அப்பாவைப் போல்!
ஒரு மருத்துவமனை. லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆணும் பெண்ணுமாய் இருவர் மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்பாவும் மகளுமாய் இருக்க வேண்டும்.
அப்பா ஒரு காலை இறக்கி ஒரு படியில் வைத்துவிட்டு மறுகாலையும் அதே படியில் வைத்து சில நொடிகள் ஓய்வெடுத்து பிறகு ஒரு காலை அடுத்த படியில் வைத்து மறுகாலையும் அதே படியில் வைத்து ஓய்வெடுத்து என பிரம்மப்பிரயத்தனம் செய்து மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார்.
அவர்தான் அப்படி என்றால் அவருக்கு முன்னே இறங்கி வந்துகொண்டிருந்த மகளும் அச்சு அசலாக அப்பா இறங்குவதைப் போலவே ஒவ்வொரு படியிலும் இரண்டு கால்களையும் ஒரு நொடி வைத்து ஓய்வு கொடுத்து பின்னர் அடுத்தபடிக்கு நகர்ந்து அங்கு இரண்டு கால்களையும் வைத்து ஓய்வெடுத்து என அவரும் கஷ்டப்பட்டு இறங்கிக் கொண்டிருந்தார்.
அப்பா இறங்கி வருவதற்குள் மகள் கொஞ்சம் விரைவாக கீழே இறங்கி விட்டதால், அங்கிருந்த ஒரு நர்ஸ் அந்தப் பெண்ணிடம், ‘உங்க இரண்டு பேருக்கும் கால்களில் ஒரே மாதிரியான பிரச்சனையா?’ என்று கேட்டார்.
மகள் ‘இல்லை… இல்லை… அவர் என் அப்பா. அப்பாவுக்கு கம்பெனி கொடுக்கவே அவர் எப்படி இறங்க வேண்டுமோ அப்படியே நானும் இறங்கி வருகிறேன். இல்லை என்றால் கால் வலியையும் பார்க்காமல் வேகமாக இறங்கி கால் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கிக் கொள்வார்… நானும் அவரைப் போலவே இறங்கினால் அவர் மெதுவாக என்னுடன் சேர்ந்து இறங்குவார், அத்துடன் கண் முன்னே ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதை அப்படியே பின்பற்றவும் தோன்றும், மேலும் அப்படி இறங்குவது ஒன்றும் பிரச்சனை அல்ல, நல்லபடியாக கால் இருப்பவர்களும் அப்படி இறங்கலாம் என பாசிட்டிவாக அப்பாவுக்கும் தோன்றச் செய்யவே அப்பா இறங்குவதைப் போலவே நானும் இறங்கி வருகிறேன்…’ என்று சொன்னார்.
அந்த நர்ஸ் ஆச்சர்யமாக அந்த பெண்ணை பார்த்தார். இதற்குள் அப்பாவும் கீழிறங்கி வந்துவிட, அவரையும் இரண்டு மடங்கு ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த நர்ஸ்.
‘கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்’ என்று சொல்லிவிட்டு வேகமாக வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
அப்பா எதுவும் புரியாமல் ’என்ன?’ என்று மகளைப் பார்த்து கேட்க ‘ஒன்றுமில்லைப்பா… பொதுவாகத்தான் சொல்லிவிட்டு போகிறார்’ என்று சொல்லிவிட்டு டாக்டர் அறையை நோக்கி இருவரும் நடந்தார்கள். அப்பா எப்படி நடந்து வருகிறாரோ, அப்படியே மகளும்!
அப்பாவும் மகளுமாய் நானும் என் அப்பாவும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 28, 2025 | வியாழன்