எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!

இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது.

நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.

அந்தப் புத்தகத்தை படித்த கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் கல்லூரியின் (Valluvar College of Science and Management, Karur) சேர்மேன் திரு. செங்குட்டுவன் மற்றும் அவர்கள் மனைவி திருமதி. ஹேமலதா இருவரும் என்னை தொடர்புகொண்டு பேசினார்கள்.

அந்தப் புத்தகத்தில் நான் எழுதி இருந்த ஒரு கருத்து அவர்கள் கல்லூரியில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததை மிக அழகாக விவரித்து என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி குறித்து நான் எழுதியிருந்த நிகழ்வில் இருந்த கருத்தினால் ஈர்க்கப்பட்டு இனி அவர்கள் கல்லூரியில் ‘ஸ்டாஃப் மீட்டிங்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கூட பயன்படுத்தப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக ‘HOD மீட்டிங்…’, ‘Lecturer மீட்டிங்…’, ‘Professor மீட்டிங்’ என்று மாற்றி விட்டதாகவும் சொன்னதோடு, அந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இன்றைய குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தேவையான Golden Words என்றும், ஒவ்வொரு வார்த்தையும் உண்மையின் பிரதிபலிப்பாக இருந்தது என்றும், இப்படிப்பட்ட சிறந்த வழிகாட்டிகள்தான் இன்றைய இளைஞர்களுக்கு தேவை என்றும் மனதார பாராட்டினார்கள். 2000 மாணவ மாணவிகள் படிக்கின்ற அவர்கள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்து அவர்கள் மாணவ மாணவிகளுக்காக பேசவும் அழைப்பு விடுத்தார்கள்.

என் எழுத்து ஒரு கல்லூரியில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நினைத்து மகிழ்ந்த அதே நேரம், இத்தகைய கருத்துக்களை எழுதத் தூண்டி என்னை ஒரு கருவியாக்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கும் நன்றி சொன்னேன்.

கல்லூரியில் மாற்றத்தை உண்டாக்கிய கருத்து ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ புத்தகத்தின் பக்கம் 16-ல் உள்ளது.

 ‘ஓட்டலுக்கு போகிறோம். ஏசி அறையில் சாப்பிடச் செல்கிறோம். ஓட்டல் சர்வருக்கும் அமக்கும் என்ன பாசப் பிணைப்பா ஏற்படுகிறது?  சாப்பாடு வீணாகி இருந்தால் சர்வரிடம் சத்தம் போடுகிறோம். வெளியில் வந்து ஓட்டல் முதலாளியை திட்டுகிறோம். கோபமாக வெளியில் சென்று விடுகிறோம். இது போன்ற கன்ஸ்யூமர் மனநிலையில் தான் இன்றைய கல்வி இருக்கிறது. பணம் கட்டுகிறோம். படிக்க வைக்கிறோம். ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை என்கின்ற மனோபாவம் பெற்றோர்களிடமும் மட்டுமில்லாமல், மாணவர்களிடமும் மேலோங்கி இருப்பது தான் நிதர்சனம். இந்த கன்ஸ்யூமர் மனநிலையினால் தான் குருவாக வணங்க வேண்டிய ஆசிரியர்கள், டீச்சர், லெக்சரர், புரொஃபசர் என்றெல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள் ஸ்டாஃப் என்று உயிர்ப்பில்லாமல் அழைக்கப்படுகிறார்கள்…’

புத்தகம் கிடைக்கும் இடம்: நியூ சென்சுரி புக் ஹவுஸ், 044-28482441

பிப்ரவரி 20, 2018

(Visited 141 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari