பெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)

08-03-2015, ஞாயிறு அன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத் நடத்திய பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தேன்.  ‘ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு  ‘திறமையின் அடிப்படையிலான கம்ப்யூட்டர் கல்வியும், வேலைவாய்ப்புகளும்’ என்ற பொருளில் பேசினேன். என் துறையில் நான் சந்தித்த சவால்களையும்,  என் பார்வையில் பெண்ணியம்(FEMINIST) குறித்த கருத்துக்களையும் பதிவு செய்தேன்.  அதன் சாராம்சம்…

மகானைப் போல மனதை ஒருமுகப்படுத்தும் வயது

ஒரு இளைஞனுக்கு தான் ஒரு மகான் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தது.  ஒரு மகானை நாடிச் சென்றான்.

காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம், ‘ஸ்வாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன? என்று கேட்டான்.

‘உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்’ என்றார் அவர். இளைஞனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து விட்டான்.

‘ஏன் ஸ்வாமி! இதைத்தான் ஊரில் எல்லோரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான் தானா?’ என்று சற்று நையாண்டியாகக் கேட்டான் அந்த இளைஞன்.

‘குழந்தாய்! எல்லாரும் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும் போதும், உறங்கும் போதும், தியானம் செய்யும் போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதை பற்றி நினைப்பதில்லை. மனதை நான் செய்கிற செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும் போதே, மற்றதில் மனதைத் திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம், என்றார்.

இப்போது தான் இளைஞனுக்குப் புரிந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றைச் செய்தால் தான் மகானாக முடியுமென்று.

இளைஞர்களாக இருக்கக்கூடிய இந்த வயதில்தான் மகானைப்போல மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட முடியும்.

உங்களுக்கு பணத்துக்கோ, சாப்பாடுக்கோ, துணிமணிக்கோ, மொபைல்போன், லேப்டாப், பைக் போன்ற கேட்ஜெட்டுகளுக்கோ கவலையே இல்லை. ஏன் என்றால், ‘அம்மா எனக்கு இது வேணும், இன்னிக்குள்ள வேணும்’ அப்படின்னு ஆர்டர் போட்டா போதும். அடுத்த நொடி, செய்துகொடுக்க அப்பா, அம்மா ரெடியா காத்திருக்கிறார்கள். நினைத்தால் மால்களில் நண்பர்களோடு சென்று அரட்டை அடிக்கலாம். தியேட்டர் சென்று சினிமா பார்க்கலாம். ஹோட்டலுக்குச் சென்று விரும்பிய உணவை சாப்பிடலாம். இவ்வளவு வசதிகளை அப்பா, அம்மா செய்துகொடுத்திருந்தாலும் அவர்கள் உங்களை படி என்று சொல்லி விட்டாலோ அல்லது இண்டர்நெட்டில் ஃபேஸ்புக்கில், வாட்ஸப்பில் நீண்ட நேரம் உட்காராம சீக்கிரமா தூங்கச் சொன்னாலோ, நேரத்துக்கு வீட்டுக்கு வரச் சொன்னாலோ உங்களில் எத்தனை பேரால் சிடுசிடுக்காமல், கோபப்படாமல் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க முடிகிறது?

உங்களுக்கெல்லாம் இது பொற்காலம். எல்லா வசதிகளும் இருக்கு, கேட்டதெல்லாம் கிடைக்கிறது… இந்த வயதில்தான் நன்றாக படிக்க முடியும், நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும், எதிர்காலம் குறித்து கனவு காண முடியும், கனவுகளை நிஜமாக்க உழைக்க முடியும். திருமணம் ஆகி நீங்களும் பெற்றோர் நிலைக்கு வந்த பிறகு எம்.ப்.ஏவோ, பி.எச்.டியோ செய்ய நினைக்கும்போது இத்தனைச் சுதந்திரமாக படிக்க முடியுமா? மகான் சொன்னதைப்போல மனதை ஒருமுகப்படுத்த முடியுமா? பரிட்சை அன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கலாம், வீட்டில் கணவனுடன்  ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம், சமையல், சாப்பாடு என்று மனதை பரிட்சையில் கவனம் செலுத்தவிடாமல் எத்தனையோ கவலைகள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு காத்திருக்கும் உங்கள் மனதில்.

24, பிப்ரவரி அன்று செய்தித்தாள் ஒன்றில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. //மும்பை:வாஷிமில் உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா. நேற்று தனது 12-வது வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டு இருந்தார். தேர்வு எழுத செல்லும் 1 மணி நேரத்திற்கு முன்பு அவரது தந்தை திடீர் மரணம் அடைந்தார். இதனால் துயரமுற்ற மாணவி, சோர்ந்து போய்விடாமல், மனதைரியத்துடன் தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுதினார். துக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சென்ற அந்த மாணவியை பாராட்டி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.//

அப்பா இறந்த துக்கத்தைக் கூட மறந்து ஒரு மாணவியால் பரிட்சை எழுத முடியக்கூடிய மனோதைரியம் உள்ள வயது இது. ஆனால் உங்கள் குழந்தைக்கு சிறு காய்ச்சல் என்றாலும், அலுவலக வேலையைக் கூட கான்சண்டிரேட் செய்து பார்க்க முடியாது உங்களால். எனவே, உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான காலத்தை வீணடித்துவிடாதீர்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இப்போது ஒருநாள் பகலில் தூங்க வேண்டுமென்றால் கூட மொபைலை சைலண்ட் மோடில் போட்டு விட்டு ஜன்னல் திரையை மறைத்து ஏசி போட்டுக்கொண்டு ஒரு மணிநேரம் தூங்கலாம். ஆனால் குடும்பம், குழந்தை என்று வந்துவிட்ட பிறகு இரவில் கூட நிம்மதியாக தூங்க முடியாது. கண் அசரும்போது உங்கள் குழந்தைக்கு உடல் அனலாய் கொதிக்கலாம், ஜுரத்தில் அனத்தலாம் அல்லது வேறு ஏதோ காரணத்தில் அழலாம். எதிர்பார்க்கின்ற காரணங்களோடு, எதிர்பார்க்காத காரணங்களும் சேர்ந்துகொண்டு நித்தம் ஒரு மனநிலையில்தான் இருக்க வேண்டி இருக்கும்.

எனவே திரும்பவும் சொல்கிறேன், காலம் கொடுத்திருக்கும் இந்த காலகட்டத்தில் அதிகபட்சம் உங்களால் எந்த அளவுக்கு கனவு காண முடியுமோ அவ்வளவையும் கண்டு விடுங்கள். ஏன் என்றால் பின்னாளில் உங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமே நீங்கள் கனவு காண வேண்டி இருக்கும். அவர்கள் கனவை நனவாக்கப் போராட வேண்டியிருக்கும்.

இந்த இளமை காலம் கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வரம். காசை சம்பாதிக்கலாம், வீடு காங்கலாம், கார் வாங்கலாம், எல்லா வசதிகளையும் பணத்தினால் பெற்றுவிடலாம். ஆனால் இளமையை எந்த காலத்திலும் திரும்பப் பெறவே முடியாது. எனவே, உங்களுக்குக் கிடைத்திருக்கும் இளமைப் பருவத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

பெண்ணியம்

ஒரு முறை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினேன். எல்லோரும் அமைதியாக இருக்க ஒரு சாரார் மட்டும் தங்களுக்குள்(ஆண், பெண் இருபாலரும்) சற்று வரம்பு மீறி நடந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களிடம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் செய்வதை மிக நாசூக்காக தவறு என்று சுட்டிக்காட்ட, அவர்கள் என்னைப் பார்த்து ‘மேடம் அப்போ நீங்கள்  ஃபெமினிஸ்ட் இல்லையா?’ என்றனர். ஆக, ஃபெமினிஸ்ட் என்றால் அவர்களைப் போல நடந்துகொள்பவர்களாகவே இருப்பார்கள் என்ற பொருளில்தான் பெண்ணியம் குறித்த கருத்து மக்கள் மனதில் உள்ளது.

பெண்ணியம் என்ற வார்த்தையில் உள்ள ஐந்து எழுத்துக்களுக்கு ஏற்ப ஐந்து குணங்கள் உள்ள பெண்களே பெண்ணியவாதி என்பது என் கருத்து.

முதல் குணாதிசயம்

பெண்ணியத்தின் முதலாவது குவாலிடியாக, தன் அடிப்படைத் தேவைகளுக்காக அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் இருக்கப் பழகிக்கொள்வதைச் சொல்லலாம்.

உதாரணத்துக்கு, வீட்டில் உள்ள ஆண்களையோ அல்லது மற்ற ஆண் நண்பர்களையோ எதிர்பார்க்காமல், பைக் ஒட்டக் கற்றுக்கொண்டு ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லுதல்,  டிக்கெட் முன் பதிவு செய்தல், பேங்க் சென்று தனக்காக அக்கவுண்ட் உருவாக்கிக்கொள்ளல்… இப்படித் தன்னால் முடியாது என்று ஒதுங்கித் தங்களைத் தாங்களே தாழ்வுபடுத்திக்கொள்ளாமல் தனக்கான வேலைகளை தானே செய்துகொள்ளப் பழகுதல் போன்றவற்றைச் சொல்லலாம்.

இரண்டாவது குணாதிசயம்

அடுத்த குவாலிடியாக, நாம் தனித்துவமாக இயங்குவதோடு, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதைச் சொல்லலாம்.  தன் திறமையினால் முன்னுக்கு வந்த பெண்களை பாராட்டக் கூட வேண்டாம்; குறைந்தபட்சம் இழிவாகவாவது பேசாமல் இருக்கலாம்.

உதாரணத்துக்கு, தெரியாமல் நம் பைக்கில் இடித்து விட்டு சாரி கேட்கும் மற்றொரு பெண்ணிடம் ‘பரவாயில்லை…பார்த்துச் செல்லவும்’ என்று புன்னகை பதிலைச் சொல்லலாம்.

மூன்றாவது குணாதிசயம்

மூன்றாவது குவாலிடியாக, நாமும் உயர்ந்து நம்மைப் போன்றவர்களையும் உயர்த்துவதைச் சொல்லலாம்.

நாம் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் செல்வதோடு நின்றுவிடாமல், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பூ விற்கும் பெண்கள், பழங்களையும், காய்கறிகளையும் வீடுகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், செருப்பு தைத்து பிழைப்பு நடத்தும் பெண்கள் என்று நம்மைச் சுற்றி தன்னம்பிக்கையோடு வாழ முயன்று கொண்டிருக்கும் அடித்தட்டுப் பெண்மணிகளை புன்னகையோடு எதிர்நோக்கி அவர்களுக்கு நம்மால் ஆன ஊக்கத்தைக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

பெண்களால் நடத்தப்படும் டிரைவிங் ஸ்கூல், பெண்கள் ஓட்டுகின்ற ஆட்டோ, பெண்களால் நடைபெறும் மெஸ் போன்றவற்றை ஆதரிக்கும் முதல் பெண்ணாக நாம் இருப்போமே! நம்மை நாம் மதிக்காவிட்டால் யார் மதிப்பார் நம்மை? .

நான்காவது குணாதிசயம்

நான்காவது குவாலிடியாக, பெண்களைப் பற்றி கேலி/வம்பு/வதந்தி பேசும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நம் நெஞ்சை நிமிர்த்தி, ‘போதும், என்னிடம் மற்ற பெண்களைப் பற்றி தரக்குறைவாகப்  பேசாதீர்கள்’ என்ற அளவிலாவது நம் எதிர்ப்பைக் காட்டத் தயங்கக் கூடாது. திரும்பத் திரும்பச் சொல்லுவோம். மாற்றம் தானாக மலரும். மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதில் முதல் ஆளாக ஏன் நாம் இருக்கக் கூடாது?

ஐந்தாவது குணாதிசயம்

ஐந்தாவது குவாலிடியாக, ‘இந்த சமுதாயத்தின் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு பெண்ணுக்கும் எப்படிப்பட்ட ஒரு அநீதி ஏற்பட்டாலும், அதன் வலியில் உங்களை ஒரு துளியாவது பாதிக்க வேண்டும். அப்போதுதான் அதுகுறித்த ஒரு சிந்தனை உங்களுக்குள் ஏற்படும். அந்த சிந்தனைதான் என்ன செய்தால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்கம்தான் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல். செய்திகளை செய்திகளாக மட்டுமே வாசித்துவிட்டோ அல்லது பார்த்துவிட்டோ சென்றுகொண்டே இருந்தால் மனிதர்களாகப் பிறந்ததற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

நம்மில் எத்தனைப் பெண்கள் பிசியான ஒரு ரோடில் பைக்கில் ஸ்கிட் ஆகி விழுந்துவிட்ட மற்றோரு பெண்ணுக்கு உதவ முன் வருகிறோம். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்கத்தொடங்காமல், மொபைலில் ஃபேஸ்புக்கில் செய்திகளைப் படிப்பதைப்போல பாவலா செய்யாமல், புத்தகம் படிப்பதைப்போல நடிக்காமல் நம்மில் எத்தனை பேர் பஸ்ஸில் கூடப் பயணிக்கும் மற்றொரு பெண்ணை கேலி செய்யும் ரவுடியை எதிர்க்கிறோம். அட்லீஸ்ட் மிரட்டும் விழிகளோடாவது எதிர்கொள்கிறோம்? சிந்திப்போம்.

மிரட்ட வேண்டாம், கத்த வேண்டாம், கூப்பாடு போட வேண்டாம் கண்களால் ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாலே போதும். அந்த பார்வைக்கே பயந்துகொண்டு ஜகா வாங்கும் வீர ஆண்கள்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அதுதெரியாமல் நாம்தான் அவர்களை முரட்டு மீசை வைத்த சந்தனக்கட்டை வீரப்பன் அளவுக்கு கற்பனை செய்துகொண்டு பயப்படுகிறோம். இதே கருத்தை வலியுறுத்தும் ஒரு குறும்படம் என்னைக் கவர்ந்தது.

//ஒரு நிமிடக் குறும்படம் பார்த்தேன். ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.  அவள் அருகே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து கமெண்ட் அடித்தபடி அவள் அருகே நகர்ந்து நகர்ந்து வருகிறார்கள். அந்தப் பெண்ணும் பயந்தபடி இன்னும் தள்ளித்தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

பள்ளிச் சீருடையில் பன்னிரெண்டு, பதிமூன்று வயதில் இரண்டு சிறுவர்கள் அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கும், இளைஞர்களுக்கும் இடையே அமர்கிறார்கள். இளைஞர்களைப் பார்த்து ஒற்றை வார்த்தையை உதிர்க்கிறார்கள் ‘அண்ணா, பஸ் அந்தப் பக்கம்தான் வரும்… இந்தப்பக்கம் வராது…அங்கே பாருங்கள் அண்ணா!’ என்று பெண் அமர்ந்திருக்கும் திசைக்கு எதிர்திசையில் கைகளைக் காட்டுகிறார்கள். இளைஞர்கள் சற்றே கில்டியாகி வெட்கப்பட்டு தலைகுனிந்து வேகமாக எழுந்துகொள்ளவும், பஸ் வரவும் சரியாக இருந்தது.

You no need to be a Man to Save some One. You Should be MARD (Man Against Rape and Discrimination) என்ற வாசகங்களோடு அக்குறும்படம் முடிகிறது.//

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

 

(Visited 165 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon