ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்
சூரியன் பதிப்பகம்: 044-42209191, 7299027361
பெய்ஜிங்கில் மூன்று நாள்களும், குஆங் ஜோவ்வில் மூன்று நாட்களும் இருந்தேன்,சுற்றினேன், எந்த இடத்திலும் உடன் வந்த நண்பர்கள் பர்சைத் திறக்கவில்லை. மாறாக செல்போனை எடுத்து நீட்டினார்கள். டாக்சி, உணவு விடுதி, மால் என்று எல்லா இடங்களிலும் QR Code ஒட்டப்பட்டிருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால் போதும். ரொக்கம் கொடுக்க வேண்டியதில்லை. Cashless Economy…
சரி சாலையோர சிறு வியாபாரிகள் என்ன செய்கிறார்கள்?
பெய்ஜிங்கில் கன்பூசியஸ் தோட்டத்திற்கு வெளியே ஒரு மூதாட்டி ஒரு சிறு தள்ளு வண்டியில் தின்பண்டங்கள், குடி தண்ணீர், குளிர்பானங்கள், சிறு குழந்தைகளை ஈர்க்கும் காற்றாடி இவற்றை விற்றுக் கொண்டிருந்தார். அது போன்ற மூதாட்டிகளை நீங்கள் நம்மூரிலும் சந்தித்திருகக் கூடும். என் பள்ளிக்கூட வாசலில் கொடுக்காபுளி, நெல்லிக்காய், மாங்காய்த் துண்டம், கடலைமிட்டாய் இவற்றைப் பரப்பி விற்றுக் கொண்டிருக்கும் அவர்களை நான் என் சிறு வயதில் கண்டிருக்கிறேன்
நான் அந்த மூதாட்டியிடம் ஒரு கோகோ கோலா பாட்டில் வாங்கினேன். 7 யுவான். சிறு தொகைதான். அங்கும் என் நண்பர் வான்மதி செல்போனை எடுத்து நீட்டினார். அங்கும் QR Code வைக்கப்ப்பட்டிருந்தது!
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அங்கு அடித்தளம் வரை பரவிவிட்டது.
இங்கு?
எதிர்ப்பிற்குக் காரணம் அக்கறையா? அரசியலா?
இப்படி தன் சீனப் பிரயாண அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார் ஒரு பத்திரிகையாளர்.
இந்தப் பதிவைப் பார்த்ததும் குறிப்பாக ‘இங்கு எதிர்ப்பிற்குக் காரணம் அக்கறையா அல்லது அரசியலா?’ என்ற வரியை படித்ததும்….எனக்கு சில விஷயங்களை பகிரத் தோன்றியது.
2016 ஆம் ஆண்டு…
இதுபோன்ற ஒரு நவம்பர் மாதத்தில்…
நம் பாரதப் பிரதமர் அறிவித்த டிமானிடைசேஷனுக்குப் பிறகு…
டிஜிட்டலைசேஷன், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்து ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை ஒன்றில் என்னை ஒரு கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருந்தார்கள்…
Internet of Things, Big Data, Nano Technology, Robatics, Quantum computing, Bio Technology, 3D printing, Artificial Intelligence என அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தொழில்நுட்பப் புரட்சி, டிஜிட்டலைசேஷன் மற்றும் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை என அத்தனையையும் அனைவருக்கும் புரியும்படி எழுதி இருந்தேன்… மிக விரிவாக.
அத்தனையும் பாசிடிவ் விஷயங்கள்…
அதைப் படித்துப் பார்த்த அவர்கள் எனக்கு போன் செய்து நாங்கள் எதிர்பார்த்தது டிஜிட்டலைசேஷன் மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்த நெகடிவ்களை / பாதகங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே கட்டுரை கேட்டோம் என என்றார்கள். அதற்கேற்றாற்போல மாற்றித்தாருங்கள் என்றார்கள்.
அவர்கள் சுற்றி வளைத்து எதைச் சொல்ல வந்தார்கள் என நான் புரிந்துகொண்டு,
நான் சுற்றி வளைக்காமல் நேரடியாக, ‘மத்திய அரசை எதிர்த்து இந்தக் கட்டுரை அமைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கட்டுரையை பிரசுரம் செய்ய வேண்டாம்… என்னால் நீங்கள் சொல்கிறபடி மாற்றி எழுதித்தரவும் மனமில்லை’ என்று சொன்னதோடு அவர்களுக்கு புரிய வைக்கவும் முயன்றேன்.
‘ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை, ஆதார் போன்றவை இன்று ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் எதிர்காலத்தில் உலகத்துடன் ஒன்றவும் முன்னணியில் இருக்கவும் அவைதான் அடித்தளம்…’ என்று தொடங்கி விரிவாக 10 நிமிடங்களுக்கு அவர்களுடன் பேசினேன்.
கட்டுரை வெளியாகவில்லை.
ஆனால் அதன் அடிப்படையில்…
ஸ்மார்ட் போனில் பணத்தாள் இல்லாத பரிவர்த்தனையை வலியுறுத்தும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக…
எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ என்ற புத்தகத்தை எழுதினேன்.
2017 புத்தகக் கண்காட்சியில் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக தயார் செய்தேன்.
திரு. இல. கணேசன் அவர்கள் மிகப் பொருத்தமாக அணிந்துரை எழுதிக்கொடுக்க வெற்றிகரமாக இந்தப் புத்தகம் அழகான லே அவுட்டில், ஏராளமான விளக்கப் படங்களுடன் மல்டிமீடியா புத்தகம் போல வெளியானது.
இந்தப் புத்தகத்தை படித்தால், இதிலுள்ள படங்களைப் பார்த்துப் பார்த்தே அத்தனையையும் அனைவரும் கற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைத்தேன். (நான் எழுதும் எல்லா புத்தகங்களும் அதே பாணியில் அமைந்தவைதான்).
சூப்பர் ஹிட் ஆனது – என் ஐடியாவும், நான் எழுதிய இந்தப் புத்தகமும்.
நான் நினைத்ததைவிட… எதிர்பார்த்ததைவிட… நிறைய பேரை சென்று சேர்ந்தது.
இப்போது வரை… இந்தப் புத்தகம் சேல்ஸிலும் வெற்றி நடைப் போடுகிறது.
பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கும் இந்தப் புத்தகத்தை அனுப்பி அவருடைய கவனத்துக்கும் கொண்டு சென்றேன்.
காம்கேர் மூலம் நான் பெற்றுவரும் அனுபவத்தையும், கற்ற கல்வி மூலம் நான் பெற்ற அறிவையும் பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் தேவை எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கொண்டு செல்வதில் பெருமகிழ்ச்சி.
இதைவிட பெறும்பேறு வேறொன்றுண்டா?
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
திரு. இல. கணேசன் அவர்களின் புத்தக மதிப்புரை
உலகத்தின் தலை சிறந்த அறிஞர்களெல்லாம் பாரதத்தில் உதித்துள்ளார்கள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நம் நாட்டு கல்வி முறை, கற்றறிந்தவர்களை உருவாக்கியது. ஆங்கில கல்வி வந்த பிறகு, அந்த முறையில் படித்தவன்தான் அறிஞன் என்றும், படித்தவன் என்பதற்கு ஆங்கிலம் படித்தவன் என்றும் பொருள் வந்தது. மற்றவர் எந்தத் துறை வல்லவன் ஆனாலும், மக்கள் பார்வையில் படிக்காதவன்தான். இன்றைய காலம் வேறொரு மாற்றத்தை தந்துள்ளது. கணினி பயிற்சி உள்ளவனே கற்றறிந்தவன். கண் இரண்டும் கணினிபயிற்சி இல்லையேல் புண்களே!
இது தொலைபேசி யுகம். தொலைபேசி இல்லாதவரே இல்லை. பலரிடம் 2 தொலைபேசிகள். இதில் பெருவாரியானவர்களுக்கு அழைக்கவும், வந்த அழைப்பை ஏற்கவும் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தி பார்க்கவும் பகிரவும் பதிலளிக்கவும் மட்டுமே தெரியும். “உலகம் உன் கையில்” என்பதற்கு பொருள் கையடக்க கைபேசியில் என ஆகிவிட்டது.
அலைபேசியில் அடங்கியுள்ள அரிய விஷயங்களை எளிமையாக நமக்கு புரிய வைக்கும் முயற்சியாக “ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்” என்கிற தலைப்பில் ஒரு பயனுள்ள புத்தக்தை காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதியுள்ளார், இவர் ஏற்கனவே 100 புத்தகங்கள் எழுதியவர்.
பணத்தாள் இல்லாத பரிவர்த்தனையை வலியுறுத்தும் பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் கனவை நனவாக்க இந்தப் புத்தகம் உறுதுணை புரியும். புத்தக ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
இல.கணேசன், MP
தேசிய செயற்குழு உறுப்பினர்
பாரதிய ஜனதா கட்சி
செப்டம்பர் 2017