சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன். வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு நகர அப்பா அம்மா முன்னே சென்று அமர என் கையைப் பிடித்து இழுத்து பக்கத்து நாற்காலியில் அமர வைத்தார் ஒரு பாட்டி.
முதலில் என் ஆஃபீஸ் பற்றி விசாரித்தவர் அடுத்து தன் வீட்டு விஷயங்களைப் பகிர ஆரம்பித்தார். நானும் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தேன். இதைப் பார்த்த அக்கம் பக்கம் உட்கார்ந்திருந்த பாட்டி தாத்தாக்களும் ‘செளக்கியமா’ என கேட்டபடி என்னைச் சுற்றி அமர சில நிமிடங்களில் வழக்கம் போல கோகுலத்தில் கண்ணன் கோபியர்கள் புடைசூழ இருப்பதைப்போல என்னைச் சுற்றி தாத்தா பாட்டிகள்.
சிறு வயதில் இருந்தே என்னுடன் படிப்பவர்களைவிட அவர்கள் அப்பா அம்மாவும் தாத்தா பாட்டிகளுமே எனக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.
காரணம்… என் அமைதி. அதிகம் பேசாமல் அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் பண்பு. சில சமயங்களில் அவர்கள் வயதுக்கு ஈடாக கருத்துக்களை முன் வைக்கும் சுபாவம்.
இவற்றினால் ஈர்க்கப்படும் பெரியோர்கள் என்னை உதாரணம் காட்டி தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் பேச, எனக்கு என் வயதை ஒத்த நண்பர்களே மிக மிகக் குறைவாகிப் போனது.
அதற்குள் மற்றொரு தாத்தா எனக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்து ‘அம்மா எனக்கு ஒரு சந்தேகம்… இந்த மொபைல்ல ஒரு மேசேஜ் மட்டும் அனுப்பத் தெரிகிறது… ஒரே மெசேஜை பலருக்கு எப்படி அனுப்பறதுன்னு கொஞ்சம் சொல்லறியாம்மா… ஏன்னா என் பெண், பையன் எல்லோருக்கும் ஏதேனும் அனுப்பனும்னா தனித்தனியா அனுப்ப வேண்டி இருக்கு…’ என கேட்க அவருக்கு சந்தேகத்தை விளக்க ஆரம்பித்தேன்.
அதற்குள் இன்னொரு நடுத்தர வயது பெண்மணி மற்றொரு நாற்காலியை நகர்த்திப் போட்டுக்கொண்டு நான் என்ன சொல்கிறேன் என கேட்க ஆரம்பித்து, ‘ஃபேஸ்புக்குல நம்ம புரொஃபைல் போட்டோவை யாரும் ஷேர் பண்ணாம இருக்க என்ன செய்யணும்?’ என்று அவரது மொபைலை என்னிடம் நீட்டினார்.
அவரது சந்தேகத்துக்கான விளக்கம் கொடுத்து முடிவதற்குள் ஒரு வயதான தம்பதிகள் ரொம்ப கஷ்டப்பட்டு என்னிடம் வந்து தலையைக் குனிந்து ஏதோ சொல்ல ஆரம்பித்தனர். மண்டபத்தின் சத்தத்தால் அவர்கள் பேசியவை எதுவுமே என் காதில் விழவில்லை. நான் எழுந்து நின்று அவர்கள் சொல்வதைக் கேட்டேன்.
‘என் மாட்டுப் பொண் எம்.சி.ஏ படிச்சுட்டு வேலைக்குப் போயிண்டிருந்தா… இப்போ அந்த கம்பெனில ஏதோ பிரச்சனை. நிறைய பேரை வெளில அனுப்பிட்டா… உன் கம்பெனில ஏதேனும் வேலை இருக்குமா…’
அவர்களுக்கு பதில் கொடுத்து விட்டு உட்கார்வதற்குள் ஏற்கெனவே சந்தேகம் கேட்டவர்கள் தொடர ஆரம்பித்தனர்.
இதற்குள் என் வயதை ஒத்த இரண்டு உறவினர்கள் என்னைச் சுற்றி நாற்காலியை போட்டு அமர்ந்து ‘இப்போ எனக்கு டைம் எப்படி இருக்குன்னு பார்த்துச் சொல்லேன்..’ என உள்ளங்கையை என் முன் நீட்ட அவர்களுக்கு ரேகை பார்த்து அவர்கள் ராசி நட்சத்திரம் கேட்டு ஒப்பிட்டு பலன் சொல்லிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை.
திடீரென என்னைச் சுற்றி உள்ள உறவுகள் தம்பதிகளை நமஸ்கரிக்கவும் மொய் எழுதவும், சாப்பிடவும் கலைந்து செல்ல நான் மட்டும் தனியாக ஒரு சேரில் ‘ஜென்’ மனநிலையில்.
என் அப்பா அம்மா என்னை கூப்பிட அவர்களுடன் சென்று தம்பதிகளை நமஸ்கரித்து சாப்பிடச் சென்றேன்.
வீடு திரும்பியதும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவந்த மனநிறைவே இல்லை. காரணம் என் பணி கணினி சார்ந்தது என்பதும், எனக்கு ஓரளவுக்கு ஜோதிடம் தெரியும் என்பதும் என் உறவுகளில் பலருக்கும் தெரிந்த விஷயம். இதன் காரணமாய் நான் எங்கு சென்றாலும் கணினி, மொபைல் சார்ந்த தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டுக்கொண்டும், என்னிடம் ஜாதகம் பற்றி பேசிக்கொண்டும் என் முழு நேரமும் மற்றவர்கள் கைகளில்.
இத்தனைக்கும் தொழில்நுட்பச் சந்தேகங்கள் கேட்கின்றவர்கள் வீட்டில் பி.ஈ, எம்.பி.ஏ, பி.டெக் முடித்த ஜாம்பவான்கள் ஐடி துறையிலேயேதான் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அவர்களிடம் சந்தேகம் கேட்டால் சொல்லித் தருவதில்லை, அவர்களுக்கு நேரம் இல்லை, பொறுமை இல்லை என ஏதேதோ காரணங்கள்.
விருந்தினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதே அன்றாட ரொடீன்களில் இருந்து மாறுபட்ட சூழலில் சில மணிநேரங்கள் செலவிடவே. அங்கு சென்றும் அதே அலுவலகச் சூழல் என்றால், என்னதான் ‘என்னை விட பெரியவர்கள் எனக்கு நட்பு என்பதில் எனக்கு சற்றே பெருமை’ என்றாலும் எனக்கும் எனக்கான நேரம் தேவையாகத்தான் உள்ளது.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சந்தர்பங்களில், டாக்டர்களை பார்த்தால் தங்கள் உடல் உபாதைகள் பற்றிப் பேசுவதையும் வக்கீல்களைப் பார்த்தால் தங்கள் லீகல் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்பதையும் அக்கவுண்டிங் துறை வல்லுநர்களைப் பார்த்தால் அது சம்மந்தமான சந்தேகங்களை எழுப்புவதுமான செயல்களினால் அவர்களின் நேரத்தை நாம் வீணடிக்கிறோம் என்ற உணர்வு வர வேண்டும்.
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க முயற்சிப்போமே. பாசத்தைப் பகிர்வோமே!
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
நவம்பர் 27, 2018
தினசரி டாட் காமில் லிங்க்… https://wp.me/p5PAiq-fSM
தொடரும்…
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் நவம்பர் 27, 2018