என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம்.
எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகங்களா…’ என அதிசயிக்க… நான் புத்தக ஷெல்ஃப் எப்படி இருக்க வேண்டும் என்ற மாடலுக்காக ‘இதோ இந்த ஷெல்ஃபை பாருங்க….’ என்று நான் எழுதிய புத்தகங்களுக்காக பிரத்யேகமாக வைத்திருந்த ஷெல்ஃபை காண்பித்தேன்.
அவர் அந்த ஷெல்ஃபின் அருகில் சென்று அதிலுள்ள புத்தகங்களின் பெயர்களை வாசித்தார்.
‘Easy Way to learn C Language என்ற புத்தகத்தைக் காண்பித்து, இந்தப் புத்தகம் உங்களிடம் கிடைக்குமா… என் மகன் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படிக்கிறான். அவனுக்கு சி லேங்குவேஜ் கஷ்டமா இருக்குனு சொல்றான்… அதான் ஏதாவது புத்தகம் வாங்கிக்கொடுக்கலாம் என்று கேட்கிறேன்…’ என்றபோது ‘சார், இந்த ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்கள் அனைத்துமே நான் எழுதியவைதான்… நிச்சயம் நீங்கள் கேட்ட புத்தகத்தைக் கொடுக்கிறேன்…’ என்று சொல்ல அவர் கண்களில் பளீரென் ஒரு மின்னல்.
கை கூப்பி வணங்கி ‘அம்மா நீங்கள் சரஸ்வதி தேவி அருள் பெற்றவர்… இத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க… இது எத்தனை பெரிய சாதனை? நீங்கள் எத்தனை பெரிய எழுத்தாளர்… எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுங்க மேடம்…’ என கண்களில் கண்ணீர் வராத குறையாக பேசிக்கொண்டே பத்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டினார்.
நான் இடைமறித்து, அவர் எத்தனை வருடங்கள் கார்பென்டர் துறையில் இருக்கிறார்… எத்தனை குழந்தைகள்… என பேச்சை திசை திருப்பினேன்.
‘எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகன் பி.சி.ஏ முதலாம் ஆண்டு. மகள் எம்.பி.ஏ படிச்சுட்டு ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் வேலை செய்கிறாள். மனைவி வீட்டை கவனித்துக்கொள்கிறாள்…
நான் 25 வருடங்களுக்கு மேல் கார்பென்டரா இருக்கேன். 10-வது படிச்சுட்டு எடுபிடியா வேலை செய்து… கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ எனக்குன்னு ஒரு ஷாப். என்கிட்ட 4 பேர் வேலை செய்யறாங்க…’ என்றவரிடம் ‘உங்கள் 25 வருட அனுபவத்தில் இதுபோல எத்தனை விதமான மரவேலை செய்திருப்பீர்கள்…’ என கேட்டேன்.
’சரியா கணக்குத் தெரியலை மேடம்… நிறைய செய்திருக்கிறேன்….ஏன்னா அதுதானே என் வேலையே…’ என்று பதில் சொன்னவரை பார்த்துப் புன்னகைத்தேன்.
‘நான் எழுதியவை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களே… நீங்கள் செய்ததோ எண்ணற்றவை… அப்போ யார் பெரியவர் சொல்லுங்கள்…’ – இது நான்.
‘மேடம் உங்களுடையது அத்தனையும் அறிவு…’ இது கார்பென்டர்.
‘சார் உங்களுடையது அத்தனையும் உழைப்பு…’ – இது நான்.
அவர் பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி நின்றிருந்தார்.
நான் தொடர்ந்தேன்.
‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்பென்டர், டிரைவர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும்.
ஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்.’ என்று விளக்கமாகச் சொல்லி அவர் கேட்ட புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். பின்னர், அவர் செய்ய வேண்டிய வேலைக்கான அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து வவுச்சரில் சைன் வாங்கினேன்.
ஆனால் கடைசிவரை ஆட்டோகிராஃப் போடுவதற்காக அவர் நீட்டிய 10 ரூபாய் நோட்டை வாங்கவே இல்லை.
அவர் புரிந்துகொண்டார். மறுநாள் மகிழ்ச்சியுடன் அவர் மகனை அழைத்து வந்தார். அவர் வாங்கிச் சென்ற புத்தகத்தை என்னிடம் தந்து என் கைகளால் அவர் மகனிடம் கொடுத்து ஆசிர்வதிக்கச் சொன்னார்.
ஆட்டோகிராஃப் போடுவதை விட இது இயல்பாகப் படவே அவர் விருப்பப்படி செய்தேன்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
அக்டோபர் 23, 2018
தினசரி டாட் காமில் லிங்க்… https://dhinasari.com/education/59616-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html
தொடரும்…
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் அக்டோபர் 30, 2018