பணிகளும், ரெஸ்பான்ஸிபிலிடியும்…

நேற்று ஈரோடு – பெருந்துறையில் இருந்து வாசகர் ஒருவர்  போன் செய்ததாகவும், நான் முக்கிய மீட்டிங்கில் இருந்ததால் ஒரு மணி நேரம் கழித்து போன் செய்யுங்கள் என பதிலளித்ததாகவும் என் உதவியாளர் சொன்னார்.

மிகச் சரியாக சொன்ன நேரத்துக்கு போன் அழைப்பு வந்தது.

தன் பெயரையும் தனக்கு 45 வயதாகிறது எனவும் அறிமுகம் செய்து கொண்டு,  மரியாதையுடன் வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்தவரை இடைமறிக்காமல் கேட்கத் தொடங்கினேன்.

15 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் முதலாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியில் வந்துவிட்டதாகாவும், மனைவி சொற்ப வருமானத்தில் ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகவும், மூத்த மகன் இன்ஜினியரிங் படித்து வருவதாகவும், இரண்டாவது மகன் Down Syndrome எனப்படும் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தன் வாழ்க்கையை விவரித்தார். வாழ்வாதாரத்துக்காக ஏதேனும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம் என நினைப்பதாகவும் சொன்னார்.

மேலும், நான் எழுதி நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ள ‘திறமையை பட்டை தீட்டுங்கள்’ என்ற புத்தகத்தைப் படித்ததாகவும், அதில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாகவும், குறிப்பாக ‘வேலைக்குச் சென்றால் ஒரு பாஸ், சுயமாக தொழில் செய்தால் ஒவ்வொரு கஸ்டமரும் பாஸ்’ என்ற கருத்தை அவர் மனைவி அவருக்கு எடுத்துச் சொல்லி அவர் மனதை தயார்படுத்தியதாகவும் சொன்னார். (புத்தகம் கிடைக்குமிடம் அறிய… 044 – 28482441)

‘அப்படியா…’ என உற்சாகத்துடன் சொன்னபோது, ‘நான் இறைவனை அதிகம் நம்புகிறேன்… இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த போது, கடவுள் உங்கள் மூலம் எனக்கு ஏதேனும் செய்தி சொல்லி அனுப்பி இருப்பார். நான் தொடர்பு கொண்டால்தானே அது சாத்தியம்… என தோன்றியது… அதனால் பேசினேன்…’ என்றார்.

எழுத்துக்கு இத்தனை வலிமை இருப்பதை நினைத்து சற்றே நெகிழ்ந்த வேளையில், ‘மேடம் என் பிள்ளைகள் இரண்டு பேரையும் வாழ்த்துங்கள்… உங்கள் ஆசியில் என் இரண்டாவது பிள்ளை குணமாகட்டும்’ என சொன்னபோது என் கண்கள் பணித்தன.

நாத்தழுதழுக்க… ‘உங்க இரண்டாவது பிள்ளை சீக்கிரம் குணமாயிடுவார்… வருத்தப்படாதீங்க… மூத்த பிள்ளை நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறிடுவார்… வாழ்த்துக்கள்…’

பேசி முடித்து நீண்ட நேரம் ஆகியும் அவரது குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது…

என்னிடம் எந்த உதவியும் கேட்காமல், தன் பிள்ளைகளுக்கு என் வாழ்த்தைக் கேட்டுப் பெறுவதற்காகவே போன் செய்யும் அளவுக்கு என் எழுத்தின் வலிமையும் தாக்கமும் இருப்பதை உணர்ந்த அந்த நொடியில் இறைவனை உணர்ந்தேன்.

பொதுவாக என்னுடைய புத்தகத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றுக்காகவும், என் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்காவுமே அழைப்புகள் அதிகமாக வரும். ஆனால் என் வாழ்த்தைக் கேட்டு வாங்குவதற்காக மட்டுமே வந்த அழைப்பில் இருந்து இன்னும் நான் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதையும், எனக்கான ரெஸ்பான்ஸிபிலிடி கூடியிருப்பதையும் புரிந்துகொண்டேன்.

அன்புடன்

காம்கேர் கே.புவனேஸ்வரி
மார்ச் 17, 2018

 

(Visited 77 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon