அப்பிடைசர் வார்த்தைகள்!
#usatrip2025_ckb-6
சென்னையில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் தம்பதி சமேதராக அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் மகள்களை பார்க்க வந்திருந்ததால் அவர்களை எங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
எங்கள் உறவினரை அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவருடைய மகள்களை பார்க்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அவர்களின் ஒரு மகள் பத்தாவது படிக்கும்போது எங்கள் காம்கேரில் ப்ராஜெக்ட் செய்திருப்பதாக சொன்னார். அதுவும் அவர்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. என் அப்பா அம்மா அவர்களை விருந்துக்கு அழைத்தபோதே இந்தத் தகவலை சொன்னார்கள். ஆனால் எனக்குத்தான் நினைவில் இல்லை. தரையில் கால் பாவாமல் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருந்த நாட்கள் அவை.
வீட்டிற்குள் நுழைந்ததுமே ‘அக்கா, நீங்கள் புவனா அக்கா தானே… என்னுடைய ரொம்ப சின்ன வயசில் நீங்கள் என்னைப் பார்த்ததால் என்னை உங்களுக்கு நினைவிருக்காது. ஆனால் உங்களை எனக்கு நினைவிருக்கு. ஏன்னா நீங்கள் அப்படியே அன்று பார்த்ததைப் போல் இருக்கிறீர்கள்…’ என சாப்பிடுவதற்கு முன் பசியைத் தூண்ட கொடுக்கப்படும் அப்பிடைசர் போல உரையாடலுக்கு முன் உற்சாகத்தை ஊட்டும் அப்பிடைசர் வார்த்தைகளுடன் பேச ஆரம்பித்தார்.
‘உங்கள் காம்கேரில்தான் நான் பத்தாவது வகுப்பு படிக்கும்போது காலாண்டு தேர்வு விடுமுறையில் ஒரு ப்ராஜெக்ட் செய்தேன். அப்போதெல்லாம் பத்தாவது படிக்கும்போது யாரும் ப்ராஜெக்ட் எல்லாம் செய்ய மாட்டார்கள். அதுவும் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் செய்திருக்கவே வாய்ப்பில்லை. ஏனெனில், அப்போதெல்லாம் சாஃப்ட்வேர் நிறுவனங்களே மிகக் குறைவுதானே. அதனால் அப்போது எனக்கு நல்ல பாராட்டு கிடைத்தது…’ என்று படபடவென சொல்லி முடித்தார் தன் கணவன், மூன்று குழந்தைகள் மற்றும் தன் பெற்றோருடன் வந்திருந்த அந்தப் பெண். தொழில்நுட்பத் துறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் ஐடியில் பணி புரிந்து வருகிறார்.
ஆஹா… இவரது உற்சாகமும் பேச்சும் சிரிப்பும், காம்கேர் பற்றிய அனுபவப் பகிர்வும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.
நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய 1992-களில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படித்தவர்களை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நான் பிசினஸ் செய்வதில் மட்டுமே ஆர்வமாக இருந்ததாலும், நம் பாரத நாட்டில் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக தயாரிப்புகள் வெளியிட வேண்டும் அதை பல்வேறு உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டிருந்ததாலும், அமெரிக்கக் கனவு துளியும் இல்லை.
எங்கள் பெற்றோரும் எங்களை அமெரிக்காவிலோ, கனடாவிலோ அல்லது வேறு மேலை நாடுகளிலோ பணிக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவுடனோ, அந்த நோக்கத்திலோ படிக்க வைக்கவில்லை. கல்விதான் சொத்து, படிப்பு ஒன்றுதான் நம்மை சுயமாக சொந்தக் காலில் நிற்க வைக்கும், சுய மரியாதையுடன் யாரையும் நம்பி வாழாமல் கம்பீரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் மட்டுமே படிக்க வைத்தார்கள். நாங்களும் அப்படியேத்தான் வளர்ந்தோம். எங்கள் அப்பா மட்டுமல்ல, எங்கள் அம்மாவும் அந்த காலத்திலேயே 24 மணி நேர பணி சுழற்சியில் இரவு பகல் பாராமல் தொலைபேசி துறையில் பணியாற்றியவர்தான்.
படித்து முடித்தவுடன் என் சகோதரனுக்கும் சகோதரிக்கும் அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று பணியாற்றி தங்கள் திறமையால் மேலே உயர்ந்து கொண்டிருந்தார்கள்.
எனக்கு சுயதொழிலில் ஆர்வம் என்பதால் என் கனவு வேறாக இருந்தது. என் சகோதரனும் சகோதரியும் அமெரிக்காவில் இருந்தாலும் நான் எங்கள் காம்கேரின் ப்ராஜெக்ட்டுக்காகத்தான் அமெரிக்கா செல்ல வேண்டும் என விரும்பியதால் 2009-ல் தான் அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து ஒரு ப்ராஜ்க்ட்டை எடுத்துக் கொண்டு சென்றேன். ஆம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அவர்கள் கல்வி திட்டத்துக்காக ஒரு ஆவணப்படம் தயாரித்துக் கொடுக்கும் ப்ராஜெக்ட். ‘அமெரிக்க உயர்கல்விக்கும், இந்தியநாட்டு உயர்கல்விக்குமான ஒப்பீடு’ (Comparison of Higher Studies in India and America) என்பதுதான் தலைப்பும் கான்செப்ட்டும். இந்தியாவில் சில கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் எடுத்துவிட்டு அமெரிக்காவில் மிசெளரியில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஷீட்டிங் எடுக்கவும் நேர்காணல்கள் செய்யவும் அனுமதி பெற்றேன்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்பே 1996 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்தது. அப்போதுதான் உலகம் முழுவதும் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்துவர ஆரம்பித்திருந்தது. நம் நாட்டில் மிக மெதுவாக. அப்போது எங்கள் காம்கேர் ஆரம்பித்து 4 வருடங்களே ஆகியிருந்த சூழலில் என்னால் என் நிறுவனத்தை விட்டு கிளம்பவே முடியாத சூழல். என் பெற்றோர் நிறுவனத்தை பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக தினந்தோறும் முடித்துக் கொடுக்க வேண்டிய வங்கி சார்ந்த ப்ராஜெக்ட்டுகள் எனக்கு பெருத்த சவாலாக இருந்து வந்தது.
இப்போதுள்ளதைப் போல அப்போது எங்களிடம் நிறைய பொறியாளர்கள் பணியில் இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், இருக்கின்ற பொறியாளர்களுக்கும் என் உதவி இல்லாமல் தனித்துவமாக பணியாற்ற முடியாது. ஏனெனில் அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் மிகக் குறைவு என்பதால் எந்த டிகிரி படித்திருந்தாலும் அவர்களை பணிக்கு எடுத்து பயிற்சி கொடுத்துத்தான் வேலை வாங்க வேண்டி இருந்தது. இதனால் யாரையும் நம்பி பணிகளை ஒப்படைத்துவிட்டுச் செல்ல முடியாத சூழல் என்பதால் மலேசியாவிற்கு செல்லும் வாய்ப்பை நானே தவிர்த்தேன்.
நான் மலேசியா செல்ல இருப்பதாய் வதந்தி வந்தபோதே நான் மலேசியா என்று செட்டில் ஆகிவிடுவேன் என்று பேசிக் கொண்டார்கள். எல்லோருக்கும் என் இலட்சியத்தையும் கனவையும் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா? ஆனாலும் ‘காம்கேர் தான் என் கனவு. இலட்சியம். வெளிநாடு சென்று வருவது எங்கள் காம்கேரின் ப்ராஜ்க்ட்டை உலகளாவிய முறையில் கொண்டு செல்வதற்காக மட்டுமே’ என்று என்னிடம் நேரடியாக கேட்பவர்களுக்கு பதில் சொல்லி வந்தேன்.
2009 ஆம் ஆண்டு ஆவணப்பட அமெரிக்கா செல்ல இருப்பதாய் தகவல் பரவியவுடனும் அப்படித்தான். எங்கள் உறவினர்களில் சிலர் ‘என்ன காம்கேரை மூடிவிட்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆகப் போகிறாயா…’ என அபத்தமாய் கேட்பார்கள். தலைக்கேறும் கோபத்தை அடக்கிக் கொண்டு கொஞ்சம் புத்திசாலித்தனமாய், ‘இன்ஃபோஸில் நாராயண மூர்த்தி தன் நிறுவனத்துக்காக வெளிநாடு செல்லும்போது இன்ஃபோஸிசை இழுத்து மூடிவிட்டுத்தான் செல்கிறாரா?’ என்று கேட்பேன். என் பதிலால் அவர்கள் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆக வேண்டும். ‘அவர் எப்படி தன் நிறுவனத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறாரோ அதுபோல்தான் நானும் எங்கள் காம்கேருக்காக செல்கிறேன்…’ என்று சொல்லி அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்.
சரி இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு என நீங்கள் நினைப்பது புரிகிறது. சொல்கிறேன்…
‘காம்கேர் தொடங்கியதில் இருந்து இந்த 33 வருடங்களில் இதுவரை மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா என பல வெளிநாடுகளுக்கு சென்று வந்துவிட்டாலும், இப்போதும் ஒருசிலர் இப்படி கேட்பதுண்டு’ என்று என் அனுபவத்தை அந்தப் பெண்ணிடம் பகிர்ந்து கொண்டேன்.
அதற்கு அவர், ‘ஆமாம் அக்கா… சுந்தர் பிச்சை வெளிநாடுகளுக்குச் சென்றால் கூகுளை மூடிவிட்டா செல்கிறார்…’ என்று சொன்னபோது நான் ‘என் வயதுக்கு இன்ஃபோஸில் நாராயண மூர்த்தியை குறிப்பிட்டேன், நீ உன் வயதுக்கு சுந்தர் பிச்சையை குறிப்பிடுகிறாய். இப்படி சொல்லி புரிய வைத்தால்தான் நம் மக்களுக்கும் புரிகிறது…’ என்று சொன்னேன்.
‘யாருக்கும் புரிய வைக்க வேண்டும், நம் வேலையை நாம் பார்ப்போம்’ என்று ஒருசிலர் அறிவுரை சொல்லும் நோக்கில் நினைக்கலாம்.
‘நம் எதிரே நம்மிடம் ஒருவர் கேள்வி கேட்கும்போது பதில் சொல்லி புரிய வைப்பதில் தவறில்லை. அதுவும் நேரமும் காலமும் அமைந்தால் மட்டுமே. நமக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி நமக்கு என்ன அக்கறை… அவர்களை பற்றி நான் சிந்திக்கக் கூட வேண்டாம்…’ இதுதான் என் சித்தாந்தம்.
அன்றைய தினம் உறவினர்களுடன் குடும்ப விஷயங்களைப் பேசி மகிழ்ந்தாலும் எனக்கு காம்கேரின் நினைவுகள் ஒருபக்கம் ஓடிக் கொண்டே இருந்தது. சிசிடிவி காமிரா ஆப் மூலம் காம்கேரை பார்வையிட்டேன். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இரவு பகல் வேறுபாடு இருப்பதால் சென்னையின் பகல் நேரப் பொழுதில், காம்கேரில் பொறியாளர்கள் வேலையில் மும்முரமாக இருப்பதை கண் குளிரக் கண்டேன். நிம்மதியாக இருந்தது.
‘நாம் இருந்தால்தான் நிறுவனம் செயல்படும் என்றால் அங்கு சிஸ்டம் சரியில்லை என்று அர்த்தம். நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிறுவனம், தொய்வின்றி செயல்படும் போதுதான் சிஸ்டம் சரியாக வேலை செய்வதாக பொருள்’ என்று எனக்குள் நானே கூறிக் கொண்டு காம்கேர் பற்றிய சிந்தனையை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு உறவினர்களுடன் உரையாடலுடன் கூடிய சுவையான விருந்தில் கலந்து கொண்டேன்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் உறவினரின் மகள் கொடுத்த அப்பிடைசர் வார்த்தைகள் பசியைத் தூண்டி விருந்தில் சுவையைக் கூட்டியது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 7, 2025 | செவ்வாய்