ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன்.
அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம்.
அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர்.
40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு இரவு ஷிஃப்ட் என்பது பொதுவாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்திலேயே 24 மணிநேர பணிச் சுழற்சியில் பணியாற்றி எங்களுக்கெல்லாம் முன் உதாரணமானவர்.
அம்மா அப்பா இருவரின் பணியுட மாற்றம் காரணமாய் பல்வேறு ஊர்களில் வசிக்கும் அனுபவம். எந்த ஊரில் எங்கிருந்தாலும் அடுத்த ஒரு மாதத்தில் வீட்டில் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, பவழமள்ளி, ரோஜா, செம்பருத்தி, இன்சுலின் செடி, நிலவேம்பு செடி, வெப்பம் செடி, சோற்றுக்கற்றாழை, மணிப்ளாண்ட், பாகற்காய் கொடி, பச்சைமிளகாய், பிரண்டை என இருக்கின்ற இடைவெளிகளில் எல்லாம் செடி கொடிகள் வந்துவிடும்.
சமையல் அறை முழுவதும் இயற்கை உணவுப் பொருட்கள், நாட்டு மருந்துகள், வீட்டு வைத்தியம் என வீடே சொர்க்கம்தான்.
இவை எல்லாவற்றையும்விட ஒரு பெரிய சிறப்பு அம்மாவிடம் உண்டு. ஆம். அம்மா ஆகச் சிறந்த படிப்பாளி. நிறைய படிப்பார். படிப்பதில் பிடித்ததை கட் செய்துவைப்பார். எங்கள் கைகளால் அப்பாவுடன் அமர்ந்து பைண்டிங் செய்வதுதான் அந்தக் காலத்தில் எங்கள் பொழுதுபோக்கே.
கல்கி, ஜெயகாந்தன் புத்தகங்கள் முதல் சமகால இலக்கியம் வரை கிடைக்கும் இடங்களில் எல்லாம் புத்தகங்கள். மளிகை சாமான் கட்டிவரும் பேப்பரில் உள்ள செய்திகளைக் கூட விட மாட்டார். படித்துவிடுவார்.
படிப்பது மட்டுமல்ல, சேகரிப்பது, தேவைப்பட்டால் குறிப்பெடுப்பது அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு கேட்ட நேரத்தில் தகவல்களைச் சொல்வது என அம்மா ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா.
இப்போது அம்மா பிளாக், ஃபேஸ்புக், இமெயில், கிண்டில் புத்தகங்கள் என தொழில்நுட்ப ரீதியாக எல்லாவற்றிலும் UPDATE.
ஆனால் அம்மா ரொம்ப ரொம்ப எளிமை. கல்யாணத்துக்குச் சென்றாலும், ஆஃபீஸுக்குச் சென்றாலும் ஒரே மாதிரி பாணியில்தான் ஒப்பனை. ஆகச் சிறந்த அறிவாளி. ஆனால் அறிவாளித்தனம் ஆடையில் வெளிப்படாது. பேச ஆரம்பித்தால் அருவியாய் கொட்டும்.
இதையெல்லாம் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது.
பரிசோதனையும், தேவையான மருத்துவமும் முடிந்தபிறகு மருத்துவர் பல் சம்மந்தமான விவரக் குறிப்புகள் அடங்கிய ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் ஷீட்டை அப்பாவிடம் கொடுத்தார்.
அம்மா வாயில் பஞ்சு இருந்ததால் அவரால் பேச முடியலை. ஆனால் அம்மாவுக்குத்தான் காகிதத்தைப் பார்த்து விட்டால் கையும், மனசும் பரபரக்குமே… ‘என்னிடம் கொடுங்கள்’ என கைகளை அசைத்துக் கேட்க, மருத்துவர் ‘அந்த ஷீட்டில் உள்ளவை ஆங்கிலத்தில் பிரிண்ட் ஆகி இருக்கு…’ எனச் சொன்னார்.
அம்மா ஒன்றும் சொல்லாமல் முக பாவனையையும் மாற்றிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார், கொஞ்சம் டென்ஷனான என்னையும் அமைதியாக இருக்கச் சொல்லி சைகை காட்டினார்.
ரிசப்ஷனுக்கு வந்து மருத்துவ கட்டணம் செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த மருத்துவர் எங்களை கடந்து சென்றார். எங்களைப் பார்த்து, ‘3 மாதங்களுக்குப் பிறகு புதிதாக ஒரு பல் கட்டிக்கொண்டால் மேலுள்ள பல் கீழ் இறங்காது…’ எனச் சொன்னார்.
அம்மா ஏதோ நினைத்துக்கொண்டவராய் ஒரு பேப்பர் வாங்கி அதில் ‘I will goto USA for a short trip to attend a family function at my daughter’s house… I will Back to chennai after 6 months…’ எனத் தொடங்கி ஆறுமாதம் கழித்து வருகிறேன் என்று தன் அழகான கையெழுத்தினால் எழுதிக்காட்ட அந்த டாக்டர் முகம் வெளிறிப் போனது.
அம்மாவின் எளிமையைப் பார்த்து அவருக்கு ஆங்கிலம் தெரியாது என தானாகவே ஒரு கற்பனையை செய்துகொண்டு அவர் பேசியவை உறுத்தலாய் அவர் முகத்தில்.
எளிமையாக இருந்தால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது, ஆங்கிலம் தெரியாது, தொழில்நுட்பம் தெரியாது என அவரவர்கள் தானாகவே நினைத்துக்கொள்வது ஒரு மாயை.
இதுபோன்ற குறைவான / மிகையான மதிப்பீடுகள் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆண்களுக்கும் உண்டு. அவை குறித்தும் பேச இருக்கிறேன்.
மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்போமே. அவர்களின் உடையை வைத்து, தோற்றத்தை வைத்து, வைத்திருக்கும் வாகனத்தை வைத்து எடைபோடுவது தவறு என்பதை நாம் உணர வேண்டும். குறைத்துக்கொள்ளலாமே.
எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்!
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 4, 2018
தினசரி டாட் காமில் லிங்க்… https://wp.me/p5PAiq-fXt
தொடரும்…
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் டிசம்பர் 4, 2018