குரைக்காத நாய்களும், கடிக்கும் மனிதர்களும்!

குரைக்காத நாய்களும், கடிக்கும் மனிதர்களும்!

பெண் குழந்தைகளை கொடூரமாக வ*ன்கொ*டுமை செய்து கொ*லை செய்கின்ற… மாபாதகம் செய்கின்ற… கர்ண கொடூரமான மனித ஜீவன்களை  நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது.

-தனிமனித ஒழுக்கம் இல்லாமை…

-மது…

-க*ஞ்*சா…

-ஏழ்மையின் காரணமாகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டிய குழந்தைகள் பெரும்பாலான நேரம் தனித்திருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்…

-வசதியுள்ளவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து வேலைக்குச் செல்வதால் உண்டாகும் குழந்தைகளின் தனிமை…

-சதா சோஷியல் மீடியாவிலேயே புதைந்து கிடக்கும்  டிஜிட்டல் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் மனோநிலை. அந்த போதையினால் வேறெதுவுமே முக்கியமாகப்படுவதில்லை மனித மூளைக்கு…

-கடுமையான தண்டனை இல்லாமை…

இப்படி காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ பெண் குழந்தைகள்தான். குழந்தைகள் மட்டுமா, வயதான பாட்டிம்மா வரை இதே கதிதான். வயதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது அவர்களுக்கு. பெண் என்ற ஒரு உருவம் போதும் கயவர்களுக்கு.

அதிலும் தெருவில் பிச்சை எடுக்கும் பெண்களையும், மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களின் கதியையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என் பெற்றோர் இருவருமே 24 மணி நேர ஷிஃப்ட்டில் பணிபுரிந்தவர்கள். அம்மாவுக்கு பகல் பணி என்றால், அப்பாவுக்கு இரவு பணி. அம்மாவுக்கு நைட் பணி என்றால் அப்பாவுக்கு பகல் பணி. இருவருக்குமே டிரான்ஸ்ஃபர் காரணமாக வெவ்வேறு ஊர்களில் பணி செய்யும் சூழல். எங்கு சென்றாலும் எந்த ஊரில் வசித்தாலும் குடும்பமாகவே இடம்பெயர்ந்து அங்குள்ள சூழலுக்கு தகவமைத்துக் கொள்வோம்.

எங்களை அந்தந்த ஊரில் வீட்டிற்கும், அலுவலகத்துக்கும் அருகே எந்தப் பள்ளி நல்ல பள்ளியாக இருக்கிறதோ அந்தப் பள்ளியில் சேர்த்துவிடுவார்கள். காரணம், பள்ளிக்குக் கொண்டு விடுவது முதல் பள்ளியில் இருந்து அழைத்து வருவது வரை என் அப்பாதான் பார்த்துக் கொள்வார். அப்போது எங்களிடம் சைக்கிள் தான் இருந்தது என்பதால், சைக்கிளில் கொண்டு விட்டு சைக்கிளிலேயே அழைத்துச் செல்வார். என்றேனும் அப்பாவுக்கு வேலை இருந்தால் அம்மா வந்து அழைத்துச் செல்வார். ஒருநாளும் நாங்கள் தனியாக நடந்து வந்ததே இல்லை.

இப்படி பொத்திப் பொத்திப் பாதுக்காக்கும் பெற்றோர் எத்தனை பேருக்கு அமையும்? இப்படிப்பட்ட சாத்தியக் கூறுகள் எல்லாம் ஓரளவுக் பொருளாதார வசதியும், கல்வி அறிவும் சமநிலையில் இருக்கும் சமுதாயம் உருவானால் மட்டுமே சாத்தியம் அல்லவா?

ஒரு நாள் தவிர்க்கவே முடியாத சூழலில் நடந்து வர வேண்டியதானது. வீடு அருகில் தான் என்றாலும் ஒரு ஐந்து நிமிடமாவது ஆகும் அல்லவா? அந்த இடைவெளியில் சித்தார்த்தன் (புத்தர்) முதன்முதலாக வெளியுலக அவலங்களைப் பார்த்துப் பதபதைத்த மனநிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நான் பார்த்து பதபதைத்து சக வயது மாணவர்களின் அட்ராசிட்டியை.

நான் படித்து வந்த பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மிக அருகிலேயே ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளியும் இருந்தது. எங்கள் பள்ளி விட்டவுடன், எங்கள் பள்ளிக்கு அருகிலும், எதிரிலும் அந்தப் பள்ளி மாணவர்கள் சைக்கிளில்  நின்று எங்கள் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள் (ஈவ் டீஸிங்). அது மட்டும் எனக்குத் தெரியும்.

நான் பள்ளியில் இருந்து நடந்து வந்த நாளன்றுதான் அந்த பள்ளி மாணவர்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டும், மெதுவாக ஓட்டிக் கொண்டும் தெருவில் நடந்து செல்லும் மாணவிகளின் பின்னால் சிரிப்பும், கேலியும், கிண்டலுமாக வருவதை கவனித்தேன்.

எனக்கு அது புதிது. என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு நிம்மதி.

ஆனால் என்னவோ அந்த காட்சி எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. பெண்ணாய் பிறந்ததே பெரும் பாவமாகவும் தோன்றியது.

என் வகுப்பு மாணவி ஒருவள்  நான் மிக நெர்வஸாக இருப்பதைப் பார்த்துவிட்டு ‘என்னாச்சு?’ என்றாள்.

நான்: ‘மாணவர்கள் இப்படித்தான் தினமும் உங்கள் பின்னால் வருவார்களா?’

அவள்: ‘ஆமாம். இதில் என்ன இருக்கு…’

நான்: ‘அவமானமாக இல்லையா உங்களுக்கெல்லாம்? பேசாமல் நாம் ஆணாகப் பிறந்திருந்தால் இப்படி அவமானப்பட வேண்டாம் அல்லவா?’

அவள்: ‘அவமானம் என்ன இருக்கு இதில் எல்லாம். நாம் பெண்ணாக இருப்பதால்தான் அவர்கள் நம் பின்னால் வருகிறார்கள். நாம் ஆணாக இருந்தால் நாமல்லவா அவர்கள் பின் அலைய வேண்டி இருக்கும்.’ என சிரித்துக் கொண்டே முன்னேறிச் செல்ல நான் இறுக்கமான மனநிலையில் வீட்டிற்குள் சென்றேன்.

இத்தனைக்கும் சிறிய ஊர்தான் அது. மகன்களைப் பெற்ற பெற்றோருக்கும் தெரியும் மகன்கள் செய்யும் அட்டகாசங்கள். மேலும் அப்போதெல்லாம் இப்படி ஊர் சுற்றும் மாணவர்களைப் பார்ப்போர் அவர்கள் பெற்றோரிடம் சென்று ‘உங்க பையனை அங்கு பார்த்தேன், இங்கு பார்த்தேன்’ என போட்டுக் கொடுப்பதும் வழக்கம்.

ஆனாலும் ஆண் பிள்ளைகள் என்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அன்றைய பெற்றோர் தன் பிள்ளைகளின் அட்டகாசங்களை எல்லாம் கண்டும் காணாதது போல்தான் சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த காலத்து ஒட்டுமொத்த குணாதிசயம் இந்த சமுதாயத்தின் ஜீனாக ஊடுருவி, முற்றிலும் அழியாமல் ஒட்டிக் கொண்டிருப்பதால்தான் மெல்ல மெல்ல பெண் குழந்தைகளை சீரழிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே உள்ளது.

தினமும் என் அப்பா அம்மவுடன் அன்றைய பள்ளி நிகழ்வுகளைப் பேசுவோம். வழக்கம்போல் அன்றிரவு பேசும்போது நடந்ததை சொன்னேன்.

‘இந்த விஷயத்தில் நாம் அவமானப்பட எதுவும் இல்லை. அந்த மாணவர்களும் அவர்களைப் பெற்ற அப்பாவும் அம்மாவும் தான் அவமானப்பட வேண்டும். எனவே நீ தைரியமாக இரு…’ என்று தைரியம் சொன்னதுடன் அதன் பிறகு எந்த ஒரு காரணத்துக்காகவும் எங்களை தனியே நடந்து வரும் சூழலை கொடுக்கவே இல்லை என் பெற்றோர்.

இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த என் பெற்றோரிடம் பலர் சொல்லி இருக்கிறார்கள் ‘இப்படி செல்லமாக வளர்த்தால் பின்னாளில் ரொம்ப கஷ்டம். தன்னம்பிக்கையே இருக்காது’. அன்று என் பெற்றோர் சொன்ன பதில் இன்றும் அப்படியே நினைவில் உள்ளது. ‘இப்போது நாம் பாதுகாத்து  வளர்த்து விட்டால், அதுவே  அவர்களுக்குள்  தன்னம்பிக்கையாக பதிவாகிக் கொண்டே வரும். பின்னாளில் அந்தத் தன்னம்பிக்கையே அவர்களை வழிநடத்தும்’ .

அவர்கள் சொன்னது 100% நடந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு கடைக்குக் கூட தனியாக சென்று பொருள் வாங்கத் தெரியாமல் / அவசியம் இல்லாத அளவுக்கு பார்த்துப் பார்த்து வளர்த்த என் பெற்றோரின் அரவணைப்பு தந்த தன்னம்பிக்கையும் தைரியமும் நேர்கொண்ட பார்வையும் பின்னாளில் ஒரு நிறுவனம் தொடங்கவும், பிசினஸ் தொடர்பாக வெளிநாடுகளுக்கு தனியாகப் பிரயாணம் செய்யவும், செய்கின்ற எல்லா விஷயங்களிலும் தனித்துவமாக செயல்படவும், என்னைப் போலவே பலரை உருவாக்கவும் கூடிய மிக தன்னம்பிக்கையான பெண்ணாக வாழ வகுத்தது.

சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்.

சாதாரணமாக நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் குரைத்துக் கொண்டே கடிக்க வருவதும் / கடித்து குதறி இறக்கச் செய்வதுமான செய்திகளை பார்க்கிறோம். நான் பணி நேரம் முடிந்து இரவு 8 மணிக்கு எங்கள் தெருவில் பைக்கில் வந்தால் கூட நாய்கள் வேகமாகத் துரத்திக் கொண்டே வரும். இத்தனைக்கும் நம்மை தினமும் பார்க்கும் நாய்கள்தான்.

இன்றல்ல நேற்றல்ல, நாய்கள் என்றால் எப்போதுமே எனக்கு அலர்ஜிதான்.

அமைதியாக நாமுண்டு நம் வேலையுண்டு என மக்கள் நடமாடும் சாலையில் நடந்து வரும் / பைக்கில் வரும் / காரில் வரும்  நம்மையே கடிப்பதும், குரைப்பதுமான மனநிலையில் அலைந்து கொண்டிருக்கும் நாய்கள், குழந்தைகளை சாக்லெட் கொடுத்து ஏமாற்றி பொந்துக்குள்ளும், புதறுக்குள்ளும் அழைத்துச் செல்லும் கயவர்களை மட்டும் ஒன்றுமே செய்வதில்லையே…  எப்படி இது? என்ற கேள்விக்கான பதில் இன்று வரை கிடைக்கவே இல்லை.

நேற்று மாணவியை வன்கொடுமை செய்த ஒருவனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்த செய்திக் காணொளியில் அந்த இளைஞனின் அம்மா ‘அவனை என் கையில் கொடுங்க… நானே கொ*ன்னு போடறேன்’ என அழுது புலம்பிய காட்சி என்னவோ செய்துகொண்டே இருக்கிறது என்னை.

நல்ல ஆரோக்கியமான வீட்டை / குடும்பத்தை உருவாக்க முடிந்தால் மட்டுமே, பெரும்பாலான குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 26, 2026 | செவ்வாய்

#காம்கேர்கேபுவனேஸ்வரி
#compcarekbhuvaneswari

(Visited 8,726 times, 4 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon