சைக்கோக்களுக்குப் பொருந்தாது அல்லவா?

சைக்கோக்களுக்குப் பொருந்தாது அல்லவா?

சிலரின் செயல்பாடுகள் என்னை வியக்க வைக்கும். பிரமிப்பூட்டும். அவர்கள் எதை செய்தாலும் அது மிக நாகரிகமாக புரொஃபஷனலாக இருக்கும். அப்படியான ஒரு சிலரில் ஒருவர் தான் அண்மையில் கொ*டூரமான முறையில் உயிரிழந்த நாகலஷ்மி.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இவரது ரெடிமேட் புடவை கடையை தாண்டும் போதெல்லாம் அவர் கடையின் நுழைவாயிலினுள் இரு பக்கமும் வைக்கப்பட்டிருக்கும் மடிசார் கட்டிய இரண்டு பெண் சிலைகளும் கூட அத்தனை அழகாக தெரிவார்கள் எனக்கு.

நாகலஷ்மியின் ரீல்ஸ்கள் என் கண்களுக்குப் பட ஆரம்பித்ததே ஒரு வருடம் முன்புதான். அவற்றில் அவரது உற்சாகமான உருவமும், பேச்சும், ஒரு துளியும் ஆபாசமில்லாமல், முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் புடவை கட்டிக் காண்பிக்கும் நேர்த்தியும் என்னை கவர்ந்தது. தான் போட்டிருக்கும் உடையின் மீதே புடவையை கட்டிக் காண்பிப்பார். 1 நிமிடத்தில் சுடிதார் போடுவதைப் போல புடவையை அணியும் வகையில் ரெடிமேட் புடவையை தைத்து விற்பனை செய்து அதை உலக அளவில் கொண்டு சென்ற அவரது யுக்தி அபாரம்.

எனக்குத் தெரிந்து எத்தனையோ பெண்கள் புடவை வியாபாரம் செய்கிறார்கள் நேரடியாக கடை வைத்தும், வாட்ஸ் அப் மூலமும்.

ஆனால் இவர் ஒரு தொழில்முனைவராக வித்தியாசமான ஒரு ஐடியா மூலம் எல்லா வயது பெண்களையும், குறிப்பாக இந்தியா மட்டுமில்லாமல் அயல்நாட்டு பெண்களையும் தன் பக்கம் ஈர்த்த அவரது தொழில்முறை அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

குறிப்பாக, தன் வியாபாரத்துக்கு தானே ஒரு மாடலாக இருந்து விளம்பரப்படுத்தி இன்ஸ்டா பிரபலமாக உருவெடுத்து வளர்வதும் மிக அழகான ஆரோக்கியமான வளர்ச்சியாகவே இருந்தது.

அது மட்டுமில்லாமல் பிரபலங்களை அழைத்து அவர்களுக்கு அந்த ரெடிமேட் புடவையை அணியச் செய்து அவர்களுடன் இயல்பாக புன்னகையுடன் பேசி விற்பனையை மேம்படுத்திய மார்க்கெட்டிங் யுக்தியும் ‘அடடா’ போட வைக்கும் ரகம். எந்த இடத்திலும் ஒருதுளி முகம்சுளிக்க வைக்கும் செய்கைகளோ, வீடியோக்களோ என் கண்களில் பட்டதில்லை.

ஒரு முறை இவர் கடையின் உள்ளே சென்று பார்க்கலாம் என சென்றிருந்தேன். கூட்டம் அலைமோதியது. நிற்க இடமில்லை. சிறிய கடைதான். ஆனால் ஆர்டர் எடுக்கும் இடம் கீழ்த்தளத்திலும், புடவை தைத்து வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும் இடம் மேல்தளத்திலும் இருந்தது. அங்கு சென்றால் அதைவிட ஆச்சர்யம். அந்த தளம் முழுவதும் தைத்து பேக் செய்து வைக்கப்பட்ட புடவைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இல்லை இல்லை, மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்தன என்றே சொல்ல வேண்டும்.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு காரில் செல்லும்போது சிலநாட்கள் அவர் கடைக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருப்பார். ரீல்ஸ்களில் எப்படி பார்க்கிறோமோ அப்படியே பளிச்சென சிரித்த முகத்துடன் நடந்து வருவார்.

சிலரின் வெற்றியை தூர நின்று வியப்போம் அல்லவா? அந்த வகையில் அவரின் வியாபார வெற்றியை தூர நின்று ரசித்தும் வியந்தும் வந்த எனக்கு அவரது கொடூரமான மரணம் திரும்பத் திரும்ப மனதுக்குள் அலைமோதியபடியே உள்ளது.

இத்தனைக்கும் நான் அவர் கடையையும், வியாபாரத்தையும், அவரது மார்க்கெட்டிங் யுக்தியையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேனே தவிர, அவரிடம் பேசியதுகூட இல்லை.

என்ன பிரச்சனை என முழுமையாக தெரியாது. ஆனால், ’இனி ஒழுங்காக இருப்பேன்’ என இரண்டாவது வாய்ப்பு கேட்டு திரும்ப வந்த சைக்கோ கணவன் செய்த செயலை இன்னமும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னர், என்னை பேட்டி எடுத்த ஒரு பத்திரிகையாளர் பேட்டி முடிந்த பிறகு, பொதுவாக நாட்டு நடப்பு, மனிதர்களின் செயல்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன கருத்துதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

‘ஒருவரது இயல்பான குணம் அப்படியேத்தான் அடிமனதில் இருக்கும். அவர்கள் என்னதான் தான் மாறிவிட்டேன் என சொன்னாலும், சூழல் அழுத்தமாகும்போது அவர்களது இயல்பான குணம் தலைதூக்கும்…’. அவர் ஆண், பெண் என குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொன்னார்.

நாகலஷ்மியின் கணவனது தாழ்வு மனப்பான்மையும், ஈகோவும், பொறாமையும் தற்காலிகமாக குறைந்து விட்டதைப் போல் அல்லது முழுமையாக அவற்றை எல்லாம் நீக்கிவிட்டேன் என்று கூறிக்கொண்டு இணக்கமாக இருக்க முற்பட்டாலும், பேச்சு வார்த்தைகள் தடிக்கும்போது அவர்களது இயல்பான குணம் தலைதூக்கத்தான் செய்யும் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

பிடிக்கிறது,
பிடிக்காதது,
ஒத்துப் போகிறது,
ஒத்துப் போகாதது என்பதும்,
பிடிக்கவில்லை என்றால்
ஒத்துப் போகவில்லை
என்றால் ஒதுங்கிவிடலாம் என்று கருத்து சொல்வது
மனநிலை சரியாக இருக்கும் ஆண் / பெண்களுக்குப் பொருந்தலாம்.  சைக்கோக்களுக்குப் பொருந்தாது அல்லவா?

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
ComPcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ComPcare Software

மே 2, 2026 | சனிக்கிழமை

#காம்கேர்கேபுவனேஸ்வரி
#compcarekbhuvaneswari

(Visited 26,578 times, 5 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon