எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான்.
சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று வலியுறுத்தும் செய்திகளை நாம் நித்தம் கடந்து வரும் இன்றைய சூழலில் அவர் சொன்ன தகவலை முதன்முறை கேள்விப்படும்போது கேட்கும் யாருக்குமே அதிர்ச்சியாகவே இருக்கும்.
‘அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தால் யாரோ வயதானவர் என நினைத்து தொந்திரவு செய்ய மாட்டார்கள்… அதனால்தான் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்…’ என சொன்னபோது ஆச்சர்யத்துடன் நான் கேட்டேன்… ‘உங்களை பெண்கள் தொந்திரவு செய்கிறார்களா….’.
‘இல்லை இல்லை, ஆண்களை ஆண்களே தொந்திரவு செய்வதுதான் இப்போதைய ட்ரெண்டாக உள்ளது… ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆண்கள்தான் தொந்திரவு செய்கிறார்கள்… அசிங்கமாக பேசுகிறார்கள்… அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்…’
யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், வெப்சைட்டுகள் போன்ற சமூக வலைதள நெட்வொர்க்குகளில் உள்ள ஆபாசங்களில் இருந்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தனிமனித ஒழுக்கம் குறைந்து வருவதுதான் இன்றைய சூழலில் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும் அச்சாணி.
ஆணாக இருந்தால் தங்கள் பெண் நட்புகள் குறித்தும், பெண்ணாக இருந்தால் தங்கள் ஆண் நட்புகள் குறித்தும் அத்துமீறி எழுத்தில் வடித்து பொது தளத்தில் பதிவு செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்பது தெரிந்தும் சமூக வலைதளங்கள் கொடுக்கும் போதையில் அந்த தவறை தொடச்சியாக செய்துவருகிறார்கள்.
தங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல, பிறர் வாழ்க்கையையும் அவர்கள் குழி தோண்டி புதைக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு திருமணம் பேசியபோது, அந்த நண்பரின் பெண் சிநேகிதியின் ஃபேஸ்புக் பதிவினால் அந்த நண்பரின் திருமணம் நின்றுபோனது.
அப்படி என்னதான் எழுதி இருந்தார் அந்த சிநேகிதி? தான் அந்நியோன்யமாக அந்த நண்பருடன் பழகியவிதம், இரவு தூக்கம் வராமல் இருந்தாலோ அல்லது ஏதேனும் மன வருத்தம் இருந்தாலோ போனிலோ கூப்பிட்டு பேசி அழுது ஆறுதல் அடையும்விதம், பைக்கில் செல்வது, ஓட்டலில் சாப்பிடுவது, இரவு வீட்டுக்கு தினமும் கொண்டுவிடுவது, சண்டை போடுவது, பிறகு சமாதானம் அடைவது என ஆரம்பித்து அவர்கள் அந்நியோன்யத்தை படிப்பவர்கள் யாருக்குமே அருவருப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது அந்த பதிவு.
உண்மையான நட்போ, அன்போ இருந்தால் அதை பொதுவெளியில் புகைப்படமாகவோ எழுத்து வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவிலும் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.
கணவன் மனைவியாகவே இருந்தாலும் உண்மையான காதல் இருப்பவர்கள் தோளில்கூட கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. நம் தாத்தா பாட்டியோ, அப்பா அம்மாவோ பொது வெளியில் பார்த்திருப்போமா அல்லது தொட்டுப் பேசித்தான் பார்த்திருப்போமா? ஆனால் நொடிப்பொழுதில் ஒருவர் கண் அசைவில், உடல் மொழியில் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.அதுதான் உண்மையான பாசம், காதல், அன்பு.
நட்பு, காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு, பெண்ணியம், ஆணியம் எல்லாமே இன்று பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தடம்மாறி பயணிப்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பார்த்து பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களை பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட நாம் இன்று முகமே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களுடன் நித்தம் பேசி பழகுகிறோம். அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்காக போராடுகிறோம். மல்லுக்கு நிற்கிறோம்.
2010 – ல் நடந்த ஒரு உண்மை நிகழ்வு. தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒரு தம்பதி வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார்கள். இவர்களின் மகனை ராஜூவை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 2010-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்புக்காக சேர்த்தனர்.
பல்கலைக்கழக விடுதியில் கிளமென்டி என்ற இளைஞருடன் தங்கிப் படித்தார். கிளமென்டிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. ராஜு வெளியே செல்லும் நேரத்தில், கிளமென்டி ஓரினச் சேர்க்கை நண்பர்களுடன் உறவு கொள்வது வழக்கம். ஒருநாள் ராஜூ மறதியாக தன் கம்ப்யூட்டரின் வெப்கேமிராவை ஆஃப் செய்யாமல் வெளியில் சென்று விட்டார். அப்போது கிளமென்டி தன் நண்பருடன் உறவு கொள்வது ராஜூவின் கம்ப்யூட்டரில் ரெகார்ட் ஆகி விட்டது.
அறைக்கு திரும்பிய ராஜூ தன் கம்ப்யூட்டரில் பதிவான காட்சியைப் பார்த்து விட்டு அதிர்ந்து போனார். அதே நேரம் விளையாட்டாக அந்த உறவை டிவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
தன் நண்பர்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிந்ததைக் கண்டு கிளமென்டி, ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிளமென்டி தற்கொலை செய்து கொள்ள ராஜூ காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்த விசாரணையில், நண்பனின் அந்தரங்கச் செயலை உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 30 நாள் சிறை தண்டனையும், மூன்றாண்டுகள் நன்னடத்தை பிணையும், 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பானது. அது மட்டுமில்லாமல் 300 மணி நேரம் சமூக சேவையாற்ற வேண்டும் என்றும் ராஜூவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உண்மை கதையில் 20 வயதே ஆன ராஜூ விளையாட்டாக தான் பார்த்த நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளப் போய், வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கிறார்.
இதுபோல ஆயிரம் உண்மை கதைகள் இணையவெளியில் நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மொபைல் போன் மற்றும் லேப்டாப்புகளில் கேமிரா மீது ஸ்டிக்கர் ஏதேனும் வைத்து மறைத்து, தேவைப்படும்போது அதை நீக்கி புகைப்படம் வீடியோ எடுக்கலாம். ஏனெனில் நம்மை அறியாமலேயே கேமிரா மூலம் ரெகார்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ஸ்மார்ட் போன்களை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது, மற்றவர்களிடம் நம் போன்களை பயன்படுத்த அனுமதிக்கும்போது, போன் தொலைந்துபோகும் சமயங்களில், நம் குழந்தைகளிடம் கேம்ஸ் விளையாட நம் ஸ்மார்ட் போனை கொடுக்கும் நேரங்களில் நம் போனில் உள்ள தகவல்கள் லீக் ஆகவும், டெலிட் ஆகவும், தவறுதலாக ஷேர் ஆகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கண்களுக்கே தெரியாமல் எங்கு வேண்டுமானாலும் பொருத்தப்படும் மைக்ரோ கேமிராக்கள் பெருகிவிட்ட இந்த நாளில் நக இடுக்கில் கூட கேமிராவை வைத்து அசால்டாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆப்கள் மூலம் அவற்றை வேறு மனிதர்களின் உடலில் பொருத்தி ஆபாசமாக்கும் அழிவு சக்திகள் பெருகிவிட்டன.
மைக்ரோ கேமிராக்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் பியூட்டி பார்லர்களில், துணிக்கடைகளில் உள்ள ட்ரையல் அறைகளில், ஓட்டலில் தங்கும் அறைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒருவர் போனில் பேசும்போதே அது தானாகவே ரெகார்ட் ஆகும் தொழில்நுட்பங்களும், பேசும்போதே அதை குழந்தைக் குரலில், ஆண், பெண், வயதான பாட்டி தாத்தா குரலில் பேசுவதைப் போல குரல் மாற்றம் செய்யும் ஆப்களும் வந்துவிட்டன.
இணையத்தில் ஏராளமான ஆப்கள் கொட்டிக் கிடக்கின்றன. புகைப்படங்கள், எழுத்துக்களை, குரல்களை வைத்தே அவற்றை வீடியோவாக மாற்றவும், முகத்தை மாற்றவும், குரலை மாற்றவும் செய்ய முடிகிறது. அதிகம் படிக்காத மக்கள்கூட அவற்றை அநாயிசமாக பயன்படுத்துகிறார்கள்.
நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் லீக் ஆவது ஒருபுறம் இருக்க, நாமே நம்மைப் பற்றிய தகவல்களை வலிந்து பொதுவெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறோம்.
கண்ணாடிக் கூண்டுக்குள் நாம் பயணிக்கிறோம். சின்ன கல் விட்டு எறிந்தால்கூட அது நம்மை சிதைத்துவிடும் என்பதை உணர்ந்து, நம்மை நாம் பாதுகாப்போம். பின்னர் பிற கண்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து சிந்திப்போம்.
– காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜூலை 11, 2018