ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம், 13-12-2015, ஞாயிறு அன்று வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகளைப் பிடிக்கும் தொழிலைச் செய்கின்ற இருளர் சமூகத்தைச் சார்ந்த 200 குடும்பங்களை ஒருங்கிணைத்தோம்.
வருண பகவானுக்கான ஒரு சிறிய ஸ்லோகத்துடன் ஆரம்பித்து 10 நிமிடங்கள் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினேன். அத்தனை கஷ்டத்திலும் அவர்கள் அமைதியாக நான் பேசியதை கூர்ந்து கவனித்தார்கள்.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புடவை + ஒரு லுங்கி + ஒரு துண்டு இவற்றுடன் பிரிட்டானிகா மில்க் பிஸ்கெட் பாக்கெட் ஒன்று இவற்றை கொடுத்தபோது ஒவ்வொருவரும் எங்களிடம் நன்றி சொன்னதோடு, பலர் ‘மேடம், நீங்கள் கொடுக்கும் இந்த பொருட்களைவிட நீங்கள் எங்களுடன் பேசியதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.’ என்று சொன்னார்கள். இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் நமக்கு?
வெள்ள நிவாரணத்துக்காக ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்த இந்த முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் உதவினார்கள். திரு. தர்மலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக எங்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருந்தார். பொருட்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்துவது, மக்களை ஒருங்கிணைப்பது முதற்கொண்டு எல்லா பணிகளிலும் தன்னை முழு மனதுடன் ஈடுபடுத்திக்கொண்டார். திரு. சடகோபன் அவர்கள் நிகழ்ச்சியை நல்லபடியாக ஆரம்பித்து, திறம்பட நடத்தி வைத்து, சிறப்பாக முடித்துக் கொடுத்தார். தவிர, ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஒரு பக்கெட், கப் மற்றும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் கொடுத்தார்கள்.
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக நாங்கள் எடுத்த இந்த சிறிய முயற்சிக்கு, அமெரிக்காவில் இருந்து என் சகோதரி ஸ்ரீவித்யா குடும்பத்தினரும், திரு. வெங்கடாசலம் குடும்பத்தினரும், திருமிகு. சுஜாதா குடும்பத்தினரும், என் சகோதரன் சுவாமிநாதன் குடும்பத்தினரும், காம்கேர் நிறுவனமும் தங்களால் ஆன உதவிகளை செய்தனர்.