மகளிர் தினத்தில்…
நானும் அப்பாவும் நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது எதேச்சையாக ஒருவர் பின்னால் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொன்னார்.
அதன் பிறகு அவருக்கு நன்றி சொல்லும்போது அவர் பிஎஸ்என்எல்-லில் லிஃப்ட் ஆபரேட்டராக பணி புரிந்ததாக கூறினார். பி.எஸ்.என்.எல் என்றதால் சில நிமிடங்கள் பேசினோம்.
சொந்தமாக ஒரு சிறிய அலுவலகம் வைத்து வீடு வாங்க விற்க உதவும் பிசினஸ் செய்து வருவதாகவும் கூறினார். பள்ளிக் கூடம் பக்கமே சென்றதில்லை எனவும், தன்னிடம் சாதாரண பட்டன் போன் மட்டுமே இருப்பதாகவும் கூறி அந்த போனை சட்டை பையில் இருந்து எடுத்துக் காண்பித்தார்.
நான் வியந்து அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பாவிடம் பி.எஸ்.என்.எல்-லில் இரவு பகல் என ஆயிரக்கணக்கில் பெண்கள் (தொலைபேசி ஆபரேட்டர்கள்) பணிக்கு வரும் கம்பீரத்தை மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார்.
சரி, உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்றபோது பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத நான் என் மகனை டாக்டருக்கு படிக்க வைத்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் பணி செய்கிறான். மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். என தன் கடமைகளை செய்த திருப்தியாக படபடவென சொல்லி முடித்தார்.
ஏன் சார் பெண்ணை படிக்க வைக்கவில்லையா? என்ற போது சிரித்துக் கொண்டே ‘டிகிரி படிக்க வைத்தேன். கல்யாணம் ஆன பிறகு ஊத்துக்கோட்டையில் 5000 பேர் படிக்கக் கூடிய பள்ளிக் கூடம் நடத்துகிறாள்’ என்ற போது ‘இதைத்தானே நீங்கள் முதலில் சொல்லி இருக்க வேண்டும்…’ என்று மிக மகிழ்ச்சியாக சொன்னேன்.
என் அப்பா விடுவாரா ‘என் மகள் 34 வருடமா சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்துகிறார்’ என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
‘அட அதான், பெண்களுக்காக பேசுகிறார்’ என்று அவர் சொல்ல மகிழ்ச்சியாக விடைபெற்றோம்.
எங்கெல்லாம் பெண்கள் சுயமாக சுயசார்புடன் இயங்குகிறார்களோ, அங்கெல்லாம் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவுவதை உணர முடியும்.
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மார்ச் 8, 2026 | ஞாயிறு








