமுதாயத்துக்கு திரும்பச் செலுத்துவதிலும் முனைப்பாக உள்ளார்.
முப்பது வயதுக்குள் இத்தனை பொறுப்பும், தெய்வீகமான இறைபணிகளும் இவரை நாடி வருவதற்கு மிக முக்கியக் காரணம் இவர் தன் இறைபணியில் காட்டும் அக்கறை, ஈடுபாடு, நேர்மை, நேரம் தவறாமை… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது இறைபணியும், திறமையும் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு வாழ்த்துவோமே!
எந்தத் துறையிலும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு ஸ்மார்ட் மூளையுடன் கடின உழைப்பைக் கொட்டுகிறார்களோ அவர்களுக்கு இந்த உலகமே கை தூக்கிக் கொண்டாட காத்திருக்கும் என்பதற்கு இவரே ஒரு உதாரணம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 6, 2025 | திங்கள்